பாலை நிலம் :
இதுவரை நடந்து வந்த வழிகளில் எல்லாம் பசுஞ்சோலைகளைக் கண்டவர், இங்கு மட்டும் ஒரு பாலை நிலம் இருப்பது வியப்பைத் தந்தது. செடிகள்,கொடிகள், மரங்கள் பிடுங்கி எறியப் பெற்றுச் சருகுகளாக உலர்ந்து கிடந்தன. யாளிகளும், யானைகளும், மானும், மாடுகளும் உலவித் திரிந்த இடம் அது;
அவற்றின் வற்றி உலர்ந்த எலும்புக் கூடுகள் அவற்றின் சரிதத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தன; சிங்கமும் புலியும் ஒன்று இரண்டு ஒதுங்கித் திரிந்து கொண்டிருந்தன. அவையும் சினம் அடங்கிச் சிறுமை உற்று இருந்தன.
அங்கே வாழ்ந்த உயிரினங்கள் என்ன ஆயின? களப்பலி கொள்ளும் காளி கோயில் முற்றம்போல் இரத்தம் புலர்ந்த தரைகளும், எலும்பின் சிதைவுகளும் புலால் நாற்றம் வீசிக்கொண்டிருந்தன. அழிவுச் சின்னங்கள் அலங்கோலப் பின்னங்கள் அவற்றின் வரலாற்றைக் கேட்க ஆர்வத்தைத் தூண்டின.
இவை அரக்கர்களின் அழிவுச் செயலாகத்தான் இருக்க வேண்டும்; இதற்குக் காரணம் யார்?’ என்று இளைஞர் வினவினர். மாமுனிவருக்குப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது. எதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ அதைச் சொல்லத் தக்கதொரு வாய்ப்புக் கிடைத்தது.
தாடகை :
‘தாடகை என்னும் தையலாள்தான் காரணம்’என்றார். ‘அரக்கி அவள்; இரக்கமில்லாதவள்; இந்தத் தண்டகாருணிய வனமே அவள் கொடுமைக்கு ஆளாகிவிட்டது. சிங்கமும் புலியும்கூட அவளைக் கண்டால் அஞ்சி நடுங்கி விடும்; உயிர்களைக் கண்டால் அவள்செயிர் கொண்டு அழிப்பாள்;
அவற்றின் குருதியைக் குடிப்பாள்; எலும்புகளை முறிப்பாள்; ஆலகால விஷம் போலச் சுற்றுப் புறத்தைச் சுட்டு எரிப்பாள். அவள் இங்கு உலவித் திரிகிறாள்” என்று அவளைப் பற்றிய செய்திகள் அறிவித்துக் கொண்டு இருந்தார்.
தாடகை வருகை :
அதற்குள் எதிர்பாரத விதமாகக் கோர வடிவம் உடைய அவ்வரக்கி அவர்கள்முன் வந்து நின்றாள். மனித வாடை, அவளை அங்குக் கொண்டுவந்து சேர்த்தது. இடியின் ஒலியை இதுவரை வானின் மடியில் தான் கேட்டிருந்தார்கள். இப்பொழுது முதன்முறையாகப் பெண்ணின் குரலில் இடி பேசுவதைக் கேட்டார்கள்;
மின்னல் என்பதை மழை மேகத்தில்தான் கண்டிருக்கிறார்கள்; அதைப் பின்னிய சடையுடைய அவ்வரக்கியின் கோரச் சிரிப்பில் காண முடிந்தது. அவள் மலை ஒன்று அசைந்து வருவதைப் போல அவர்கள்முன் நடந்து வருவதைக் கண்டனர்; ‘பருவ தம் அசையும்’ என்பதை அவள் வருகையில் கண்டனர்.
வானில் கண்ட மதிப்பிறையை அவர்கள், அவள் கூனல் பற்களின் வளைவில் கண்டனர். வேள்வித் தீயில் காணும் தீப்பொறிகளை அவள் வேள்விக் குறிகளில் காணமுடிந்தது. கண்கள் சிவந்து கிடந்தன. பசி என்பதற்கு எரிமலையின் வடிவம் உண்டு என்பதை நெறி தவறிய அவள் இரைச்சலில் கண்டனர்.
தாக்கும் போக்கில் அவர்களை நோக்கி நடந்தாள். “உங்கள் சடைமுடி என்னை ஏமாற்றாது; நீங்கள் மணிமுடி தரிக்கும் மன்னவனின் சிறுவர்கள் என்பது எனக்குத் தெரியும்; வற்றி உலர்ந்த தவசிகளைப் பற்றித் தின்று என் பற்கள் கூர் மழுங்கிவிட்டன. செங்காயாகச் சிவந்து கிடக்கும் கனிகள் நீங்கள்;
சுவை மிக்கவர்கள்; நவை அற்றவர்கள்; நெய்யும் சோறும் நித்தம் தின்று கொழுகொழுத்து உள்ள மழலைகள் நீங்கள்; காத்திருந்த எனக்கு வாய்த்த நல் உணவாக அமைகிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டு சூலப்படை எடுத்து அந்த மூலப்பொருளை நோக்கி எறிந்தாள்.
தாடகை போர்க் கோலம் :
வில் ஏந்திய வீரன் இராமன் தன் விறலைக் காட்ட அம்பு ஒன்று ஏவினான். அது அவள் ஏவிய சூலத்தை இருகூறு ஆக்கியது; சூலம் தாங்கிய அவள், அதை இழந்து ஓலம் இட்டாள். மறுபடியும் அவள் போர்க் கோலம் கொண்டாள். பெண் என்பதால் அவளைக் கொல்லத் தயங்கினான்.
அவள் பேயாக மாறிவிட்டதால் அவளை அடக்க வேண்டியது அவன் கடமையாகியது. மெல்லியல் என்ற சொல்லியலுக்கு அவளிடம் எந்த நல்லியலும் காணப்படவில்லை. அவள் அடங்கி இருந்தால் இவன் முடங்கி இருப்பான்; அவள் போர் தொடங்குவதால் இவன் செயல்பட வேண்டியது ஆயிற்று.
“சேலை கட்டியவள்; அவள்மீது வேலை எறிவது தகாது” என்று எண்ணினான். அடித்துத் துரத்துவது என்று ஆரம்பத்தில் எண்ணினான். அதற்கு முனிவனின் அனுமதி கிடைக்கவில்லை. தம்மோடு தங்கை பிறவாத வெறுமை அவளிடம் அன்பு காட்டச் செய்தது. பெண் கொலை புரிதல் பெரும்பழி உண்டாக்கும் என்று தயங்கினான்.
கொலையிற் கொடியரைக் களைதல் களைபிடுங்குவதற்குச் சமம் :
ஆவும், ஆனியல் பார்ப்பனரும், பெண்டிரும், மகவு பெறாதவரும் களத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை; களத்தில் எந்தப் பெண்ணும் நின்று போராடியது இல்லை; இவன் கற்ற கல்வி, அவளைக் கொல்லத் தடையாக நின்றது.
கொலையிற் கொடியரைக் களைதல் களைபிடுங்குவதற்குச் சமமாகும். அது நாட்டு அரசனின் கடமையாகும். தீயவரை ஒழித்தால்தான் உலகில் நன்மை நிலைத்திருக்கும். அறம் நோக்கி அழிவு செய்வது ஆளுநரின் கடமையாகும்.
நீ தனிப்பட்ட மனிதன் என்றால் தயங்கலாம்; நீ அரச மகன்; உனக்குத் தீயோரை ஒறுத்தல் கடமையாகும்; இது உன் தந்தை செய்ய வேண்டிய கடமை; அதை அவர் இதுவரை செய்யாமல் தாமதித்தது பெருந் தவறு; நீ அவளை இரக்கம் காட்டி, விட்டுவிட்டால், “நீ அஞ்சி அகன்றாய்” என்று உலகம் பேசும்;
“கோழை” என்று ஏழையர் பலர் கூறுவர்; தருமத்தின் முன்னால் ஆண்- பெண் பேதம் பார்ப்பது ஏதம் தரும்; வேதமும், பெண் ஆயினும் அவள் தவறு செய்தால் ஒறுப்பதை அனுமதிக்கிறது.ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று பேசிப் பேதம் காட்டுவது அரச நெறியாகாது”.
“மேலும் அவள் தாக்க வந்தவள்; அவள் உயிர் போக்குவது ஆக்கமான செயலே. கொடியவள் ஒருத்தியை வீழ்த்தினாய்” என்று உன் புகழை உலகம் பேசும்” என்றார்; முன்னோர் பலர் தவறு செய்த பெண்களைத் தீர்த்துக்கட்டிய சான்றுகளை அவன் முன்வைத்தார்.
இராமன் அவர் கூறியவற்றைப் பொறுமையாய்க் கேட்டான்; இனித் தாமதித்துப் பயனில்லை. “விசுவாமித்திரர் வாக்குதான் வேதவாக்கு; அதற்குமேல் சான்றுகள் தேவை இல்லை” என்பதை உணர்ந்தான்; அதற்குமேல் வாதங்கள் தொடரவில்லை.
அம்பு துளைத்தல் :
இராமன் ஏவிய முதல் அம்பு, அவள் சூலத்தை முறித்தது; அடுத்து விட்ட அம்பு அவள் மார்பகத்தைத் துளைத்து முதுகுபுறம் வெளியேறியது. கல்லாத மடையர்களுக்குச் சொல்லும் நல்லுரைகள் அவர்கள் வாங்கிக் கொள்வது இல்லை; உடனே அவர்கள் அதைவிட்டு விடுவார்கள்.
அதுபோல அவ்அம்பு அவள் மார்பில் நிற்காமல் வெளியேறிவிட்டது.குருதி கொப்பளித்தது; அதில் அவள் நீராடினாள். செக்கர் வானம் தரையில் சாய்ந்ததைப் போல அவள் தரையில் விழுந்தாள். மை வண்ண அரக்கி, செவ்வண்ணச் சிலையாக நிலை மாறினாள்.
தாடகை இறப்பு :
கறுப்பி என்று பேசப்பட்டவள் செவ்வலரி மலரானாள். மண் சிவந்தது; அதில் அவள் கண் சிவந்து துடித்துக் கதறினாள்; அந்த ஒலி யானையின் பிளிறல்போல் நாற்புறமும் சிதறியது.இராவணனது கொடிக் கம்பம் சாய்ந்ததைப் போல இந்தக் கொடிய கம்பம் கீழே விழுந்தது. இராவணன் அழிவை முன் கூட்டி அறிவிப்பதுபோல் இந்தச் சாய்வு காணப்பட்டது.
மக்கள் புரட்சி முன் கொடுங்கோல் மன்னன், ஆட்சி இழந்து வீழ்ச்சி உற்று அலங்கோலம் அடைவதைப் போல இக்கோர அரக்கி பிணக்கோலம் கொண்டாள்; இதைக் கண்ட வானவர் ஆரவாரித்தனர்; மகிழ்ச்சி அடைந்தனர். தீமை அழியவும், அறம் தழைக்கவும் இராமன் சரம் செயல்பட்டதை அறிந்து அவர்கள் ஆசி கூறினர்.
“மாவீரன்” இவன் என்று தேவேந்திரன் பாராட்டினான். தேவர்கள் தெய்வப் படைக் கருவிகள் சிலவற்றை ஏற்கெனவே விசுவாமித்திர முனிவரிடம் ஒப்படைத்து இருந்தனர்; அவற்றைத் தக்கவனிடம் சேர்க்கச் சொல்லி அறிவித்திருந்தனர்; “தக்கோன் இவனே” என்று சொல்லி மிக்கோன் ஆகிய முனிவரிடம் “அப்படைகளை இராமனிடம் தருக” என்று அறிவித்தனர்.
மாமுனிவனும் தேவர்களின் ஏவல் கேட்டுக் காவல் மன்னன் ஆகிய இராமனுக்குப் படைக் கருவிகளைத் தந்தான்; அவற்றோடு எய்யும் ஆற்றையும் கற்பித்தான். அரிய படைப்பயிற்சி அவனுக்குக் கிடைத்தது. ஆற்றல்மிக்க படைக் கருவிகள் அவனை அடைந்தன.
தவவேள்வி :
தாடகை தரையில் பட இராமன் வில்லை வளைத்தான்; இது அவனுக்கு வெற்றியைத் தந்தது; அவன் வீரம் பாராட்டப்பட்டது; எனினும், “அவன் ஒரு பெண்ணைக் கொலை செய்தான்” என்ற பெரும் பழியும் அவனைச் சூழ்ந்தது. இதைக் கூனி கைகேயிடம் உரையாடலில் குறிப்பிடுகிறாள். இராமன் பெருமையை உலகம் பேச, அவன் சிறுமையைக் கூனி ஏசக் காண்கிறோம்.
“தாடகை என்னும் தையலாள் படக் கோடிய வரி சிலை இராமன்” என்று வன்பழிக் கூறி கைகேயிக்கு அவன்பால் உள்ள அன்பை அழிக்கிறாள் கூனி. தாடகையின் வீழ்ச்சி, அரக்கர்களின் தாழ்ச்சிக்கு ஆரம்பநிலை; அவர்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி; இனி அடுத்து அவள் மைந்தர்கள் சுபாகுவும் மாரீசனும் இராமனை எதிர்க்கின்றனர். அதற்கு உரிய சூழல் உருவாகியது.
வேள்வி காத்தமை :
கடமையை முடித்துக் கொண்டு காகுத்தன், அந்த இடத்தை விட்டுச் சில யோசனை தூரம் நடந்து சென்றான். மூவரும் அழகிய பசுஞ்சோலை ஒன்றனைக் கண்டனர். அதன் பழைய வரலாறு மாமுனிவன் கூற, இருவரும் செவிமடுத்தனர். “அந்த இடத்தில் திருமால் இருந்து தவம் செய்தார்” என்ற கதை பேசப்பட்டது. அதே இடத்தில்தான் மாவலி என்ற மன்னனும் ஆண்டு வந்தான் என்பதும் அறிவிக்கப்பட்டது.
வள்ளல் ஒருவன் அழிந்தான் என்பது கேட்கப் புதுமையால் இருந்தது. தீயவர்கள் அழிவதும் நல்லோர்கள் வாழ்வதும் அறத்தின் ஆக்கம் என்று கூறுவர். கொடை வள்ளலாக வளர்ந்தவன்; புகழின் எல்லையில் நின்றவன்; அவனை ஏன் திருமால் காலால் மிதித்து மாய்க்க வேண்டும்? நல்லது செய்தாலும் ஆணவம் கூடாது; அடக்கம் காட்டி இருக்க வேண்டும். ஈகை என்பது மற்றவர்கள் தேவை அறிந்து அவர்கள் குறையைப் போக்குவது.
உடையவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுதல், அவர்கள் கடமையாகும். மேகம் மழை பெய்கிறது என்றால், மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று அது எதிர்பார்ப்பது இல்லை; அது தன் கடமையைச் செய்கிறது. ‘மாரி அன்னவண்கை’ என்றுதான் புலவர்கள் வள்ளல்களைப் பாராட்டினார்கள். ஊரில் நீர்நிலை இருந்தால், அது தனி ஒருவனுக்கு மட்டும் உரியது அன்று; அதேபோலத் தான் செல்வர்களின் செல்வமும் பயன்பட வேண்டும்.
ஈயார் தேடிய பொருளைத் தீயார் கொள்வர்; ஈட்டும் செல்வம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும். மாவலி தந்தது புகழ் கருதி மட்டும் அன்று; இதனை ஒரு யாகமாகக் கொண்டான்; அதனால் புண்ணியம் கிடைக்கிறது; அதன் விளைவு இந்திரப் பதவி என்று திட்டம் தீட்டினான்; அவன் செயலில் கண்ணியம் இல்லை; புண்ணியம்தான் இருந்தது. தேவர்கள் வந்து திருமாலிடம் முறையிட்டனர்; “இவன் புகழ் மிக்கவனாக வளர்ந்தால் விரைவில் இந்திரப் பதவியை அடைவான்; இவனை அடக்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டனர்.
”ஆணவம் மிக்க அவனை அவன் சொல்லாலேயே அழிக்க வேண்டும்” என்று திட்டமிட்டு, வாமனனாய் அவதரித்து, மூன்று அடி மண்கேட்டு, விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை அவன் தலைமேல் வைத்து, அவனைப் பாதாளத்தில் அழுத்தினார். இந்தக் கதையை அவ் இளம் சிறுவர்க்கு வளம்மிக்க தவம் உடைய முனிவர் எடுத்து உரைத்தார்.
சித்தாசிரமம் :
மாவலி ஆண்ட மண் அது; அவன் மாண்டதும் அதே மண்தான்; அதனால் அந்த இடம் பெருமை பெற்றது என்பதைவிட வாமனனாய் வந்து, நெடு மாலாய் நிமிர்ந்து நின்ற இடம் அது; அதனால் அது சிறப்புப் பெற்றது.
திருமாலின் திருவடி தீண்டப் பெற்றதால் அந்த இடம் ‘திவ்வியத் தலம்’ ஆயிற்று. அந்த இடத்துக்குச் ‘சித்தாசிரமம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. “நினைத்த பொருள் கைகூடும் இயல்பினது” என்ற பொருளில் இந்த இடத்துக்கு இப் பெயர் அமைந்தது.
வேதம் கற்ற அந்தணர், வேள்விகள் இயற்றுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர்; தீ வளர்த்து, அவிசு சொரிந்து, தேவர்களுக்கு உணவு தந்தனர்;
அவர்கள் புகழ்மிக்க இந்தத் திருத்தலத்தைத் தாம் யாகம் செய்யும் பூமியாகத் தேர்ந்து எடுத்தனர்; அதனால், அங்கே ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு வேதம் ஒதுவதும் வேள்விகள் இயற்றுவதும் தம் தொழிலாகக் கொண்டனர்;
விசுவாமித்திரரும் தாம் மேற்கொண்ட தவத்துக்குரிய இடமாக அந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தார்; அங்கு வந்திருந்த ஏனைய வேதியர்களும் முனிவர்களும் அவர் தலைமையை ஏற்று அடிபணிந்தனர்.
வந்தவர்களைஅவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவ் வாலிபர்கள் தசரதன் நன்மக்கள் என்பதை எடுத்து உரைத்தார். இவர்கள் காவல் இருக்கத் தாம் கண்ணிய வேள்விகளைப் பண்ணி முடிக்கலாம் என்று உரைத்தார்.
கண்ணிய வேள்வி தொடங்கியது; கேள்வி மிக்க முனிவர் அங்கு வந்து கூடினர்; “இனி அரக்கர் வந்து அழிவு செய்ய முடியாது” என்பதால் அச்சமும் அவலமும் நீங்கி, உவகை பெற்றுச் செயல்பட்டனர். தீயை வளர்த்து, உலகத்துத் தீமைகளை அழிக்க முயன்றனர்.
விசுவாமித்தரர் யோகநிலையில் அமர்ந்து, தம் வேகம் எல்லாம் ஒடுங்கி, மவுனவிரதம் மேற்கொண்டார். ஆறு நாள்கள் இந்த வேள்வி தொடர்ந்தது; வேறு அரக்கர் வந்து தொடர்ந்து வேள்விக் குழிகளைக் குருதிச் சேறு ஆக்காமல் இவ்விருவரும் ஊண் உறக்கம் இன்றி, வில் ஏந்திய கையராய்க காவல் காத்து நின்றனர்.