கோசல நாடு :
மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய முதல் தெய்வ மகன் இராமன்; அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசலநாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர்.

மனு என்பவனும் இக் குலத்தில் பிறந்தவனே.மக்களை நன்னெறிப்படுத்த நீதிநெறிகளை வகுத்துக் கொடுத்தவன் இவன். மழைவளம் குன்றி, மண்வளம் குறைந்த மகிதலத்துக்கு விண்ணுலகினின்று கங்கையை வரவழைத்த பகீரதனும் இக்குலத்தில் தோன்றியவனே.அவனுடைய விடாமுயற்சியை மாநிலம் போற்றுகிறது.அரிதின் முயன்று ஆற்றும் செயலுக்குப் “பகீரதப் பிரயத்தனம்” என்ற தொடர் இன்றும் வழங்குகிறது.

இச்சுவாகு என்ற அரசனின் மெச்சத்தக்க புகழ் இன்றும் பேசப்படுகிறது. அவனால் இக்குலம் ‘இச்சுவாகுகுலம்’ என்று நச்சி உலகம் போற்றுகிறது. காகுத்தன் என்பவன் தேவர்களின் ஆகுலங்களைத் தீர்த்தவன்; அவர்கள் குறை கேட்டு அசுரர்களோடு போராடி அவர்கள் கம்பராமாயணம் வாழ்வை மலரச் செய்தவன். பெருமைமிக்க இக் குலத்தில் பிறந்ததால் இவனைக் ‘காகுத்தன்’ என்றும் அழைத்தனர்.

ரகு என்ற அரசனும் இக்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவன்; அதனால் இராமனை,’இரகுராமன்’ என்றும், ‘இரகுகுல திலகன்’ என்றும் அழைத்து வந்தனர். நீதியும் நேர்மையும் வீரமும் பேராற்றலும்மிக்க மன்னர் இராமனின் குல முதல்வர்களாய்த் திகழ்ந்தனர். இராமன் பிறந்ததால் இக்குலமும்,உயர்வு பெற்றது; இக்குலத்தின் பெருமையால் இராமனும் உயர்வு பெற்றான்.
நாட்டு வளம் :
மழை வளம் கரந்தால் நாட்டின் வளம் மறைந்துவிடும். கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது.வெள்ளிப் பனிமலைமீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடுபொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும்,சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள் ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின.

வணிக மக்களைப்போல அந்நதி இப்பொருள்களை வாரி அடித்துக் கொண்டு வந்தது. நீள்நதி அந்த மலையின் உச்சியையும் அகலத்தையும் தழுவி வந்ததால் அது கணிகை மகளை ஒத்திருந்தது.அலைக் கரத்தில் மலைப் பொருள்களை ஏந்தி வந்து அடி வாரத்தில் குவித்தது.

சரயூநதி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐவகை நிலங்களில் பாய்ந்தது; அந்நாட்டை வளப்படுத்தியது. மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம், கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம்,குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி, வயல்களையும் சோலைகளையும், பசுமையுறச் செய்தது. மூலப் பொருள் ஒன்று எனினும் ஞாலம் அதைப் பல்வேறு பெயர்களைக்கொண்டு அழைக்கிறது.

அதேபோல் கடல் நீர், மேகம்,மழை, அருவி, வெள்ளம், வாய்க்கால், ஏரி, குளம், ஆறு,தடாகம் என்னும் பல வடிவங்களைக் கொண்டுவிளங்கியது. கல்வியும் செல்வமும் ஏட்டையும் தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு நலம் விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். பொருட் செல்வம் இயற்கை தருவது; கல்வி மானுடர் தேடிப் பெறுவது.

செல்வக் குடியிற் பிறந்த செல்வியர் கல்வி கற்றுக் கவின் பெற்றுச் சிறப்பு அடைந்தனர். கலைமகளும், திருமகளும் அவர்களை அடைந்து கொலுவீற்றிருந்தனர். கற்ற இப்பெண்களால் உற்ற நல் அறங்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தன.
இவர்கள் வறியவர்க்கு இல்லை என்னாமல் வாரிவழங்கினர்; விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்றனர்; இன்முகம் காட்டி நல்லுரை பேசி உணவும் உறையுளும் தந்து சிறப்புச் செய்தனர். மாதரார்தம் செயலால் மாட்சிமிக்க அறங்கள் தழைத்து ஓங்கின. அன்ன சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டன.

அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போல கம்பராமாயணம் பெருகியது. அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்கியது; தேர் ஓடுவதால் தெருக்களில் துகள் கிளம்பியது. யானையின் மதநீர்பட்டு அது தெருவினைச் சேறு ஆக்கியது; அதில் யானைகள் வழுக்கி விழுந்தன. மகளிர் குழை எறிந்து கோழி எறியும் செல்வ வாழ்க்கையைப் பெற்றிருந்தனர்.
சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்தனர். முத்துகளை அவர்கள் சிறுசோறாக அமைத்தனர்; அம் முத்துகளை இளம் விளையாட்டுச் சிறுவர்கள் தம் காலில் இடறிச் சிதைத்தனர். அவை அவர்கள் திரட்டி எடுத்துப் போடும் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன; அவை ஒளி செய்தன.

மருத நிலத்துச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடின; குயில்கள் கூவின; தாமரை முகைகள் விளக்குகள்போல் ஒளி வீசின; முகில்கள் இடித்து முழவாக் ஒலி செய்தன; நீர் அலைகள் அழகிய திரைச்சீலைகள் ஆயின. குவளைகள் கண்விழித்து நோக்கின. இவ்வாறு மருத நிலம், நாட்டிய அரங்காகப் பொலிவு பெற்று அழகு செய்தது. அன்னப் பறவைகள் தாமரை மலர்களை அடைந்து துயில் கொண்டன; தம் அருகே தம் இளங்குஞ்சுகளை உறங்கச் செய்தன.
சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து மடுத்தன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன.

சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின.
சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன.இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம் செவிநுகர் கனிகள் ஆயின.
நகர் வளம் :

இந்நாட்டின் தலைநகர் அயோத்தி என்னும் மாநகர் ஆகும். செல்வச் சிறப்பால் அளகை நகரையும், இன்பச்சிறப்பால் பொன்னகராம் அமராவதியையும் இது ஒத்து இருந்தது.
எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள்மிக்க அகழிகளும் சூழ்ந்திருந்தன. மதில்கள் விண்ணைத் தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தலத்தை அழுத்தின.

காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழையின் கந்தல், உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றைப் போல அரசன் நாட்டைக் காத்தது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது.
அவர்கள் அஞ்சிப் புறமுதுகிட்டனர். மக்கள் பசியும், பிணியும் நீங்க, வளனும் வாழ்வும் பெற்று, அவன் குடை நிழலில் குளிர்ந்தனர். உட்பூசலும் வெளித்தாக்கலும் இன்றி நாட்டில் அமைதி நிலவியது; ஆக்கம் தழைத்தது; ஊக்கம் நிலவியது; செம்மைகள் நிலைத்தன.

மாதரார்தம் கற்பின் திறத்தால் நாட்டின் பொற்பு உயர்ந்தது. அறத்தின் ஆக்கத்தால் துறக்கமும் தோற்றது. ஆடவர் தம் மறச்செயலால் வீரம் செறிந்தது; புகழ்மிக்க நாடு எனத் திகழ்ந்தது.
கொடைச் சிறப்பால் வறுமை நீங்கியது; வள்ளல்கள் என்று ஒரு சிலர் புகழ் பெற முடியாமல் அனைவரும் பிறர் துன்பத்தைக் களைந்தனர். பிறர் கை ஏந்தாமல் பீடும் பெருமையும் பெற்று, மக்கள் வாழ்க்கை நடத்தினர்.

செல்வம், தனி உடைமை என்று கூற முடியாமல் அனைவர்க்கும் உரியதாய் இருந்தது. கல்வியும் மக்கள் உடைமையாக இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இன்றி, அனைவரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராய்த் திகழ்ந்தனர்.