தமிழகத்தின் மலை சுற்றுலாத் தளங்களில் கொட்டிக் கிடக்கும் அதிசயங்கள் :
நகரத்தின் மக்கள் நெருக்கடி, வெப்பம், புகை ஆகியவற்றிலிருந்து விலகி உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சிக்கு மலைவாழிடங்களுக்கு சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும்.

அந்தவகையில் கோடைவிடுமுறைக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைவாழிடங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஊட்டி :
தமிழ்நாட்டில் உள்ள மலைவாழிடங்களின் மகுடமாகத் திகழும் ஊட்டி, பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. நீலகிரி மலையில் 2240மீ உயரத்தில் அமைந்துள்ள ஊட்டியில், காணப்படும் உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், அழகான பள்ளத்தாக்குகள் காரணமாக இது மலைகளின் ராணி என்றழைக்கப்படுகிறது.

ஊட்டி ஏரி, ரோஜாத்தோட்டம், தொட்டபெட்டா சிகரம், பைன் காடுகள், தேயிலை தோட்டங்கள், பைகாரா நீர்வீழ்ச்சி, பைகாரா ஏரி, முதுமலை தேசியப்பூங்கா, முக்கூர்த்தி தேசியப்பூங்கா ஆகியவை

மற்றும் ஊசி மலைக் கண்ணோட்டம், எமரால்டு ஏரி, மேல்பவானி ஏரி, காமராஜ் சாகர் ஏரி, பனிச்சரிவு ஏரி, அரசு அருங்காட்சியகம், செயின்ட் ஸ்டீபன்ஸ் சர்ச் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றன.
கொடைக்கானல் :

கடல் மட்டத்திலிருந்து 2100மீ உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்றழைப்படுகிறது. அற்புத காலநிலை மற்றும் இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இந்த இடம், நடுத்தர பட்ஜெட்டில் உயர் மதிப்பிலான சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக விளங்குகிறது.

கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில், தூண் பாறைகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு கண்ணோட்டம், பேரிஜம் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் செண்பகனூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.
ஏற்காடு :

தென்இந்தியாவின் ஆபரணம் என்றும் ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு, கடல் மட்டத்திலிருந்து 1515மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளிர் சூழல், மூடுபனி வானிலை மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.

ஏற்காடு ஏரி, லேடீஸ் சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில், கரடி குகை, கிரேஞ்ச், ஹெவன் தொங்கு பாறை, பகோடா பாயிண்ட், ரோஜாத் தோட்டம் மற்றும் சில்க் பண்ணை ஆகிய இடங்கள் இங்கு பார்க்க வேண்டியவை ஆகும்.
ஏலகிரி :
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ஊர்களுக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 4600 அடி உயரத்தில் உள்ளது ஏலகிரி. பறந்து விரிந்த புங்கனூர் அருவியில் படகு சவாரி செய்யலாம்.

கண்ணுக்கு விருந்தாக ஜலங்கம் பாறை அருவி, சாகச விளையாட்டுகளுக்கு பாரா கிளைடிங், மலை ஏற்ற வசதிகளும் இருக்கிறது. தரமான தங்கும் விடுதிகளும் உள்ளன.
சிறுமலை :

திண்டுக்கல் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கிறது சிறுமலை. பத்தொன்பது கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலையில் பயணம். வாழை, நெல்லி போன்ற கனிகள் நிறைந்த இந்த மலைப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் இருப்பதால் கோடையிலும் காலை, மாலை நேரங்களில் இதமான காலநிலை நிலவும்.
கொல்லிமலை :
சேலம், திருச்சி நகரங்களிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ள அழகிய மலை கொல்லிமலை. மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் நிழல்களுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம். 1300 படிக்கட்டுகள் கீழ்நோக்கி அரை மணி நேரம் மலை இறங்கினால் அழகிய ஆகாய கங்கை அருவி.

மாசில்லா அருவி என்று மற்றொரு சிறிய அருவியும் குளிக்க உகந்தது. பழங்களின் மலையான இங்கு ருசியான பலா, கொய்யா பழங்கள் கிடைக்கும். தங்குவதற்கு தரமான அரசு குடில்கள் உள்ளன.
கோத்தகிரி :

நீலகிரி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் உள்ள மற்றொரு தேயிலை தோட்ட மலை நகர். கோவையிலிருந்து 66 கி.மீ., மேட்டுப்பாளையத்தில் இருந்து 33 கி.மீ பயணம்.

மணம் வீசும் யூகலிப்டஸ் மரங்கள் கூடுதல் அழகு. கோடை ஓய்வுவை முடித்துக் கொண்டு மணம் கமழும் டீ தூள் மற்றும் யூகலிப்டஸ் தைலமும் வாங்கிவரலாம்.
மேகமலை :
ஆங்கிலேயர் காலத்தில் கண்டறியப்பட்டு தேயிலை பயிரிடப்பட்ட தோட்டங்கள் நிறைந்த மலைப் பகுதி மேகமலை. 5 ஆயிரம் அடி உயரத்தில் மேகக் கூட்டம் இந்த மலை குன்றுகள் மீது தவழ்ந்து செல்வதால் மேகமலை ஆனது.

கோடையில் அழகிய நீல வானத்தைப் பார்க்கலாம். ஏரி, நீர் நிலைகள் சூழ்ந்த அழகிய தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த சுற்றுலா மையம். அதிக ஆரவாரமில்லாத அமைதியான ஊர்.
வால்பாறை :

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவில் தமிழக பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை. சுற்றிலும் தேயிலை, காப்பி தோட்டங்கள், வானுயர மரங்கள், சோலைகள், அருவிகள், நீரோடைகள், தடுப்பணைகள் என்று இயற்கை பல வடிவங்களில் இங்கே தன்னை அலங்கரித்து நிற்கிறது.