அறிமுகம் :
ஏற்காடு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும்.இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது.

இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன.

இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது.
காலநிலை :

குளிர்காலம் செப்டம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதங்களில் முடிவுக்கு வரும். குளிர்காலத்தில், மலைகள் மூடுபனி படர்ந்திருக்கும். குளிர்காலத்தில் வெப்பநிலை 12 °C முதல் 24 °C மற்றும் கோடைகாலத்தில் 16 °C முதல் 30 °C இருக்கும். சராசரி மழை அளவு 1500-2000 மிமீ ஆகும்.
விவசாயம் :

முக்கிய வருமான ஆதாரமாக காப்பிச்செடி தோட்டங்கள் உள்ளன.பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் :
தேசிய தாவரவியல் பூங்கா ஏற்காட்டில் அமைந்துள்ளது. இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

பூச்சி தின்னும் பிட்சர் தாவரம் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது. காட்டு விலங்குகள் காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், அணில், பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன.
சுற்றுலா :
ஏற்காடு, ஐரோப்பியர்களின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக, 1862 ஆம் ஆண்டில், ஆங்கில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. ஐரோப்பியர்களின் வருகையால், ஏற்காடு என்ற மலை வாழிடம், கோடை வாழிடமாக வளர்ந்துள்ளது.

1863 ஆம் ஆண்டு, சேர்வராயன் மலைப் பகுதியில் இருந்த 80 சுற்றுலா இடங்களை, ஆங்கில அரசு வெளியிட்டது.இதனால் உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு அதிகமாக வரத் தொடங்கினர்.
ஏற்காடு ஏரி :
மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது.

ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
லேடி சீட் :
ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது லேடி சீட். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.

வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.
கிள்ளியூர் அருவி :

ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.
பகோடா பாயிண்ட் :

இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம். இங்கு வாழ்ந்த மக்கள் இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
சேர்வராயன் கோவில் :

மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.
நல்லூர் அருவி :

இது ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.