விசுவாமித்திரர் வருகை :
ஆற்றுவரியாக இயங்கிய தசரதன் வாழ்க்கை புயலையும் இடியையும் சந்திக்க நேர்ந்தது. மக்களைப் பெற்று மனைநலம் பெற்றிருந்த மன்னன், அவர்களைப் பிரியும் சூழல் உருவாகியது. விசுவாமித்திரர் “ராஜரிஷி” என்று பாராட்டப்படுபவர்; அவர் அரசராய் இருந்தவர்;
அவர் தம் அரச பதவியை விலக்கிக் கொண்டு, தவ வேள்விகளைச் செய்து, உயர்பேறுகளைப் பெற்று வந்தார். வேகமும், விவேகமும் அவர் உடன்பிறப்புகள். சினமும் சீற்றமும் அவர் நாடித்துடிப்புகள், அவர் வருகையைக் கண்டாலே மாநில அரசர்கள் நடுங்கினர்; அடுத்து என்ன நேருமோ என்று அஞ்சினர்.
பீடுநடை நடந்து ஏற்றமும் தோற்றமும் தோன்றத் தன் அவைக் களம் அணுகிய அம் முனிவரைத் தசரதன் தக்க வழிபாடுகள் கூறி வரவேற்று அமர வைத்தான். “தாங்கள் எழுந்தருளியதற்கு நாங்கள் மிக்க தவம் செய்தோம்” என்று அடக்கமாய்ப் பேசி, அன்புடன் வரவேற்றான்.
தருகை எது வாயினும் தயங்கேன் :
இருகை வேழம் என விளங்கிய தசரதன், “தருகை எது வாயினும் தயங்கேன்” என்று கூறினான்.கேட்பது எதையும் தருவதாய் வாக்கும் அளித்தான். “யான் கேட்பது பொன்னும் பொருளும் அல்ல; பூவும் வழிபாடும் அல்ல; உன் நன்மகன் இராமன்! அவனை என்னுடன் அனுப்புக” என்றார் முனிவர். கேட்டதை அரசனால் மறுக்க முடியவில்லை.
அதேசமயத்தில் மகனைவிட்டுப் பிரியவும் அவனானல் இயலவில்லை. “அதைத் தவிர வேறு ஏதேனும் கேட்டால் உவப்பேன்” என்றான் “வந்ததே அவனுக்காகத்தான்; தருவேன் என்று கூறியபின் மறுப்பு ஏன்?” என்றார் முனிவர். “துறவிக்கு இவன் எவ்வகையில் உதவுவான்; இவனை மறப்பதற்கு வழி தேடின் நலமாகும்” என்றான் வேந்தன்.
நான் துறவிதான்; அறம் தழைக்க அவனை அழைக்கின்றேன். இழைக்கும் வேள்விகளை அழிக்கும் அரக்கரை ஒழிக்கும் வகைக்கு அவன் வந்து உதவ வேண்டும்” என்றார் முனிவர். “போர்ப் படை காணாத பச்சிளம் பாலகன் என்மகன்; தேர்ப்படை கொண்டு உமக்குத் துணையாக நானே வருகிறேன்” என்றான் வேந்தன்.
“கேட்டது தருவேன் என்றாய்; வேட்டது தருவாய் என்று கேட்டேன்; வாய்மை தவறாத மன்னன் நீ; நீ இப்பொழுது வாய் தவறுகின்றாய்; பாசமும், பந்தமும், உன் மகன்பால் வைத்த நேசமும் உன்னை இழுத்துப் பிடிக்கின்றன; இருதலைக் கொள்ளி எறும்புபோல் உன் நிலைமை ஆகிவிட்டது. மறுத்தலைச் சொல்லும் உன் மாற்றம் வியப்புக்கு உரியது” என்றார் முனிவர்.
நீரினின்று எடுத்துப் போட்ட மீனின் நிலைமையை மன்னவன் அடைந்தான்; எதிர்பாராத சூழ்நிலையில் எது பேசுவது என்பது தெரியாமல் தவித்தான்; “தவிர்க” என்றும் சொல்ல இயலவில்லை; ‘செல்க’ என்று வாழ்த்தி அனுப்பவும் முடிய வில்லை; “முடியாது” என்று முடிவு கூறவும் இயலாமல் தவித்தான்.
வசிட்டர் தசரதனைப் பார்த்து, “உம் பாசம் போற்றத்தக்கது தான்; அதனால் உன் மகனுக்கு நாசம் விளைவித்துக் கொள்கிறாய்; குடத்து விளக்குப்போல் உன் மகனை வளர்க்கிறாய்; அவனைத் தடத்தில் விட்டுத் தழைக்கச் செய்ய வழி விடுக; காற்று வரும்போது தூற்றிக் கொள்வது ஏற்றம் தரும். கல்வி கரையற்றது; கற்க வேண்டியவை இன்னும் உள; படைக் கலம் பயின்ற மாமுனிவன், உன் மகன் கரை ஏறக் கிடைத்த மரக்கலம் என அறிக;
ஆசானாக வந்த அறிஞர் அவர்; அவருடன் அனுப்புக ; அரச முனிவர் ஆதலின் விரசுபடைக் கலன்கள் பல அவரிடம் உள்ளன; அவற்றைத் தக்கவர்க்குத் தரக்காத்து இருக்கிறார்; “உன் மகன் வீரம்மிக்கவன்” என்று தெரிந்தால் அவற்றை அவனுக்கு அளிப்பது அவர் உறுதி; வாய்ப்புகள் வந்துகொண்டே இருப்பதில்லை; அதைத் தவறவிட்டால் வழுக்கி விழ வேண்டுவதுதான். நீர் அவருக்கு உதவுவது எளிது;
அதைவிட அந்த வாய்ப்பை உம் மகனுக்குத் தருவது வலிது. அதனால் அவனுக்குப் புதுப் பயிற்சிகள், முயற்சிகள், வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன. அவனை அனுப்பி விட்டு மறுவேலை பார்; அவனைத் தடுக்க நீர் யார்?” என்று நன்மைகளை எடுத்துக்கூறிச் செல்வதன் நன்மையை அறிவுறுத்தினார்.
நிஜத்தை விட்டுப் பிரியாத நிழல் :
இருள் அகன்றது; ஒளி தெரிந்தது, பாசத்திரை தன் பார்வையை மறைத்திருந்தது. அதை விலக்கிவிட்டு, விழி பெற்றவனாகத் தசரதன் நடந்து கொண்டான்; வழி தவறியதற்கு வருந்தினான்; குருடனாக நடந்துகொண்ட அவன், புத்தொளி பெற்று, மகனை முனிவனுடன் அனுப்பி வைத்தான்.
விசுவாமித்திரர் இராமனைத்தான் கேட்டார்; இலக்குவன் வருவதைத் தடுக்கவில்லை. நிஜத்தை விட்டுப் பிரியாத நிழலாக இளையவன் இலக்குவன், அழைக்காமலே அண்ணன் இராமனைப் பின் தொடர்ந்தான்; முனிவன் முன்னே நடக்க, அவன் பின்னே இவ்விளையவர் இருவரும் தொடர்ந்து நடந்தனர்.
உடன்போதல் :
கூட்டை விட்டுப் பறவைகள் வெளியே பறந்து செல்வதுபோல, நாட்டை விட்டுக் காட்டு வழியே முனிவனுடன் சென்றனர்; மாளிகைகளும், கூடகோபுரங்களும், அசையும் கொடிச் சீலைகளும், அவர்களை வழி அனுப்பின. வானவில்லின் வண்ண நிறங்களும், பிரபஞ்சத்தின் பேரொளியும் அவர்கள் கண்ணைக் கவர்ந்து மகிழ்வு ஊட்டின. காந்தத்தின் பின்தொடரும் இருப்பு ஊசிபோலக் கறுப்புநிறச் செம்மலும் இளவலும் தவ முனிவன்பின் சென்றனர்;
அறிவு நிரம்பிய ஆசானின் அணைப்பில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; புதிய இடங்களுக்குச் சென்று மனதில் பதியும் புதிய காட்சிகளைக் கண்டனர்; அவற்றைக் கண்டு வியப்பும் அறிவும் பெற்றனர்; ஆறுகளையும், சோலைகளையும் கடந்து, வேறுபட்ட சூழல்களைக் கண்டனர்.
இயற்கை எழில் :
அந்தப்புரங்களையும், ஆடல் அரங்குகளையும் கண்டவர் எளிமையும், எழிலும், ஞானப் பொலிவும் நிரம்பிய முனிவர்களின் ஒலைக் குடிசைகளைக் கண்டனர். ஆசிரமங்கள் அவர்களுக்குப் பசும்புல் விரிப்புகளைப் பரப்பி, வரவேற்புச் செய்தன;
காட்டு மரங்கள் காற்றில் அசைந்து அவர்களோடு கவிதைகள் பேசின; மனிதர்களைப் போலவே தாவரங்கள், மரம், செடி, கொடிகள் அவர்களிடத்தில் பாசமும், பரிவும் காட்டின;
விலங்குகளும் தத்தமக்கு உரிய நெறிகளின் படி உலச் செயல்பட்டுத் திரிவதைக் கண்டனர். தேவைக்கு மேல் அவை உயிர்களைக் கொன்று தின்பதில்லை; தேடித் திரிவதுமில்லை;
மனிதன் தேவைக்கு மேல் பொருள் திரட்டுவதைக் கண்டு பழகிய அவர்களுக்கு அம்மிருகங்கள் மதிக்கத்தக்கவையாக விளங்கின. மாந்தர்விடும் மூச்சில் கலந்துள்ள அசுத்தங்களைத் தாம் வாங்கிக் கொண்டு காற்றைத் தூய்மைப்படுத்தி உதவும் தாவரங்களின் உயர்வை அறிய முடிந்தது.
தீமை செய்பவர்க்கும் தாம் உள்ள அளவும் நன்மை செய்யும் நல்லியல்பு அவற்றிடம் காண முடிந்தது. தம்மை வெட்டிக் கீழே சாய்க்கும் முரடனுக்கும் காயும், கனியும் நறுநிழலும் தந்து உதவும் செடி அவற்றின் உயர்வைக் காணமுடிந்தது. பூத்துக் குலுங்கும் பூவையரின் எழிலையும் பொலிவையும் கொடிகளிடம் முழுமையாகக் காண முடிந்தது.
காமாசிரமம் :
சரயூநதிக் கரையில் சஞ்சரித்த அவர்கள், பசுமையான சோலை ஒன்றனைக் கண்டனர். அதில் தவசியர் வசிக்கும் குடில்கள் மிக்கு இருந்தன. அம் முனிவர் இவர்களைக் கண்டதும் பேருவகை அடைந்தனர்; வரவேற்பும், உண்டியும், இடமும் தந்து உபசரித் தனர்; எழில்மிக்க பொழில்கள் சூழ்ந்த ஆசிரமத்தில் இரவுப்பொழுதைக் கழித்தனர். பொழுது புலர்ந்தது; அந்த ஆசிரமம் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.
அதன் ஆதி அந்தத்தைக் கேட்டு அறிய அவாவினர். அதன் பெயரே புதுமையாய் இருந்தது. ”காமாசிரமம்” என அது வழங்கப்பட்டது. காமத்தை ஒழித்து, ஏமநெறி காணும் முனிவர்கள், தாம் வாழும் இடத்துக்கு இப் பெயர் சூட்டியுள்ளமை வியப்பைத் தந்தது. “இதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும்” எனக் கருதினர். ஆரணவேதியனை அணுகி, “இப்பெயர் இதற்கு அமையக் காரணம் யாது?” என்று வினவினர்.
பெயர்க் காரணம் :
“மலரம்புகளை விட்டு மற்றவரை எரிக்கும் காமன் இங்கே எரிபட்டான்; அதனால், இந்த இடம் ‘காமாசிரமம்’ என வழங்கலாயிற்று” என்றார். “காமன் கூடவா தவம் செய்ய இங்கு வந்தான்?”. “செய்கிற தவத்தைக் கெடுக்க அவன் அம்புகளைத் தொடுக்க, அது சிவன் மேல்பட, அவர் சினந்து எரிக்க, அவன் சாம்பல் ஆனான்” என்று கூறினார். “மதன் மதம் அழிந்து, அவன் அதம் தீர்ந்து, அழிந்து ஒழிந்தான்” என்பதைக் கேட்ட இவர்கள், “ஆழம் தெரியாமல் காலைவிட்டால் இந்தக் கதிதான் நேரும் என்று பேசிக் கொண்டார்கள்.
“மன்மதன் எரிந்து விட்டானா?” என்று இளையவன் கேட்டான். “எரிந்தாலும் அவன் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்” என்று முனிவர் விடை தந்தனர். இந்தக் கதை கேட்பதற்குச் சுவையாக இருந்தது. காணும் இடம் எல்லாம் அது கதைகளைப் பெற்றிருந்தது.
முனிவர்களின் அற்புதங்கள் சொற்பதங்களாகப் பேசப்பட்டன. இதைப் போலவே காணும் காட்சிகள், செல்லும் இடங்கள், கடக்கும் ஆறுகள், தங்கும் சோலைகள் இவற்றின் பெயர்களையும் வரலாறுகளையும் கேட்டு அறிந்தனர்; நடை வருத்தம் மறந்தனர்.
வெப்பம்மிக்க பாலை நிலம் :
அவர்கள் கடக்கும் வழியில் வெப்பம்மிக்க பாலை நிலம் ஒன்று குறுக்கிட்டது. அறம் சாராதவர் மூப்புப் போல் அது அழிவைப் பெற்று இருந்தது. குடிக்க நீரும், உண்ண உணவும், தங்க நிழலும் கிடைக்காத கொடிய காடாக இருந்தது. காட்டு விலங்குகளும் அந்த மேட்டு நிலத்தில் நடப்பதைத் தவிர்த்தன.
அதன் வெப்பம் தாங்க வொண்ணததாய் இருந்தது. அதை நீக்கும் செப்பம் தேவைப்பட்டது. மாமுனிவன் உபதேசித்த மந்திரங்களைச் சொல்லி, இவர்கள் பசியும் நீர் வேட்கையும் நீங்கினர். சுற்றுப்புறம் வெம்மை நீங்கித் தண்மை அளித்தது. “அம்மந்திரம் பிரம்ம தேவனால் விசுவாமித்திரருக்கு அளிக்கப்பட்டது” என்பதைக் கேட்டு அறிந்தனர்.