அறிமுகம் :
வெந்தய விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது என்பது தெரியும். ஆனால் வெந்தயக் கீரையை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை.
ஆனால் அது நம்முடைய உடலில் ஏற்படும் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க வைக்கிறது. அதுபற்றி விளக்கமாக இந்த பதிவில் காணலாம்.
வெந்தயக் கீரை :
ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் மருத்துவ பண்புகள் மற்றும் பயன்பாடுகள் ஏராளம். அதனால் தான் இந்த வெந்தய இலைகள் உலகளவில் பிரபலமடைந்து உள்ளது.
இதை இந்தியப் பாரம்பரிய உணவுகளில் கீரைகளில் ஒன்றாகப் பயன்படுத்துகிறோம். பெரியவர்களுக்கு இதன் அருமை புரியும். ஆனால், குழந்தைகளுக்கு பொதுவாக கீரை என்றாலே பிடிக்காது.
அதிலும் இந்த கீரை சற்ற கசப்புத் தன்மை கொண்டது. அதனால் பருப்போடு சேர்த்து மசித்தோ அல்லது சப்பாத்தியுடனோ சேர்த்துக் கொடுங்கள்.
ஊட்டச்சத்துக்கள் :
இந்த வெந்தயக் கீரை மற்றும் வெந்தய விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் பி6 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன். இதில் உடலுக்கு ஆற்றலும் ஆரோக்கியமும் தரும், சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரிஷன்கள் உள்ளன.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது:
இந்த மூலிகை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. இதன் ஹைபோகிளைசெமிக் பண்புகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மேம்படுத்துவதிலும் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் பயன்படுகிறது.
வெந்தய இலையில் உள்ள நார்ச்சத்துக்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுகின்றன. இதனால் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.
பால் சுரப்பை அதிகரித்தல் :
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது. வெந்தய விதைகள் மற்றும் இலைகள் இரண்டும் பால் உற்பத்தியை தூண்டுவதற்கான சிறந்த ஒன்றாக செயல்படுகிறது.
2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி கேலக்டாகோக் மூலிகை அதாவது வெந்தய மூலிகை டீ, தாய்மார்களுக்கு மார்பகப் பால் உற்பத்தியை மேம்படுத்தப் பயன்படுகிறது.
ஆரம்பகால பிரசவ காலத்தில் குழந்தையின் எடை கணிசமாக உயருவதற்கும் இந்த வெந்தயக் கீரை உதவி செய்கிறது.
கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்துகிறது :
வெந்தயத்திற்கு கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி உள்ளது. இதில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இது செரிமானத்தை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது.
இதய ஆரோக்கியம் :
வெந்தயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் பொருட்கள் உள்ளன. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. இது இரத்த அடர்த்தியை மெல்லியதாக்கி இரத்தம் உறைவதை தடுக்கிறது.
இதயம், நுரையீரல் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்ல உதவுகிறது. வெந்தயம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மலச்சிக்கலை குணப்படுத்துகிறது :
வெந்தயத்தில் ஏராளமாக நீரீல் கரையக் கூடிய நார்ச்சத்துகள் உள்ளன. இது குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி சீரண சக்தியை மேம்படுத்தி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.
பசியை தூண்டும் :
வெந்தய கீரை உயிர்ச்சத்து கொண்டுள்ள உணவாக விளங்குகிறது. வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஜீரண கோளாறுகளை சரி செய்யும். பசியைத் தூண்டும். இருமல் குணமாகும். நாவறட்சி நீங்கும்.கண்பார்வை தெளிவடைய செய்யும்.
காசநோய் குணமாக :
வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
தொண்டைப்புண் குணமாக :
வெந்தயக் கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் வாய்ப்புண் குணமாகும்.
தசை நார்களை பலப்படுத்த :
தொடர்ந்து இயக்கிக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் பலப்படும் தசை நார்களும் நரம்புகள் பலப்படும்.
சொறி,சிரங்கை நீக்க :
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
உடல் சூட்டை குறைக்க :
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
இடுப்புவலி நீங்க :
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.