தம்பி சீற்றம் :
செய்தி அறிந்தான் இளைய செம்மல் இலக்குவன்; அவனுள் எழுந்த எரிமலை வெடித்தது. ‘சிங்கக் குட்டிக்கு இடும் ஊனை நாய்க்குட்டிக்குத் தந்திருக்கிறார்கள்; அவர்கள் அறிவு கெட்டுவிட்டது; ஒருபெண் அவலத்துக்கே காரணம் ஆகிவிட்டாள்; பெண்களே என் எதிரி” என்றான்.
“காரணம் யார்? பெற்ற தாய் ஆயினும் அவள் எனக்குப் பெரும்பகையே” என்று கொதித்து எழுந்தான். “சினவாத நீ சினந்தது ஏன்?” என்று சிறு வினாவினை இராமன் எழுப்பினான். “தந்தை தசரதன் பரதனுக்குத் தந்த ஆட்சியை மற்றோர் தம்பி நான், மீட்டுத் தருகிறேன்; இதை யாரும் தடுக்க முடியாது” என்றான்.
“தவறு செய்தவன் நான்; இப்படி அவதூறு வரும் என்று தெரிந்திருந்தால் மூளையிலேயே களைந்திருப்பேன்; ஆட்சியை ஏற்க நான் ஒப்புக் கொண்டதே தவறு. “சால்புடன் நடந்து கொண்ட தந்தை சால்பு உடையவர்; பாசத்தோடு பரிந்து பேசிய தாய் பண்பு உடையவள்; அவர்கள் நம் பால் அன்பு கொண்டனர்;
அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எல்லாம் விதியின் செயல்” என்றான். ‘விதியா? இல்லை இது சதி; விதிக்கும் நான் ஒரு விதியாய் நிற்பேன்; சதிக்கு நான் ஒரு கதியாய் இருப்பேன்; என் வில்லின் முன் எவர் சொல்லும் நில்லாது” என்றான்.
“நீ கல்வி கற்றவன்; சாத்திரம் பயின்றவன்; பெற்றோரை எதிர்ப்பது பேதைமையாகும்; சீற்றம் உன் ஏற்றத்தைக் கெடுக்கும்; என் சொல் கேட்டு நீ சினம் அடங்கு” என்றான் இராமன். ”நன்மதியோடு விளங்க வேண்டியவன் நீ;
நல்நீதிகளை மறுத்துப் பேசுகிறாய்; இனி எதையும் வீணாகக் கேட்டு உன்னை நீ அலட்டிக் கொள்ளாதே; நடக்க இருப்பவை இவை; எவற்றையும் நிறுத்த முடியாது; பரதன்தான் ஆட்சிக்கு உரியவன்; நீ எதிர்த்துப் புரட்சி செய்ய உனக்கு உரிமை இல்லை; அடங்கி இரு; அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை நரகத்தில் சேர்க்கும்;
நாம் காட்டுவாசிகள் அல்ல விருப்பப்படி நடக்க; பெற்றோரை மதிக்க வேண்டும்; அவர்கள் ஆணையைக் கேட்டு நடப்பதுதான் நம் கடமை” என்று கூறி இராமன் இலக்குவனை நெறிப்படுத்தினான். விவேகம் வேகத்தை அடக்கியது. இலக்குவன் மழைநீர்பட்ட மலைக்கல் போலக் குளிர்ந்து ஆறினான். சூடு தணிந்தது; தன்னை அடக்கிக் கொண்டான்; தன் தமையன் கட்டளைக்கு அடிபணிந்தான்; அதன்பின் இராமன் நிழலாக அவன்பின் தொடர்ந்தான்;
தன் தாய் சுமத்திரையைக் காணச் சென்றான்; இராமனும் அவனுடன் சென்றான். கைகேயி இராமனுக்காக அனுப்பி வைத்த மரவுரியை ஏற்று உடை மாற்றிக் கொண்டான், களம் நோக்கிச் செல்லும் போர் வீரனாக மாறினான்; தவக் கோலத்தில் தமையனைக் கண்ட இலக்குவன், கண் கலங்க நின்றான்; சுமத்திரை அவனைத் தட்டி எழுப்பினாள்.
“தமையனைக் கண்டு நீ கண்ணீர் விடுகிறாய்; அதனால் நீ அவனுக்கு அந்நியன் ஆகிறாய்; நீயும் புறப்படு; கோலத்தை மாற்று; வில்லை எடுத்து அவன் பின்செல்க! மரவுரி நான் தருகிறேன்; நீ உடுத்திக் கொள்; அதுதான் உனக்கு அழகு தரும்” “இராமன் வாழும் இடம்தான் உனக்கு அயோத்தி; அவன்தான் உனக்கு இனித் தந்தை.
சனகன் மகள் சீதைதான் உனக்கு இனி அன்னை; காலம் தாழ்த்தாதே; புறப்படு; இங்கு நிற்பதும் தவறு” என்றாள். மரிவுரி தரித்து இலக்குவனும் இராமன்பின் வந்து நின்றான். “இது என்ன கோலம்?” என்று வியப்புடன் கேட்டான். ‘அரச உடை; அங்கு ஆகாதே” என்றான். “உன்னை யார் காட்டுக்கு ஏகச் சொல்லியது? வரம் எனக்குத்தானே தவிர உனக்கு அல்லவே” “நான் உடன் வரக்கூடாது என்று அன்னையர் யாரும் வரம் வாங்கவில்லையே” என்றான். அவனும் தன்னுடன் வருதலை விரும்பாது, அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான்.
“உனக்கு இங்கே கடமைகள் மிக்கு உள்ளன; அன்னையர்க்கு ஆறுதல் கூற உன்னையன்றி யார் இருக்கிறார்கள்?” “தந்தை நிலை கெட்டு உலைகிறார்; அவருக்கு என் இழப்பை ஈடு செய்ய நீ இருக்க வேண்டாவா?” ‘பரதன் ஆட்சிக்குப் புதிது; வயதில் என்னைவிட இளைஞன்; அவனுக்குத் துணையாக யார் இருப்பர்?” “யான் இங்கிருந்து ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன; எனக்காக நீ இரு; என் வேண்டுகோளை ஏற்று நட” என்று அறிவுரை கூறினான்.
மூத்தவன் இந்த உரைகளைப் பேசுவான் என்று இலக்குவன் எதிர்பார்க்கவில்லை; இந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டுக் கடுந்துயரில் ஆழ்ந்தான்; விம்மி அழுதான்.
“ஏன் என்னை உன்னிடமிருந்து பிரிக்கிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை நான் விரும்பும் இடத்தில் வாழ விடு” “மீனும் குவளையும் நீரில்தான் வாழும்; ஏனைய உயிர்களும் அவை அவை வாழும் இடம் இவை எனத்தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன;
கட்டிய மனைவியை நீ விட்டு ஒதுங்கமுடியாது; ஒட்டிய உறவுடைய என்னையும் நீ வெட்டித் தள்ளமுடியாது; ‘எட்டப் போ’ என்று கூறமுடியாது! நீ இல்லாமல் நான் வாழ முடியாது; அன்னை சீதையும் உன்னை விட்டுப்பிரிந்து வாழ முடியாது; இது எங்கள் நிலை”.
“ஏன் என்னை ஒதுக்குகிறாய்; உனக்குக் கொடுமை இழைத்த தசரதன் மகன் என்பதாலா? நீ எதைச் சொல்லி இதுவரை மறுத்தேன்; சினம் தணிக என்றாய்; தணிகை மலையாயினேன்; சீற்றம் கொள்ளாதே என்றாய்? அதற்கு மறுப்பு நான் கூறவில்லை;
நீ எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவன் நான்; ஆனால் ‘இரு’ என்ற கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது; இது கொடுமை மிக்கது; அரச செல்வத்தை விட்டுச் செல்லும் நீ,நானும் உன் உடைமை என்பதால் என் உறவை உடைத்து எறிகிறாயா?” என்று கேட்டான்.அதற்குமேல் இராமன் பேசுவதைத் தவிர்த்தான்; அவனைத் தடுக்கவில்லை.
சீதை செய்கை :
சித்திரப் பாவைபோல எந்தச் சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்த சீதைக்கு இந்தப் புதிய மாற்றங்கள் வசித்திரமாய்ப் பட்டன; “என்ன நடக்கிறது?” என்று எடுத்துக் கூற யாரும் முன்வரவில்லை; அவளும் தன் நாயகன் நா, உரையாததால் நலிந்து காத்திருந்தாள். “எதிர்பாராதது நடக்கலாம்; ஆனால், எதிர்த்துப்பேசும் உரிமையை நீ எடுத்துக் கொள்ளாதே; எல்லாம் மிகச் சிறிய செய்திகள்தான்,” என்றான்.
“பரதன் பட்டத்துக்கு வருகிறான்; மகிழ்ச்சிமிக்க செய்தி.” “யான் காட்டுக்குப் போகவேண்டும் என்பது மன்னன் கட்டளை” “மாமியார் மெச்சும் மருமகளாய் நீ அவர்களுக்குத் துணையாய் இங்கே இருப்பாய்” என்று அறிவித்தான். “நான் காட்டுக்குச் செல்லும் தவசி; நீ வீட்டு ஆட்சிக்கு அமையும் அரசி; இவற்றை நீ தெரிந்து கொள் அலசி” என்று விளக்கம் கூறினான்.
“பரிவு நீங்கிய மனத்தோடு பிரிவை எனக்குத் தருகிறாய்; ஏன் என்னைவிட்டு நீ நீங்க வேண்டும்?” ‘கட்டிய மனைவி கால்கட்டு என்று வெட்டி விடத் துணிகிறாயா! மனைவி என்றால் மனைக்குத்தான் உரியவள் என்று விதிக்கிறாயா? காட்டுவழி முள் உடையது; பரல்கற்கள் சுடும் என்று கருதுகிறாயா?”
‘குளிர் சாதனங்களில் பழகிய இவளுக்கு உபசாதனங்கள் அமைத்துத் தர முடியாது என்று அஞ்சுகின்றாயா? “ஒன்றே ஒன்று கேட்கிறேன்; இதற்கு மட்டும் விடை கேட்கிறேன்; பிரினுவினும் சுடுமோ பெருங்காடு?” ‘என் ஒருத்திக்குத்தான் இவ்வளவு பெரிய காட்டில் இடமில்லையா?” என்று கேட்டாள்.
“உன் இன்ப வாழ்விற்கு நான் இடையூறு என்றுபட்டால் நிற்பதற்கு எனக்குத் தடையாதும் இல்லை”என்றாள். அன்பின் அழைப்பிற்கு அவன் அடி பணிந்தான். அதற்கு மேல் பேசுவதை நிறுத்திக் கொண்டான். சீரை சுற்றிய திருமகள் முன்னே நடந்தாள்; காரை ஒத்தவன் அவளைத் தொடர்ந்தான்;
இவ்விருவர் பின்னான் இலக்குவன் நடந்தான்; இராமன் தாயரைக் கைகூப்பித்தொழுது இறுதி வணக்கம் செலுத்தினான். மகனையும் மருமகளையும் அவர்கள் வாழ்த்தி அனுப்பினர்; இலக்குவனை ஏத்திப் புகழ்ந்தனர். இராமன் தாயரை அரிதிற் பிரிந்து வசிட்டரை வணங்கிப் பின் தன் தம்பியும் சீதையுமாய்த் தேர் ஒன்றில் ஏறிச் சென்றான்.
காடு அடைதல் :
இராமனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பின் தொடர்ந்தனர்; இரண்டு யோசனை தூரம் நடந்தனர்; அவர்கள் வட்ட வடிவமாய் ஒரு யோசனை தூரம் இராமனைச் சூழ்ந்து கொண்டனர். இந்த மாபெருங்கூட்டத்தை எப்படித் திருப்புவது? என்று யோசித்தான்; இருட்பொழுது வந்தது; இராமன் சுமந்திரனைத் தனியே அழைத்தான். “நீ தேரை அயோத்திக்குத் திருப்பு” என்றான். சுமந்திரன் வியப்பு அடைந்தான்; இராமன் நாடு திரும்புகிறான் என்று நினைத்தான்.
“மக்கள் தேர்ச் சுவடு கண்டு நான் திரும்பிவிட்டதாய் நினைப்பர்; நாடு திரும்புவர்; அவர்களைத் திசை திருப்ப வேறு வழியில்லை; அவர்களைத் தடுத்து நிறுத்த இயலாது” என்று கூறினான். சுமந்திரன் சூழ்நிலையை அறிந்து கொண்டான்; வேறு வழி இல்லை.
சுமந்திரன் துன்பச் சுமையைச் சுமந்து நின்றான்; இராமன் திருமுகம் நோக்கினான். “என்ன? ஏன் தயக்கம்?” என்றான். “மயக்கம்” என்றான். “தசரதனை அன்னை கைகேயி கொல்லாமல் விட்டாள்; நான் கொன்று முடிப்பேன்” என்றான். ‘நின்று கொண்டு ஏதோ உளறுகிறாய்” சென்றுவா; என்றான்.
இராமன் காடு ஏகினான் என்று நான் எப்படிச் சொல்வது? சொன்னால் அவர் வீடு சேர்தல் உறுதி” என்றான். “என் செய்வது? நான் திரும்புவேன் என்பது இயலாத செயல்; அதைத் தருமம் விரும்பாது; கடமை தவறினால் அது மடமையாகும்; அரசனும் வாய்மை தவறான்; அவர் சொல்லுக்கு உறுதி சேர்க்கிறேன்; அதனால் வரும் இறுதிகளைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும்; இழப்பு சிறிது; புகழ் பெரிது; இதை அறிக; நீ திரும்புக” என்றான்.
“மறுமொழி கூறாமல் வேறு செய்திகள் சொல்லத்தக்கன உளவேல் செப்புக” என்று வேண்டினான். இராமன் அவனே செய்தியாய் அமைந்தான். சீதை வாய் திறந்தாள். ‘அரசர்க்கும் அத்தையர்க்கும் என் வணக்கத்தை இயம்புக” “பூவையையும், கிளியையும் போற்றுக என்று எம் தங்கையர்க்குச் சாற்றுக” என்று கூறினாள்.
அடுத்து இலக்குவன் பேசினான். “இராமன் காட்டில் காயும், கனியும், கிழங்கும் உண்கிறான்; மன்னனை நாட்டில் சத்திய விரதன் என்று சொல்லிக் கொண்டு நித்தியம் சுவை ஆறும் கொண்ட உணவினை உண்ணச் சொல்க ” “இலக்குவன் தம்பியுடனோ, தமையனுடனோ பிறக்கவில்லை; அவன் தன் வலிமையையே துணையாகக் கொண்டு வாழ்கிறான் என்பதை எடுத்துக் கூறுக’ என்றான்.
இராமன் தக்க சொல் சொல்லித் தம்பியைத் தணித்தான்; சுமந்திரனை அயோத்திக்குத் திரும்புமாறு பணித்தான்; தானும், தையல்தன் கற்பும், தன் சால்பும், தம்பியும், கருணையும், நல்லுணர்வும், வாய்மையும் தன் வில்லுமே துணையாகக் கொண்டு காடு நோக்கிச் சென்றான்.
சுமந்திரன் திரும்புதல் :
சுமந்திரன் தானும் தேருமாகமட்டும் திரும்பி வந்த செய்தியை அறிந்து வசிட்டரும் தசரதனும் இராமனைப் பற்றி வினவினர். “நம்பி சேயனோ அணியனோ?” என்று தசரதன் கேட்டான். ‘அதை நான் கவனிக்க முடியவில்லை. மூங்கில் நிறைந்த காட்டில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினர்” என்று கூறினான்.
“சென்றவர் இனி மனம் மாறி வரப் போவதில்லை; அதே போலச் செல்லும் உயிரை நிறுத்துவதனால் விளையப்போவது யாதும் இல்லை” என்ற முடிவுக்கு வந்த மன்னன் விடைபெற்றுக் கொண்டான்; அவன் சடலத்தை மட்டும் அங்கே விட்டுச் சென்றான்.
கோசலையின் துயர் :
‘மன்னன் உயிர் பிரிந்தான்’ என்ற நிலை கோசலையைத் துடிக்க வைத்தது. அமுதத்தை இழந்த அமரர்களைப் போலவும், மணியிழந்த நாகம் போலவும், இளம் குஞ்சுகளை இழந்த தாய்ப் பறவை போலவும், நீரற்ற குளத்து மீன் போலவும் பிரிவால் வாடினாள்; நிலைதடுமாறினாள். “காக்க வேண்டிய மகன், தந்தையின் உயிர் போக்கக் காரணமாய் இருந்தானே” என்று வருந்தினாள்.”நண்டும், இப்பியும், வாழையும், மூங்கிலும் சந்ததிக்காகத்தான் அழிகின்றன.
தசரதனும் மகனுக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்” என்று ஆறுதல் அடைந்தாள். மேகத்தில் மின்னல் புரளுவதைப் போலத் தசரதன் மார்பில் கிடந்து புரண்டாள்; சுமத்திரையும் துன்பச்சுமையால் அழுது உயிர் தளர்ந்தாள். மகனைப் பிரிந்த பிரிவும், கணவனை இழந்த துயரும் அவர்களை வாட்டின.
வசிட்ட முனிவர் ஈமக் கடனைச் செய்து முடிக்கப் பரதனை அழைத்துவர நாள் குறித்து, ஆள் போக்கி ஓலை அனுப்பினார். வழி அனுப்பச் சென்ற நாட்டு மாந்தர், உறக்கத்தினின்று விழித்து எழுந்தனர்; தேர்ச்சுவடு கண்டு ‘கார்நிறவண்ணன் ஊர் திரும்பிவிட்டான்” என்று அவர்களும் அயோத்தி திரும்பினர்.
கங்கையைக் கடத்தல் :
வனம் புகு வாழ்வு, மனத்துக்கு இனிய காட்சிகளைத் தந்தது. கதிரவனின் ஒளியில் அவன் கரிய மேனி ஒளிவிட்டுத் திகழ்ந்தது. சீதையும் உடன்வரக் காட்டு வழியே நடந்தான். வழியில் களிஅன்னமும் மடஅன்னமும் உடன் ஆடுவதைக் கண்டனர். மேகமும் மின்னலும் போலவும், களிறும் பிடியும் தழுவிச் செல்லுதல் போலவும் இராமன் சீதையோடு நடந்து சென்றான்;
அன்னம் தங்கும் பொழில்களையும், சங்குகள் உறையும் எக்கர்களையும், மலாகள் சிந்தும் பொழில்களையும், பொன்னைக் கொழிக்கும் நதிகளையும் கண்டு மகிழ்ந்தனர். வழியில் தவசிகள் அவர்களை வரவேற்றனர்; தம் தவப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்; அரும் புனலில் நீராடித் தீயை ஓம்பிப் பின் அமுது உண்ணும்படி வேண்டினர்.
சீதையின் அழகு :
சீதையின் கரம்பற்றி இராமன் கங்கையில் நீராடினான். அவள் இடையழக்குத் தோற்று வஞ்சிக் கொடி நீரில் முழுகியது. அன்னம் நடைக்குத் தோற்று ஒதுங்கியது. கயல் கண்ணுக்குத் தோற்றது; நீரில் பிறழ்ந்து ஒளிந்தது.
கூந்தலின் நறுமணம் கங்கையை வெறி கொளச் செய்தது; அலைகளில் நுரை பொங்கியதால் கங்கை மூத்துவிட்டது போல் நரை பெற்றது; இதுவரை தன்னில் நீராடுவர்களைப் புனிதப்படுத்தியது; சீதை நீராடியதால் அது புனிதம் அடைந்தது.
நீராடிய பின் நியதிப்படி நிமலனை வணங்கி வேள்விக் கடன்கன் செய்து முடித்தனர்; பின் அம் முனிவர் இட்ட உணவை ஏற்றனர்; “அமுதினும் இனியது” என அதனைப் பாராட்டினர்.