முகவுரை :
தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் (“காய்”), தெங்கு + “காய்” = தேங்காய் (நன்னூல்.187) என அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும் பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பதுதான் தேங்காய். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்தக் கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்குப் பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். கோடை காலங்களில் வெயிலின் வெக்கையைத் தணிக்க இளநீரை அருந்துவர்.
பெயர்க்காரணம் :
Coconut என்னும் மரம் இந்தோனேசியா தீவுகளில் இருந்து இலங்கை ஊடாக தமிழ்நாடு மற்றும் கேரளக் கடற்கரையை அடைந்தது. எனவே, அது தென்காய் என்று அழைக்கப்பட்டது.
தென்+காய் = தென்காய் ( தென்னக்காய் )
தென்காய் => தெங்காய் => தெங்குகாய் => தேங்காய்
கொப்பரை தேங்காய் :
தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயைக் கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரைத் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதைக் கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய்க் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
சமையலில் :
தேங்காய் தென்னிந்தியாவில் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காயைத் துருவி அதைக் குழம்பில் மசாலாவுடன் சேர்த்துச் சமைத்தால் சமையலுக்கு மிகவும் சுவை சேர்க்கும். இதன் பயன்பாடு இந்தியா முழுவதும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவி வருகின்றது.
அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை தேங்காய் ஆனது பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியில் ஏகப்பட்ட நன்மைகள் காணப்படுகிறது. இந்த சதைப்பகுதியை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அளவோடு தேங்காயை எடுத்து வருவது ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த வழியாக அமையும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. பொதுவாகவே நம் இந்திய சமையலை பொருத்த வரை தேங்காயை சமையலில் அதிகமாக சேர்ப்பது உண்டு. தேங்காயில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
ஊட்டச்சத்துக்கள் :
தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. இதில் மாங்கனீசு,பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தேங்காய் சதையில் காணப்படும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன, இது உங்கள் செரிமான அமைப்பை மற்ற பிரச்சினைகளில் இருந்தும் வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. தேங்காய் சதையின் இதர நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
இதயத்திற்கு நல்லது :
தேங்காய் சதையில் காணப்படும் தேங்காய் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
இது குறித்து மக்களிடையே ஆராய்ச்சி செய்த போது ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டவர்களை விட தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உடல் எடையை குறைக்க :
தேங்காய் சதை உடல் எடையை குறைக்க உதவி செய்யும். இது வயிறு நிரம்பிய உணர்வை தரக் கூடியது. இதனால் நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படும். அது மட்டுமல்லாமல் தேங்காயின் சதைப்பகுதி கொழுப்பு எரிபொருளாக செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.
தேங்காய் சதை ஆரோக்கியமான கொழுப்பு , தாதுக்கள், நார்ச்சத்துக்கள் இவற்றின் வளமான மூலங்களாகும். மோனோ சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் உள்ளன. இவை உடனடியாக சீரணிக்கப்படுகிறது. தேங்காய் சதையில் உள்ள தாதுக்கள் மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் போன்றவை வெவ்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை. எனவே உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நோயெதிர்ப்பு சக்தி :
தேங்காய் சதையில் மாங்கனீசு என்ற தாதுக்கள் உள்ளன. ஒரு ஆய்வின்படி ஒரு கப் தேங்காய் சதையில் நிறைய மாங்கனீசு சத்துக்கள் காணப்படுகிறது. மாங்கனீசு உடலுக்கு எரிபொருளாக உதவுகிறது. மாங்கனீசு உட்கொள்வது உங்கள் உடல் வைட்டமின் ஈ மற்றும் இரும்பு போன்ற பிற ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்த உதவுகிறது.
தேங்காய் சதைப்பகுதியில் மாங்கனீசு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆன்டி வைரஸ் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இதர பயன்கள் :
தேங்காய் சதைப்பகுதியை சாப்பிட்டு வருவது உங்க இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்யும்.
இதிலுள்ள மாங்கனீசு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இவற்றில் காணப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் குளுக்கோஸ்க்கு மாற்றாக செயல்படுகிறது. அதாவது அல்சைமர் போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
சதைப்பகுதியை சாப்பிடும் முறை :
தேங்காயின் சதைப்பகுதியை உங்க பழ சாலட் அல்லது காய்கறி சாலட்டில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அப்படியே வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நீங்கள் சமைக்கும் குழம்பு மற்றும் பொரியல்களில் சேர்க்கலாம். ஏன் இதை ஸ்மூத்திகளில் கூட சேர்த்து பயன்படுத்தி வரலாம். இந்த தேங்காய் சதையை உலர்ந்த நிலையில் அல்லது ப்ரஷ்ஷான நிலையில் எடுத்துக் கொள்ளலாம்.