கடுகு பயன்கள் :
கடுகு சமையல் வகையில் தாளிதம் செய்வதற்கு கடுகு உபயோகப்படுகிறது. அதோடு கடுகு ஒரு சில வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. சிவப்புக் கடுகு, வெள்ளைக் கடுகு மருத்துவ முறைக்கே அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. கடுகிலிருந்து எண்ணெய் எடுத்து அதை வைத்திய முறையில் பயன்படுத்துகின்றனர், ஆங்கில வைத்திய முறையிலும் கடுகு, கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
ஜன்னி குணமாக :
அதிக குளிர்ச்சிக் காரணமாகவும், வேறு சில காரணங்களினாலும் ஜன்னி ஏற்படுவதுண்டு. ஜன்னிக்கு உடனடியாக சிகிச்சை செய்யாவிட்டால் விபத்து ஏற்படும். இதற்கு கடுகு நன்கு பயன்பட்டு வருகிறது.
கடுகு, முருங்கைப்பட்டை, வெள்ளைப்பூண்டு, இஞ்சி இவைகளைச் சம அளவாக எடுத்து அம்மியில் வைத்து, பஞ்சு போல நைத்து, கால் பெருவிரல்களில் கனமாக வைத்துக் கட்டி விட்டால் ஜன்னி இறங்கிவிடும் ஜன்னி இறங்கியபின மருந்தை அவிழ்த்து எடுத்துவிட வேண்டும்.
ஜன்னி இழுப்புக்கு :
ஜன்னி கண்டு கை கால் இழுப்பு ஏற்பட்டால், முருங்கைப் பட்டையைக் கொண்டு வந்து அதில் மூன்று கைப்பிடியளவு எடுத்து அதே அளவு கடுகையும் எடுத்து, கடுகை முதலில் காடி விட்டு அரைத்த பிறகு அதோடு முருங்கைப்பட்டைமை வைத்து எல்லாவற்றையும் மைபோல அரைத்து எடுத்து, நோயாளியின் இரண்டு உள்ளங்காலிலும் கனமாக அடைபோல வைத்துக் கட்டி விடவேண்டும்.
கொஞ்ச நேரத்தில் இழுப்பு நிற்கும். ஜன்னி இறங்கும். ஜன்னியின் வேகம் தனிந்தவுடன் கட்டை அவிழ்த்து மருந்தை எடுத்துவிட வேண்டும்.
கால், கைகளில் ஏற்படும் கடுகடுப்பு குணமாக :
சில சமயம் கை, கால்களில் அசாத்தியக் கடுகடுப்பு உண்டாகும், இதற்கு மூன்று தேக்கரண்டியளவு கடுகை அம்மியில் வைத்து மைபோல அரைத்து ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டால் கடுப்பு குணமாகும். ஆனால், வலியில்லாத இடத்தில் போட்டால் வெந்து விடும்.
வலியுள்ள இடத்தைக் குறிப்பாக தெரிந்து அந்தயிடத்தில் மட்டும்தான் பற்றுப் போடவேண்டும்.