அறிமுகம் :
இயற்கையை கொன்றொழித்த இடங்களுக்கு மத்தியில் இயற்கையின் பொக்கிஷ மலைப்பிரதேசமாய் இன்று நம்மிடையே உள்ளது கொல்லிமலை.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை 1000 முதல் 1300 மீ உயரம் கொண்டது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இன்றும் கொல்லி மலை இயற்கை எழிலுடனே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
வரலாறு :
கிபி 200-ல் கொல்லிமலை பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர்.

மேலும் இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘மதுவனம்’ எனும் மலைப்பிரதேசம் கொல்லிமலையாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுவதுண்டு.
பெயர்க்காரணம் :

ஆதிகாலத்திலிருந்தே கொல்லிமலை, எட்டுக்கை அம்மன் என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மனால் பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை கொல்லிமலை என்று வழங்கப்படுகிறது.
சுற்றுலாத்தலங்கள் :

ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், வாசலூர்பட்டி படகுத் துறை, மாசிலா அருவி ஆகிய இடங்கள் கொல்லிமலையின் முக்கியமான சுற்றுலாத்தலங்களாக அறியப்படுகின்றன.
ஆகாய கங்கை அருவி :
கொல்லிமலையில் பாயும் அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை அருவி என அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகே அமைந்துள்ள இந்த ஆகாய கங்கை அருவி சுற்றிலும் மலைகள் சூழ எழிலுடன் காட்சியளிக்கிறது.

கோயிலிலிருந்து தொடங்கும் படிகள் அருவியின் முடிவு வரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும்.
அறப்பளீஸ்வரர் கோயில் :
சதுரகிரி எனும் மலை உச்சியில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் கோயில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஈசன் ‘அறப்பளி மகாதேவன்’, ‘அறப்பளி உடையார்’ என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.

இந்த அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ‘மீன் கோயில்’ என்றும் அறியப்படுகிறது.
வாசலூர்பட்டி படகுத்துறை :

கொல்லிமலையில் உள்ள வாசலூர்பட்டி படகுத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொல்லிமலை வரும்போது இங்கு படகுச் சவாரியில் ஈடுபடலாம் .
மாசிலா அருவி :
ஆகாய கங்கை போல மிகப்பெரிய அருவி இல்லையென்றாலும், சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா அருவி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. மாசிலா அருவியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் அருவியின் உச்சியில் அமைந்திருக்கும் மாசி பெரியசாமி கோயிலில் இருந்து பார்க்கும் போது பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழல் கண்கொள்ளா கட்சியாக அமைகிறது.
வல்வில் ஓரி பண்டிகை :

கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக விமரிசயாக பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த இந்தப் பண்டிகை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
கொண்டை ஊசி வளைவுகள் :

‘எழில்மிகு கொல்லிமலை உம்மை இனிதே வரவேற்கிறது’ என்ற வாசகத்துடன் காணப்படும் இந்த தோரணவாயிலிலிருந்து கொண்டை ஊசி வளைவுகள் தொடங்குகின்றன.
கொல்லிமலை பள்ளத்தாக்கு :

கொல்லிமலையின் தலைசுற்றவைக்கும் பள்ளத்தாக்கு.