நம் உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாவதற்கு போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். அத்தகைய இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.
கீரைகள் :
நமது அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் இருக்கவேண்டுமானால் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புதினாக் கீரை மற்றும் அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.
வேர்க்கடலை வெண்ணெய் :
வேர்க்கடலை வெண்ணெய் சைவ உணவு வகைகளில் மிகவும் சத்தான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உடலை பலமாக்கும். தினமும் இதனை உணவிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. வேர்க்கடலையானது ஏழைகளின் முந்திரி என்றழைக்கப்படுகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். 100 கிராம் வேர்க்கடலை வெண்ணெய் 25% புரதங்கள் மற்றும் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது.
பீட்ரூட் :
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். முந்தைய நாள் இரவில் ஒரு பீட்ரூட்டை இரண்டாக வெட்டி அதை நீரில் போட்டு வைக்க வேண்டும். இந்த நீரை காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ரூடை பிரெஷ் ஜூஸ் ஆக செய்தும் அருந்தலாம்.
உருளைக்கிழங்குகள் :
உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால் தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து வாருங்கள். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க துணை புரிகிறது. மேலும் இது உடலில் இரும்புச்சத்து உறுஞ்சுதலை அதிகரிக்கிறது.
முட்டைகள் :
முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பல சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும். ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
நட்ஸ் :
நட்ஸ் எனப்படும் அக்ரூட் கொட்டைப் பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் நட்ஸில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.
மாதுளை பழம் :
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். ஒரு மாதுளைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்னை ஏற்படாது. காலை உணவுடன் சேர்த்து ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடிகலாம். அல்லது காய்ந்த மாதுளை விதை பொடியை 2 டீஸ்பூன் எடுத்து, அதனை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
தேன் :
தேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும். தினமும் உணவில் 100 கிராம் தேன் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை விரைவில் குணம் ஆகும். மேலும் ஏதாவதொரு பானத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம் .
பேரிச்சம்பழம் :
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். மேலும் இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன், உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. இவைகள் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை கண்டிப்பாக உண்ண வேண்டும். மேலும் கேக்குகள், ப்ரௌனீஸ் மற்றும் பல இனிப்பு பண்டங்களில் ஆப்பிளை சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்தும் அருந்தலாம்.