சரவங்கன் பிறப்பு நீக்கம் :
அவர்கள் சென்ற வழியில் சோலை ஒன்றில் சரவங்கன் என்னும் தவமுனிவன் ஆசிரம் இருந்தது. அதில் அவர்கள் தங்கினர்; அங்கு ஒரு புதுமையைக் கண்டனர். தேவர் தலைவனாகிய இந்திரன், பிரமதேவன் ஏவற்படி அம்முனிவனை அழைத்துச் செல்ல அங்கு வந்து சேர்ந்தான்.
நீண்ட காலம் மாண்புமிக்க தவம் செய்த அம் முனிவருக்குப் பிரம தேவன் அழைப்பில் பிரமபதம் காத்துக் கிடந்தது. பிறப்பை ஒழிக்க நினைத்த அம்முனிவன் அச்சிறப்புக்களைப் புறக்கணித்தான்! பிறப்பு ஒழிந்து ‘பரமபதம்’ என்னும் பெருநிலையை அடையவே விரும்பினான்.
இந்திரன் வரம் தந்து உயர்த்த வந்த பணி நிறைவேறவில்லை. ‘வானாள வானவர்கோன் பதவி தந்தாலும் வேண்டேன்’ என்று கூறும் விறல் அம்முனிவனிடம் இருந்தது. இந்திரன் செய்த முயற்சி பயன்தரவில்லை. வந்த வழி பார்த்து அந்தரம் நோக்கி அவன் திரும்பிச் சென்றான்.
திரும்பிச் செல்வதற்குமுன் இந்திரன், இராமனது வருகையை அறிந்து, அவனை வழிபட்டு வணங்கி விடைபெற்றான். முனிபுங்கவன் தன் மனைவியோடு இராமனைச் சந்தித்து உபசரித்தான். அத்தகைய இராமன் வருகையை எதிர் நோக்கி இருந்தவனாய்க் காணப்பட்டான். ‘தீக்குளித்தல்’ என்பது உலகத்தில் பிற பகுதிகளில் நடைபெறாத நடப்பியல்; அது இந்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது.
தன்னை அழித்துக் கொள்தற்கு இக்காலத்தில் அரசியல் எதிர்ப்புச் சாதனமாய் உள்ளது; மாமியார் கொடுமைக்கு எதிராய் மருமகள் செய்யும் மானப்புரட்சியாய் இயங்குகிறது. ‘சதி’ என்ற பெயரால் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாக அது இயங்கியது.
சீதையின் கற்பின் பொற்பினை அறிவிக்க அனல் அவளைத் தீண்டலாயிற்று. பரமபதம் அடைய இம்முற்றும் துறந்த முனிவன், கற்ற கலையாக இத்தீக்குளித்தல் நடைபெற்றது. இராமன் முன்னிலையில் அம் முனிவனும் அவன் மனைவியும் தீக்குளிக்க விரும்பினர். மற்றவர் நம்பிக்கைகளை இராமன் தடுத்து நிறுத்த விரும்பவில்லை.
மற்றைய முனிவரும் தவசியரும் இதை ஒரு பெருவிழாவாக மதித்துப் பாராட்ட அவர்கள் முத்தி நிலை அடைய முந்திக் கொண்டனர். இராமன் தீயோரைத் தீண்டி, அவர்களுக்கு விடுதலை அளித்தைப் போலவே நல்லோர் நயப்புகளையும் கேட்டு அருள் செய்தான். சரவங்கன் தெய்வத் திருமகன்முன் உயிர்விட்டதால், பிறப்பு ஒழிந்த இறப்பு, அவனுக்குக் கிட்டியது. அவன் மனைவியும் அப்பெருநிலையை விருப்புடன் ஏற்றுக் கொண்டாள்.
தமிழ் முனிவர் அகத்தியர் சந்திப்பு :
சரவங்கன் இறுதி யாத்திரை இராம இலக்குவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. சரவங்கனது ஆசிரமத்தை விட்டுச் சுமை நீங்கிய உணர்வோடு மெதுவாய் அவர்கள் நடந்தனர்; விண்ணை முட்டும் மலைகளையும், பசுமை நிறைந்த மரங்களையும், கடுமையான பாறைகளையும், ஓடும் நதிகளையும், சரியும் சாரல்களையும், நீர்த்தடாகங்களையும் கடந்தனர்;
வழி நெடுக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்தித்தவர் தாம் அடைந்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். அரக்கர் இழைக்கும் அநீதிகளை எடுத்துக் கூறி, ‘அவர்களை அழித்து அறம் தழைக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினர். “நாட்டை விட்டுக் காட்டை அடைந்ததும் ஒரு வகையில் நல்லதாயிற்று” என்று இராமன் கருதினான்.
வருந்தி வாடும் அருந் தவசியர் இடையில் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை மகிழ்வித்தான். எந்தவித இடையூறும் இன்றி, இனிமையாய்ப் பத்து ஆண்டுகள் அவர்களைக் கேளாமலே கழிந்து சென்றன. வேதம் கற்ற முனிவரிடைப் பழகிய இராமன், தமிழ் கற்ற அகத்தியரைக் காண விரும்பினான்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});அகத்தியர் இருக்கும் இடம்தேடி நடந்தான். கதீக்கணன் என்னும் முனிவனைச் சந்தித்து, அகத்தியர் வாழும் மலையை அறிய விரும்பினான். அகத்தியர் செய்த அரிய செயல்கள், கதைகளாகப் பேசப்பட்டன. அவற்றுள் இது ஒன்று. தேவர்களை எதிர்த்துத் தப்பி ஓடிய அவுணர் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டனர்.
அவர்களைத் தேடித் தரும்படி தேவர் வேண்டினர். கடலைக் குடித்து அகத்தியர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார் என்பது ஒரு கதை. வாதாவி என்பவன், முனிவர்களில் வயிற்றில் ஆட்டிறைச்சியாகப் புகுந்து, அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான். அக் கொடியவனை விழுந்கி, வயிற்றின் உள்ளே உருத்தெரியாமல் சீரணித்து அழித்த கதை அடுத்த கதையாகும்.
பார்வதி திருமணத்தில் இமய மலையில் தேவர் குவிய வடக்கு உயர்ந்தது. தெற்கு தாழ்ந்தது. அதைச் சமன்படுத்த அகத்தியர் தென் திசை அனுப்பப்பட்டார். அது முதல் பொதிகை மலையில் அவர் தங்கினார் என்பது அடுத்த கதை. “சிவபெருமான் வடமொழி இலக்கணத்தைப் பாணினிக்கும், தமிழ் இலக்கணத்தை அகத்தியருக்கும் அருள் செய்தார்” என்பது மற்றொரு கதை.
‘அகத்தியரே தமிழ் மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்’ என்று என்று பேசப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க தமிழ் அறிஞரைச் சந்திப்பதில் இராமனுக்குப் பேரரர்வம் ஏற்பட்டது. இதனை ‘ஒரு பண்பாட்டுக் கலப்பு என்று கூறலாம். வடமொழி காவியத்தில் தமிழுக்குப் பெருமைதரும் செய்தியாய் இது அமைந்துள்ளது.
அகத்தியரும் இராமனது வருகையை, எதிர் நோக்கி இருந்தார்; அகம், குளிர இராமன் அகத்தியரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் தான் கொண்ட மதிப்பை வெளிப் படுத்தினான். ‘அரக்கர் செய்யும் இரக்கமற்ற செயல்களைத் தடுத்துத் தீமைகளைக் களைய வேண்டும்’ என்று அகத்தியரும் வேண்டினார்.
அதனோடு நில்லாமல் தான் வைத்திருந்த ஆயுதங்கள் சிலவற்றை இராமனுக்கு அளித்தார்; திருமால் வைத்திருந்த வில் ஒன்றனையும், ஒப்புயர்வற்ற வாள் ஒன்றையும், சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில் மேருவை வில்லாக வளைத்துப் பூட்டிய அம்பு ஒன்றனையும் தந்தார்.
இராமன் சீதையோடு தங்குதற்கு, உரிய இனியசூழல் அமைந்த இடம் பஞ்சவடி என்றும், அதன் அருகில் மலைச்சாரல் ஒன்று உள்ளது என்றும், அந்தப் பஞ்சவடியில் கனிகளைத் தரும் வாழை மரங்களும் பசிய செந்நெற்கதிர்களும், தேன் சிந்தும் பொழில்களும் மிக்க கவின்மிகு நதிகளும் உள்ளன என்றும், நீர் வளமும் நிலவளமும் மிக்க அந்தச் சோலை தங்கு வதற்கு ஏற்றது என்றும் அகத்தியர் கூறினார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});மேகநிற வண்ணனாகிய இராமன் அறிவுக் கடலாய் விளங்கிய அகத்திய முனிவரிடமிருந்து பிரியா விடை பெற்றுப் பஞ்சவடி நோக்கி நடந்தான்; பாகு அனைய சொற்களைப் பேசிய பாவையாகிய சீதை யும், வீரம் காட்டிய தம்பியும் பின் தொடரப் பயணம் தொடர்ந்தது.
சடாயுவைச் சந்தித்தல் :
காவதம் பல கடந்தனர்; நதிகள் மலைகள் சோலைகள் அவர்களுக்கு வழிப்பட்டன. புதிய புதிய இடங்களைக்கண்டு அவர்கள் இறும்பூது எய்தினர். எதிர்பாரமல் அங்கே கழுகின் வேந்தைக் கண்டு தொழுது வணங்கினர். அரசிளங்குமரர்களைத் தவசிகளின் கோலத்தில் காண அப்பறவை வேந்தனுக்கு வியப்பு விஞ்சியது.
“நீவிர் யாவிர்”? என்று வினவினான். “தசரதனின் மைந்தர்” என்று பதில் இறுத்தனர். தசரதன் கழுகின் வேந்தனாகிய சடாயுவின் நண்பன் ஆதலின் அவன் நலத்தைக் கேட்டு அறிய விரும்பி. “வாய்மை மன்னன் வலியனோ” என்று கேட்டான். ‘அவன் காத்து வந்த வாய்மை அழியவில்லை; காவலன் மறைந்துவிட்டான்” என்று கூறினான் இராமன்.
நண்பனை இழந்தமை கழுகு வேந்தனுக்குத் தீராத் துயரைத் தந்தது; உணர்வு நீங்கி உயிரற்றவனாயக் காணப்பட்டான்; வெறும் சடலமாக விளங்கினான். இராமனும் இலக்குவனும் அவனைத் தடந்தோள்களால் தழுவிக் கொண்டு நழுவ விடாமல் நிறுத்தினர். இருவரும் தம் கண்ணீரால் அவனைக் குளிர வைத்தனர்;
அவன் உயிர்ப்புப் பெற்று அயர்ப்ப நீங்கினான். தசரதன் வெற்றிச் சிறப்புகளை அடுக்கிக் கூறி அழுகையை அவன் ஒப்பாரி ஆக்கினான். தசரதனுக்காக ஒரு பறவை அரசன், அழுது அரற்றியது அதிசயமாக இருந்தது. அவனைப் பற்றி அறிய அவாவினர்.
“சூரியன் தேர் ஒட்டி ஆகிய அருணன் அருமைப் புதல்வன் யான்; சூரியன் சுற்றி வரும் உலகம் முற்றும் திரிந்து பறந்து வாழ்பவன்; தசரதன் என் இனிய நண்பன். தேவர்களோடு மற்றச் சாதிகளை வகைப்படுத்திய ஆதிகாலத்திலேயே வந்து உதித்தவன் நான்; கழுகுகளுக்கு மன்னன்; என் உடன் பிறந்தவன் சம்பாதி; அவன் எனக்கு இளையவன்; சடாயு என்பது என் பெயர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பொன்னுலகு புகுந்த பெரியோனாகிய தசரதனே உயிரோடு திரும்பி வந்ததைப் போல, அவனைக் கண்டு இராமன் களிப்பு அடைந்தான். பாசத்தோடு தன் இரண்டு இறகுகளால் அவர்களைச் சடாயு அணைத்து அன்பு காட்டினான். ‘என் ஆருயிர் நண்பன் என்னை விட்டு அகன்ற பிறகு யான் உயிர் வாழ்தல் சரியன்று; சுமை மிக்க வாழ்வில் யான் சுவை காண இயலாது.
யானும் தீயில் விழுந்து மாயாவிட்டால் என் துன்பத்திற்கு விடிவே இல்லை” என்று அரற்றி அலறினான். அவனைத் தேற்றி அன்புமொழி கூறி, அவனிடம் உறவு கொண்டனர். “எங்களுக்கு உதவ வேண்டிய எம் தந்தை, உயிர் விட்டுப் புகழைத்தேடிக் கொண்டார்; மெய்யைக் காத்து வந்தவர் தம் மெய்யைவிட்டு நீங்கினார்.
துன்பம் நேர்கையில் இன்பம் சேர்க்கும் உறுதிமொழிகளை எடுத்துக்கூற, உம்மைத் தவிர இன்று யார் இருக்கிறார்கள்? நெருப்பு பொறுப்பு அற்றது; உம்மைச் சுட்டு எரித்தால் அதற்குப் பிறகு குளிர் நிழலை யாம் எங்கே காண முடியும்? நிற்கின்ற நெடுஞ்சுவரே இளைப்பாற நினைத்தால் சாய்வதற்கு நிழல் ஏது? எம் விருப்பேற்று நீர் உயிர் வாழ வேண்டுகிறோம்” என்றனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});“தந்தை மறைந்ததும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க வேண்டிய நீவிர் காட்சிப் பொருளாக இங்கு வந்து சுற்றிக் கொண்டிருப்பது ஏன்?”என்று வினவினான் சடாயு. அதற்கு விடையாக இராமன் அவர்கள் அடைந்த இன்னல்களை அடுக்கிக் கூறினான். சீதையை நோக்கி, அக்கோதையை அறிமுகப்படுத்தும்படி சடாயு வேண்டினான்.
தாடகையை வீழ்த்தியது முதல் வில்லை வளைத்து அக்கோமகளை மணந்தது வரை ஒன்று விடாமல் உரைத்தான் இராமன். “நாட்டைத் துறந்து நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். நீர் மீண்டும் திரும்பும் வரை விரும்பியபடி பொழுது போக்கிக் கொண்டு சீதை இங்குத் தங்கலாம்; அவளுக்கு எந்தவிதப் பங்கமும் ஏற்படாதவாறு காவல் காப்பேன்” என்று கூறினான்.
“அகத்தியர் அறிமுகப்படுத்திய கோதாவரி என்னும் ஆற்றங்கரையில் நீர்த்துறை ஒன்று உள்ளது. பஞ்சிலும் மெல்லிய அடிகள் உடைய சீதை தங்குதற்கு அந்தப் பஞ்சவடி என்னும் இடம் ஏற்றம் உடையது” என்றான் சடாயு.அதற்கு வழி காட்டினால் போதும் என்று அடக்கமாகக் கூறினான் இராமன்.
“மிகவும் நன்றி! அப் பெருந்துறையில் நீர் வைகிமாதவம் செய்வீர்; அதுதான் தக்கது’ என்று கூறி விண்ணில் முன்னோக்கிப் பறந்து அவர்களுக்கு வழி காட்டினான் சடாயு. பஞ்சவடியை அறிய வழிகாட்டிய தூய சிந்தை உடைய சடாயு சென்றபின் வில்லை ஏந்திய வீரர்களாகிய இராம இலக்குவர் பஞ்சவடியை அடைந்து அங்கு உறைந்தனர். தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப்பறவை போலச் சடாயு அவர்களைக் காக்கும் அரிய பணியை மேற்கொண்டான்.