மகவு வேள்வி :
புறச் செல்வத்திலோ, அற வாழ்க்கையிலோ குறை காணாத மன்னன், தன் அக வாழ்வில் நிறைவு காணாதவனாய் வாழ்ந்தான். மக்கட்செல்வம் அவனிடம் வந்து அவனை மகிழச் செய்யவில்லை. யாழும் குழலும் அவனுக்குத் திகட்டிவிட்டன. அமுதமொழி பேசும் குழந்தைகளின் மழலைமொழி கேட்டு மகிழ விரும்பினான். கோடி இருந்தும் என்ன பயன்? நாடித் தன்மடியில் தவழும் நன்மக்களை அவன் பெறவில்லையே.

“ஒருத்திக்கு மூவர், அவனுக்கு மனைவியர்; எனினும் கருத்தரித்துக் காதல் நன்மகனைப் பெற்றுத்தரவில்லை” என்ற குறை அவனை அரித்தது. ‘சூரியகுலம் அவனோடு அத்தமித்து விடுமோ?” என்ற அச்சம் உண்டாகியது. அவனுக்குப் பின் யார் அந்த நாட்டை ஆள்வது? வாரிசு இல்லாமல் வறுமை உற்றுக் கிடந்தது அவன் வாழ்வு. இன்பம் சேர்ப்பதற்கு ஏந்திழையர் பலர் இருந்தனர்; துன்பம் துடைப்பதற்கு ஒரு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனைத் தாக்கியது.

வயித்தியனைக் கேட்டான்; வழிவகை அவனால் கூற இயலவில்லை. ஆசிரியனை அணுகினான். வசிட்டர் அவன் குலகுரு; அரசியல் ஆசான்; வாழ்க்கை வழிகாட்டி; சாத்திரம் அறிந்தவர். அவரை அடைந்து தன் குறையை வெளியிட்டான்.”பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் மாந்தர்தம் முயற்சியால் பெருகுவன; அவை ஈட்டத் தக்கன; மக்கட்செல்வம் பெறத் தெய்வ அருள் தேவைப்படுகிறது. அதற்கு மறை கற்ற மாமறையோன் நீர் தாம் வழி காட்டவேண்டும்” என்றான்.
புத்திர காமேட்டி யாகம் :
மழை இல்லாவிட்டால் மறையவர் வேள்விகள் இயற்றுகின்றனர்; மற்றையோர் இசை பொழிவித்து இறைவனை வேண்டுதலும் உண்டு. இந்த மரபுகளை ஒட்டி மகவு இல்லை என்றால் யாகம் எழுப்பித்தல் அக்கால மரபாகக் கொண்டிருந்தனர். அதற்குப் புத்திர காமேட்டி யாகம் என்று பெயரிட்டனர். “மகவினை நல்கும் மகிமை இந்தப் புத்திரகாமேட்டி யாகத்துக்கு உள்ளது என்றும், தக்கவரைத் தலைமையாகக் கொண்டு இதை நடத்துக” என்றும் வசிட்டர் அறிவுரை தந்தார்.

தெய்வ அருளால் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் விளங்குவான் என்ற நம்பிக்கையும் சேர்ந்துகொண்டது. அக்கால வழக்கப்படி இம்மகவு வேள்வி இயற்றுதற்குமுன் மற்றோர் வேள்வி இயற்ற வேண்டும் என்ற மரபு இருந்தது. இதற்கு அசுவமேதயாகம் என்று பெயரிட்டனர்.
அசுவமேதயாகம் :
மாபெரும் மன்னர், தம் வெற்றிச் சிறப்பைத் திக்கு எட்டும் அறியச் செய்ய விரும்பினர். அடக்க முடியாத குதிரை ஒன்றினை முன் அனுப்பி அதனை மடக்குபவரை எதிர்க்கப் படைகள் பின் தொடர்ந்தன. அதனைக் கட்டி வைப்பவர் மாவீரன் என்ற புகழ் பெறுவர்;
அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றுத் திறை பெற்றுத் தம் இறையிடம் சேர்த்தனர். சிற்றரசர்கள் அடிபணிந்து பேரரசனின் ஆணையை ஏற்றனர். அரசன் மாமன்னன் என்று புகழப்பட்டான். தசரதனும் இப்பரிவேள்வியைச் செய்து முடித்துவிட்டுப் பின் இம்மகவு நல்கும் நல்வேள்வி நடத்தினான்.

தெய்வங்கள் புகழ்ச்சிக்கும் வழிபாட்டுக்கும் மகிழ்ந்து கேட்ட வரங்களைக் கொடுத்து வந்தன. தவம்செய்வோர்க்கு ஆற்றலையும், ஆயுளையும் தந்தன. அசுரர்களும் அமரர்களும் மாறிமாறித் தவங்கள் செய்து சிவனிடமும் பிரமனிடமும் வேண்டிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்றதும் தம் தரங்களை மறந்து,உரம் கொண்டு முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இடையூறு விளைவித்தனர்.
அரக்கர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாத தேவர்களும், மாமுனிவர்களும் தெய்வங்களை அடைந்து தம்மைக் காக்கும்படி வேண்டினர். வரம் கொடுத்த தெய்வங்களே வழி தெரியாமல் திகைத்தன. பிரமனும் சிவனும் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரமனிடம் சென்று முறையிட்டனர்; அவர்களோடு இந்திரனும் சென்றான்.

திருவுறை மார்பன் ஆகிய திருமால் அருள் செய்யவந்து, அவர்களுக்கு ஆறுதல் உரை கூறினார். தெய்வங்கள் தந்த வரத்தை மானுடனே மாற்ற முடியும் என்று கருதித் தான் மானுட வடிவம் எடுத்துத் தசரதன் மகனாய்ப் பிறந்து, அந்தக் கொடியவரை வேர் அறுப்பதாய் வாக்களித்தார். அங்கு முறையிட வந்த வானவர்கள், தாமும் மண்ணில் வானரராகப் பிறந்து உதவுவ தாய் உறுதி அளித்தனர்.
அவனுக்கு “வண்ணப் படுக்கையாய் இருந்த ஆதி சேடன், இலக்குவனாகப் பிறக்க” என்று ஆணையிடப்பட்டது; “தம் கைகளில் தங்கி இருந்த சங்கு சக்கரங்கள் பரத சத்தருக்கனர்களாகப் பிறக்க” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தெய்வங்கள் நேரிடையாகக் களத்தில் இறங்கத் தயங்கினர். அவர்கள் குரங்களுக்குத் தலைமை தாங்கினர். இந்திரனின் கூறு, வாலியாகவும், அங்கதனாகவும் செயல்பட்டது;
காற்றின் மைந்தனாக ஆற்றல் மிக்க அனுமன் பிறந்தான். பிரமனின் கூறாகச் சாம்பவான் ஏற்கனவே பிறந்திருந்தான் என்பது அறிவிக்கப்பட்டது.

‘அனுமன் காற்றின் மைந்தன்; எனினும், சிவனின் சீற்றமும், ஆற்றலும் விரச் செயலும் அனுமன்பால் அமையும்” என்று அறிவிக்கப்பட்டது.
தெய்வ நகர்களில் தேவர்களும், தெய்வங்கள் மூவரும் முன் பேசிய பேச்சுரைகள் இப்பொழுது செயற்படும் காலம் வந்துவிட்டது என்பதை வசிட்டர் உணர்ந்தார். திருமால் தசரதன் மகனாய்ப் பிறப்பார் என்பதை அறிந்து செயல்பட்டார்;

மகனை நல்கும் வேள்வி செய்விக்க வழி வகைகளைக் கூறினார். “வேள்விக்குரிய ஆசான் யார்? அவர் எங்கு இருக்கிறார்? எப்படி அவரை அழைத்து வருவது” என்ற முறைகளைக் கேட்டுத் தசரதன் செயல்பட்டான்.
“வேள்வி ஆசான் அதற்குத் தகுதி, கலைக்கோட்டு மாமுனிவர்க்குத் தான் உளது” என்று வசிட்டர் அறிவித்தார். அவரை ருசியசிருங்கர் என்றும் கூறுவர்.

அவர் அங்க நாட்டில் தங்கி இருக்கிறார் எனவும், உரோம பாதர் அந்நாட்டு அரசன் எனவும், அவர் தம்மகளை இம்முனிவருக்கு மணம் முடித்துத் தம் அரண்மனையில் மருகனாய் இருக்க வைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டன.