அறிமுகம் :
முன்னோர்கள் ஒவ்வொரு காலங்களிலும் கிடைக்கும் ஆரோக்கியம் தரும் உணவு பொருள்களை மொத்தமாக சேகரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். அந்த வகையில் கோடையில் மட்டுமே பூக்ககூடிய வேப்பம் பூக்களை சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்தி வந்தார்கள்.
வேப்பம் பூவை சேகரிக்கும் முறையும் பதப்படுத்தும் முறையும் குறித்து தெரிந்து கொள்வதோடு அவை எதற்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.
வேப்பம் பூவை சேகரிக்கும் முறை :
வேப்பமரத்திலிருந்து நேரடியாக பூக்களை பறித்தாலோ அல்லது தரையில் விழுந்திருக்கும் பூக்களாக இருந்தாலும் அதை உதறி ( சில பூக்களில் புழு, பூச்சி இருக்க கூடும்) சுத்தமான நீரில் கழுவி நிழலில் உலர்த்தி காயவிட வேண்டும். ‘ஈரம் போக உலர்ந்ததும் அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரிக்கவும். பிறகு மாதம் ஒருமுறை இலேசாக வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும்.
வயிற்று வலி பிரச்சனைகள் :
வாயு கோளாறு, வயிறு உப்புசம், வயிறு மந்தம், வயிற்று வலி பிரச்சனைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேப்பம்பூ கஷாயம் சிறப்பாக பலன் தரும்.ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து நான்கு வேப்பம் பூக்களை போட்டு கொதிக்கவிட்டு அரை டம்ளர் ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி குடிக்கவும். தினமும் காலை மாலை என்று இரண்டு வேளையும் குடித்து வந்தால் வலி பிரச்சனைகள் நீங்கும். சிறு பிள்ளைகளுக்கு இதை ஒரு வேளை மட்டும் கொடுக்க வலியோடு வயிறும் சுத்தம் ஆகும்.
வயிற்றில் பூச்சி :
கசப்பு தன்மை கொண்டிருக்கும் வேப்பம் பூ சற்று வெப்பம் மிகுந்ததும் கூட. இது உடலில் குடலில் இருக்கும் பூச்சிகளையும், மலக்குடலில் இருக்கும் பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை கொண்டவை. வயிற்றில் பூச்சிகள் இருந்தால் குழந்தைகள் உடலில் போதுமான சத்து சேராது. குறிப்பாக அதிகம் இனிப்பும் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி அதிகமாகவே இருக்கும். மாதம் இருமுறையாவது வேப்பம் பூக்களை அரைத்து தேனில் குழைத்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறுவதோடு வயிறு சுத்தமாகும்.பெரியவர்கள் மாதம் ஒருமுறை வயிறு சுத்திகரிக்க வேப்பம்பூ பொடியை மோரில் கலந்து குடிக்கலாம்.
அலர்ஜி :
சரும வியாதிக்கு உள்மருந்தாக வேப்பம் பூ பயன்படுத்தி கொள்ளலாம். சரும அரிப்பு, கை கால்களில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வேப்பம் பூவை உள்ளுக்கு சேர்க்கலாம்.உணவில் வேப்பம் பூ சேர்த்துகொள்வதன் மூலம் நீரிழிவு, இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க உதவும். கல்லீரலில் கொழுப்பு சேரமால் தடுக்கும்.