கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும்.
தோற்றம் :
கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அரேபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.
உயிரியல் வகைப்பாடு
திணை : தாவரம்
பிரிவு : பூக்கும் தாவரம்
வகுப்பு : மெய்யிருவித்திலையி
துணைவகுப்பு : Asteridae
வரிசை : கத்தரி வரிசை
குடும்பம் : கத்தரிக் குடும்பம்
பேரினம் : கத்தரிப் பேரினம்
இனம் : S. melongena
இருசொற் பெயரீடு
Solanum melongena
கத்தரிக்காயின் வகைகள் :
தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி சின்னமனூர் அருகே சிம்ரன் கத்தரிக்காய் எனத் தமிழ் நாட்டில் 9 வகைகள் உள்ளன.
உடல் நன்மைக்கு :
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
உடல் பருமனை குறைக்க :
போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மூளை செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும்.
புற்றுநோயை தடுக்க :
புற்றுநோய் வராமல் காக்கும் தக்காளிக்கு இணையானது இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புசத்தை சமன்படுத்தும். நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.
உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
கத்தரி வித்து பிரித்தெடுக்கும் முறை :
நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள கத்தரிக்காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.