அறிமுகம் :
மக்கா சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும்.

அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.
அப்படிப்பட்ட சோளத்தை நாம் அதிகம் உண்பதால் நமக்கு கிடைக்கின்ற பல்வேறு விதமான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சோளம் பயன்கள்

மூலம், மலச்சிக்கல் தீர :
நமது உடலின் தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாக கொண்ட பயிர் தானியமாக மக்கா சோளம் இருக்கிறது. சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது.

இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடும் உணவுகள் கழிவுகளாக மாறும் போது அவை நீர் வற்றி இறுக்கிக் கொள்வதை தடுத்து சுலபமாக மலம் வெளியேறுவதை உறுதி செய்கிறது.
தயாமின், நியாசின் சத்துகள் :
தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் மக்கா சோளத்தில் இருக்கின்றன. தயாமின் சத்து உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும்.

அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஒன்று சேர்ந்து ஏற்படுவதை பெல்லாக்ரா என அழைக்கின்றனர்.
இந்தப் பெல்லாக்ரா குறைபாடு உடலில் நியாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது. சோளம் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தயமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்க பெற்று மேற்கூறிய குறைபாடுகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் :
மற்ற ஊட்டச்சத்துக்களை போல ஃபோலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது.

இந்த போலிக் அமிலம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவாக பிறக்கும் நிலை உண்டாகிறது.
உடல் எடை கூட :
கலோரி சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவுப் பொருளாக மக்கா சோளம் இருக்கிறது. இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது.

சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடகாத்திரமான எடையை பெற முடியும்.
தாதுக்கள் :
மக்கா சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன.

இவற்றோடு மற்ற உணவு வகைகளில் காணக்கிடைக்காத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது.
இதய நலம் :
மக்கா சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைக்கிறது.

ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
ரத்த சோகை நீங்க :
பரம்பரை காரணம் மட்டுமல்லாமல் உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டாலும் ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

இரும்புச்சத்து அதிகம் உள்ள மக்காசோளத்தை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குகிறது.
கண்கள் நலம் :
மக்கா சோளத்தில் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து அதிகமுள்ளது. இந்த பீட்டா கரோட்டின் மனிதர்களின் கண் பார்வைத்திறன் தெளிவாகவும் கூர்மையாகவும் இருப்பதற்கு மிகவும் உதவுகிறது.

40 வயதை கடந்த பலருக்கும் கண்களில் கண்புரை குறைபாடு ஏற்படுவதை பெருமளவு குறைக்கும் சக்தி சோளத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் கொண்டுள்ளது.
கண்களின் செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து கண்பார்வை கெடாமல் பாதுகாக்கவும் சோளத்தில் இருக்கின்ற பீட்டா கரோட்டின் சத்துக்கள் உதவுகிறது.
நீரிழிவு பிரச்சனை குறைய :

மக்கா சோளத்தில் பைட்டோகெமிக்கல் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. பைட்டோ கெமிக்கல் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து, நோயாளிகளுக்கு ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையை தடுக்கிறது.
முக அழகு :
மக்கா சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரத்தன்மை காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதிக்கிறது.

சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முக தோற்றத்தை தருகிறது.