அறிமுகம் :
ஒரு சில தாவரங்களின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மனிதர்கள் உணவாக பயன்படுத்த தக்கதாக இருக்கின்றன. மற்ற சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றன.
அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகை மரமாக முருங்கை மரம் இருக்கிறது. இந்த முருங்கை இலைகள் அல்லது முருங்கைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவகுணம் நிறைந்தது :
முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப் பொருள் ஆகும்.
இந்த முருங்கை உணவானது பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடிய மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் பயன்படுகிறது.
முருங்கை கீரை நன்மைகள்
மலச்சிக்கல் :
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒரு சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.
உடல் மற்றும் கை, கால் வலிகள் :
உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன.
இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.
மலட்டுத்தன்மை :
தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.
ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும்.
ரத்த சோகை:
ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது. பெரியவர்களை விட இந்த குறைபாடு குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு சிறந்த நிவாரணியாக முருங்கை கீரை இருக்கிறது.
பற்களின் உறுதி, வாய்ப்புண்:
நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், உணவை செரிமானம் செய்வதிலும் பற்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கின்றன.
அத்தகைய பற்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.
இரும்புச்சத்து :
நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது.
இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.
தலைமுடி :
நமது தலையில் இருக்கும் முடிகள் நமது உச்சந்தலையை வெப்பத்திலிருந்து காக்கிறது. அத்தகைய தலை முடிகள் அடர்த்தியாக வளரவும், உறுதியாக இருக்கவும் நமது உணவில் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் இருப்பது அவசியம்.
முருங்கைக் கீரையில் வைட்டமின்கள், புரத சத்துகள் அதிகம் உள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.
தோல் வியாதிகள் :
உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வெளிப்புற காரணிகளால் சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன.
முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.
தாய்ப்பால் சுரப்பு :
குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை சந்திக்கும் பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
சுவாச கோளாறுகள் :
குளிர்ந்த சீதோஷணம் நிலவும் காலத்திலும், தூசுகள் நிறைந்த இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும்.
வயிற்றுவலியை குணப்படுத்த :
ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலை சீராக வைத்துக் கொள்ளும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலி குணமடையும்.
கர்ப்பப்பை வலுப்படுத்த :
முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும். புரதச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.
ஆஸ்துமா :
முருங்கை இலைச்சாற்றுடன் 10 மிலி சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து அன்றாடம் காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோலின் வறட்சி குணமாகும்.
நஞ்சு முறிய :
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன் முருங்கைக் கீரையோடு இரண்டு பல் பூண்டு, சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுப்பதுடன் கடிப்பட்ட இடத்தில் சிறிதளவு தடவிவர நஞ்சு முறியும். புண்ணும் விரைவில் ஆறும்.
பார்வை கூர்மையாக :
கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும் முன் முருங்கைக் கீரைச்சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை கூர்மை பெறும்.
முருங்கையின் பாகங்களின் பயன்கள்
முருங்கையீர்க்கு :-
முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும்.
முருங்கைக்காய் :-
முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம்-1 சிட்டிகை சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வர செரிமான கோளாறுகளான மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
முருங்கைப்பூ :-
முருங்கைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
ஆண் மலடு நீங்கும். மேலும், கண் எரிச்சல், உடற்சூடு ஆகிய வற்றை குணமாக்கும், கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.
முருங்கைப்பட்டை :-
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம்குறையும்.
முருங்கைவேர் :-
முருங்கைவேர் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உடல் வலி, கைகால்வலி குறையும்.
முருங்கைப்பிசின் :-
முருங்கை பிசின் நீற்ற விந்துவை இறுக்கும். உடலுக்கு அழகு உண்டாகும். விந்துவைப்பெருக்கும். சிறுநீரை தெளிய வைக்கும்.
முருங்கைக்கீரையின் அற்புதங்கள் :
மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’ உள்ளது.
பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ‘ஏ’ உள்ளது.
வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது. தயிர் பாலாடைக் கட்டியில் உள்ளது போல 2 மடங்கு புரதச்சத்து உள்ளது.
முருங்கையில் நிறைந்துள்ள சத்துக்கள் :-
முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு
இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’ , பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’ , வைட்டமின் ‘பீ’ , காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், கொழுப்பு, ஆல்கலாய்ட்ஸ், டேனின், அமினோ ஆசிட்ஸ், சர்க்கரையை குறைக்கிறது.
மேலும் இதற்கு ஆண்டி – ஆக்சிடன்ட், ஆண்டி – டயாபடிக், ஆண்டி – அத்திரோஜெனிக், ஆண்டி – ஹைப்பர் டென்சிவ், ஆண்டி – மைக்ரோபியல், ஆண்டி – இன்பிள மேட்ரி, ஆண்டி – பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் செய்கைகள் உடையது.
அமினோ அமிலங்கள் :
திரியோனைன், வாலைன், மிதியோனைன், லியூசின், ஐசோலியூசின், பீனைல் அலைனைன், ஹிஸ்டிடீன், லைசின், அர்ஜினைன்.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது. ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.