பொதுவாக சருமத்தில் ஏற்படும் வறட்சிக்கு நீர்க்குறைவு மட்டுமின்றி, அதிகப்படியான காற்றும், அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதும் தான் காரணம். இத்தகைய பிரச்சனை குளிர்காலங்களில் மட்டுமின்றி, கோடைகாலத்திலும் தான் ஏற்படும். அதிலும் அடிக்கடி வேலையின் காரணமாக வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் அதிகப்படியான சூரியக்கதிர்கள் படுவதால், சருமத்தில் உள்ள நீர்ச்சத்தானது குறைந்து, இறுதியில் வறட்சியை உண்டாக்குகிறது.
இயற்கை முறை :

இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு உணவுகள் மட்டுமின்றி, ஒருசில சரும பராமரிப்புகளையும் மற்றும் சில பழக்கவழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். இதனால் நிச்சயம் சரும வறட்சியைப் போக்கலாம். ஆனால் சிலர் சரும வறட்சியைப் போக்குவதற்கு, கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி தற்காலிகமாகத் தான் நீங்குமே தவிர, வாழ்நாள் முழுவதும் இருக்காது.
ஆகவே வறட்சியை முற்றிலும் நீக்குவதற்கு, செயற்கை முறைகளை பின்பற்றாமல், ஒருசில இயற்கை முறைகளையும், செயல்களையும் பின்பற்றினாலே, வறட்சியை சூப்பராக, எந்த ஒரு கஷ்டமுமின்றி, நீக்கிவிடலாம்.
தண்ணீர் :

வறட்சியைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழி அதிகப்படியான தண்ணீர் குடிப்பது தான். அதிலும் தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் உள்ள வறட்சியைப் போக்கலாம். ஆனால் இவற்றை விட அதிகம் குடிப்பது இன்னும் நல்லது.
பேபி லோஷன் :

சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்குவதில் சிறந்தது பேபி லோஷன் தான். ஏனெனில் குழந்தைகளுக்கு தயாரிக்கும் பேபி லோஷனில் கெமிக்கல் அதிகம் இல்லாததால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.
பால் :

அக்காலத்தில் மகாராணிகள் அனைவரும் அழகாக காணப்படுவதற்கு காரணம், பால் குளியல் மேற்கொள்வது தான். இதனால் உடல் அழகாக காணப்படுவதோடு, வறட்சியின்றியும் இருக்கும். எனவே தினமும் குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில், பாலை ஊற்றி, குளிக்க வேண்டும்.
தேன் :

தினமும் குளிக்கும் முன், தேனை உடலில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் :

வறட்சியான சருமத்தை போக்குவதில் தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. எனவே தினமும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி ஊற வைத்து, காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
பாதாம் எண்ணெய் :

வெதுவெதுப்பான பாலில் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி உறங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.
நல்லெண்ணெய் :

கடைகளில் விற்கும் மாய்ச்சுரைசரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, குளித்தப் பின்பு வீட்டில் இருக்கும் நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவினால், வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம். சருமமும் பட்டுப் போன்று மின்னும்.
அவகேடோ :

அவகேடோவை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை உடலில் தடவி ஊற வைத்து குளித்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்கலாம்.
பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா, ஓட்ஸ் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் போன்றவற்றை அரைத்து பேஸ்ட் செய்து, குளிக்கும் டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு கலந்து, அந்த டப்பில் வேண்டிய நேரம் உட்கார்ந்து வர, சரும வறட்சிக்கு குட் பை சொல்லலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி :

சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க பெட்ரோலியம் ஜெல்லி பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் உதடுகள், பாதங்கள் போன்ற இடங்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தலாம்.
கிளிசரின் :

உடல் வறட்சியைப் போக்குவதில் கிளிசரினும் சிறந்த ஒன்று. எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள் கிளிசரினைப் பயன்படுத்தினால், வறட்சியைப் போக்கலாம்.
வாழைப்பழம் :

வறட்சியான சருமத்திற்கு வாழைப்பழத்தை வைத்து செய்யப்படும் ஃபேஸ் பேக் சிறந்த ஒன்று. அதற்கு வாழைப்பழத்தை மசித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வெதுவெதுப்பான நீர் :

எப்போதும் சூடான நீரில் குளிக்க கூடாது. ஏனெனில் சூடான நீரும் சருமத்தில் வறட்சியை உண்டாக்கும். எனவே சூடான நீரில் குளிப்பதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. இதனால் வறட்சியைப் போக்கலாம்.
முட்டை :

முட்டையின் மஞ்சள் கருவுடன், சிறிது ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் வறட்சி நீங்குவதோடு, அதனால் ஏற்படும் அரிப்புகளும் நீங்கிவிடும்.
நேச்சுரல் சோப்பு :

சரும வறட்சிக்கு சோப்பும் ஒரு காரணம். எனவே சாதாரண சோப்பைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையாக தயாரிக்கும் சோப்புகளைப் பயன்படுத்தினால், வறட்சியைத் தடுக்கலாம். எப்படியெனில் அவற்றில் எந்த ஒரு ஆபத்தான கெமிக்கலும் இருக்காது.
மீன் :

மீனை சாப்பிட்டால், அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், உடலை ஆரோக்கியமாக மட்டுமின்றி, சருமத்தில் வறட்சி ஏற்படாமலும் தடுக்கும்.
பழங்கள் :

பழங்களில் அதிகப்படியான நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அதிகமான பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனாலும் சரும வறட்சியைப் போக்கலாம்.
ஓட்ஸ் :

சரும வறட்சியைப் போக்குவதில் ஓட்ஸ் மிகவும் சிறந்த பொருள். எனவே ஓட்ஸை பாலில் கலந்து, அதனை கைகளில் சிறிது நேரம் தேய்த்து ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
தூக்கம் :

போதுமான தூக்கம் மிகவும் அவசியம். அதிலும் உடலுக்கு இரவில் குறைந்தது 8 மணிநேர தூக்கமானது இன்றியமையாதது. அவ்வாறு தூக்கம் இல்லாவிட்டால், அவை சருமத்தையும் பாதிக்கும்.
புகைப்பிடித்தலை நிறுத்துதல் :

புகைப்பிடிப்பவராக இருந்தால், சரும வறட்சியைப் போக்குவதற்கு உடனே புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்.
உடற்பயிற்சி :

உடற்பயிற்சி எப்படி சரும வறட்சியைப் போக்கும் என்று கேட்கலாம். உண்மையில் உடற்பயிற்சி செய்யும் போது வெளிவரும் வியர்வையானது, சருமத் துளைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்கி, அதன் வழியே இயற்கை எண்ணெயை சருமத்தின் வெளியே வரச் செய்து, சருமத்தை வறட்சியின்றி வைக்க உதவுகிறது.
மசாலாப் பொருட்கள் :

உணவுகளில் மஞ்சள், சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால், அவை சருமத்தை மென்மையாக வைப்பதோடு, வறட்சியின்றியும் வைக்கும்.