மேகமலை :
தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும். பசுமை போர்த்திய மலைகளும், வெண்பஞ்சு மேகங்களும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டு இருக்கும் இடம் தான் மேகமலை.
பல வகை விலங்குகள் :
600 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கொண்ட இந்த வனப்பிரதேசத்தில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம்பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய் ஆகியவை.
மேலும் சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், நீலகிரி லாங்கூர் குரங்குகள், சாதாரண லாங்கூர் குரங்குள், போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் போன்ற பல வகை விலங்குகளை காணலாம்.
தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் :
திரும்பிய பக்கமெல்லாம் பார்வையை பறித்துப் போக்கும் தேயிலை தோட்டங்கள் இந்த இடத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று.
தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் நிரம்பிய இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்னமும் யாராலும் சேதப்படாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன.
கைலாசநாதர் குகைக் கோவில் :
கைலாசநாதர் குகைக் கோவில் சுருளி நீர்வீழ்ச்சிக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து 800 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம், இந்த கோவில் குகைகளில் தமிழ் மாதங்களான ஆடி, தை மற்றும் சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதை தெரிவிக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் இயற்கையான நீர்ச்சுனை மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது.
போடி மெட்டு :
போடி மெட்டு, தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும். இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49தின் வழியில் அமைந்துள்ளது.
போடி மெட்டின் முக்கிய விளைபயிராக ஏலக்காய், தேயிலை மற்றும் குளம்பிக்கொட்டை பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.
மங்களதேவி ஸ்ரீகண்ணகி திருக்கோவில் :
புராண சிறப்புமிக்க மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில் மேற்குதொடா்ச்சி மலையில், மேகமலை வனஉயிரின சரணாலாயத்தின் முகட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தமிழகத்திற்கு மலையேற்றம் மூலமே செல்ல வழிகள் உள்ளது. மேலும், இத்தலத்திற்கு கேரள மாநிலத்திலிருந்து குமுளி வழியாக மலை ஈப்பு பயணமூலம் செல்லலாம்.
இக்கோவில் திருவிழா, சித்திரை முழுநிலவு தினத்தில் மிகச்சிறப்பாக கொண்டாப்படுகிறது. மேகலை வன உயிரின சரணாலாயத்தின் அடிவாரத்தில் உள்ள பளியன்குடி குக்கிராமம் வரை சாலை வழிகள் மற்றும் பேருந்து வசதிகள் கம்பம் நகரிலிருந்து உள்ளது. சித்திரை முழுநிலவு தினத்தில் மட்டும் வழிபட அனுமதி வழங்கப்படும்.
கும்பக்கரை நீர்வீழ்ச்சி :
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஊற்றெடுத்துள்ள அருவிதான் கும்பக்கரை நீர்வீழ்ச்சியாகும். தேனியிலிருந்து 20 கிமீ தொலைவும், பெரிய குளத்திலிருந்து 9 கிமீ தொலைவும் உள்ள கும்பக்கரை என்ற இடத்தில் தான் இந்த அருவி உள்ளது.
இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின் கீச்சிடும் குரல்கள் சுற்றூலாப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பளிக்கும் அம்சமாகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது.
குச்சானூர் :
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.
இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் செல்கின்றனர்.
சுருளி நீர்வீழ்ச்சி :
18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக அருவி விழுந்து கொண்டிருக்கிறது. மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது.
தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் சிறப்பையும், வனப்பையும் பற்றி இளங்கோவடிகள் பாடியுள்ளார். இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும்.
அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில் :
அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில் முல்லை பெரியார் ஆற்றுப்படுகையில், வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் ஸ்ரீ வீரபாண்டி அவா்கள் அம்மனையும், கண்ணீஸ்வரமுடையாரையும் பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார்.
இக்கோவில் இம்மாவட்டத்தின் முதன்மையான புனித தலமாகும். தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா, அக்கினி வெயில் ஏற்படுகின்ற நாட்களில் நடைபெறும்.
தீர்த்த தொட்டி :
தீர்த்த தொட்டி, தேனியிலிருந்து 19 கிமீ தூரத்திலும், பெரிய குளத்திலிருந்து 2 கிமீ தூரத்திலும் உள்ள இடமாகும். 1000 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய கடவுளின் கோவில் இங்குள்ள மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். தீர்த்த தொட்டி என்றால் புனித நீருள்ள தொட்டி என்று பொருளாகும்.
இவ்விடத்தில் உள்ள இயற்கையான நீரூற்றை சுற்றிலும் வேம்பு மற்றும் பிற மூலிகை மரங்கள் உள்ளன. இந்த தீர்த்த தொட்டியின் சுற்றுச் சுவர்களில் சப்த கன்னிகைகள் என்றழைக்கப்படும் ஏழு கன்னியர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு, அவர்கள் முருக பெருமான் மற்றும் விநாயக கடவுளை நோக்கி வணங்கும் காட்சி உள்ளது.
சின்ன சுருளி நீர்வீழ்ச்சி :
மேகமலை மலைப்பகுதிகளில் பிறக்கும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியானது மேகமலை நீர்வீழ்ச்சி என்று பொருள் தரும் ‘க்ளெவுட்லேண்ட் பால்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. தேனியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கோம்பைத்தொழு என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.
ஆரவாரமான சத்தம் மற்றும் வெள்ளிக் கோடு போன்ற மேகங்களுக்கிடையில் விழுந்து கொண்டிருக்கும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியானது தொலைதூரம் மற்றும் அருகில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம் :
ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை உறுதியாக கட்டமைத்ததன் நினைவாக தமிழ்நாடு அரசு இந்த மணிமண்டபம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ஸ்ரீபென்னிகுவிக் பேருந்து நிலையம் என்று பெயா் சூட்டி கௌரவித்துள்ளது.
குரங்கனி :
அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கனி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.
குரங்கனி, முதுவாகுடி மற்றும் கொட்டக்குடி மலை வாழ்குடிகள், சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் நடைபெற்ற வாணிப்பாதை மற்றும் தலங்கள், தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட கூடங்கள் இப்பகுதியில் உள்ளது.