வரலாறு :
கோத்தகிரி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1793 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை.
ட்ரெக்கிங் :
மலையேறும் அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
ஜான்சுல்லிவன் நினைவிடம் ரங்கசாமி தூண் மற்றும் சிகரம்
கேத்தரின் நீர் வீழ்ச்சி ஸ்நௌடன் சிகரம்
எல்க் நீர் வீழ்ச்சி நேரு பூங்கா
ஜான் சுல்லிவன் நினைவிடம் :
ஜான் சுல்லிவன் நினைவிடம் கோத்தகிரி நகரின் மையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. ஜான் சுல்லிவன் உதகையில் முதன் முதலில் குடியமர்ந்த ஆங்கில ஆட்சி அலுவலர் ஆவார். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிரிடப்படுவது பெருமளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இவரும் ஒரு காரணம் ஆவார்.
கி.பி 1788ல் பிறந்த இவர், கி.பி. 1855ல் இறந்தார். ஜான் சுல்லிவன் நினைவிடம் ஒரு காலத்தில் அவர் குடியிருந்த இடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. பெத்தக்கல் பங்களா என்று அறியப்படும் இங்கு நீலகிரி ஆவண மையம் மற்றும் நீலகிரி அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன.
கேத்தரின் நீர் வீழ்ச்சி :
கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் காப்பி பயிரிடப்படுவது துவங்கக் காரணமாக இருந்த M.D.காக்பர்ன் என்பவரது மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கோத்தகிரியில் முதலில் குடியேறியவர்களில் காக்பர்ன் தம்பதியரும் அடங்குவர்.
இது 250 அடி உயரத்திலிருந்து இரு நிலைகளாக விழும் நீர் வீழ்ச்சியாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் அரவேணு என்ற இடத்தில உள்ளது. இந்த அருவியின் முழுமையான காட்சியைக்காண டால்பின் மூக்கு வியூ பாயிண்டிற்கு செல்ல வேண்டும்.
இது நீலகிரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது. “கேத்தேஹாட ஹள்ளா ” என்பது உள்ளூரில் வழங்கும் மொழியில் கேத்தரின் நீர் வீழ்ச்சியின் பெயராகும்.
எல்க் நீர் வீழ்ச்சி :
எல்க் நீர் வீழ்ச்சி “உயிலத்தி” எனும் கிராமத்தின் அருகில் உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியே கண்ணுக்கு இனிய காட்சியாகும். மலைகளின் அமைதியான கம்பீரமும் , நீர்வீழ்ச்சியின் வல்லமையும் இணைந்து இவ்விடத்தை ஒரு கனவுலக காட்சியாகுகிறது.
எல்க் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ.தொலைவில் உள்ளது. எல்க் என்ற அறிய வகை மானின் பெயரில் விளங்கினாலும் அதற்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் அங்கு காணக்கிடைக்கும் காட்சியோ உங்களை வசியப்படுத்தும் வகையில் இருக்கும்.
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் :
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1794 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோத்தகிரியில் இருந்து இருபது கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் உள்ளூர் தெய்வமாக கருதப்படுகிறது. இந்த சிகரத்திலுள்ள கோயில் அவர்கள் புனித பயணம் செல்லும் ஒரு முக்கிய இடமாகும்.
புராணங்களின்படி, இங்குள்ள தெய்வமான ரங்கசாமி பெருமான் தன் மனைவியுடன் சண்டையிட்டு, தான் தங்கியிருந்த கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள காரமடை என்ற ஊரிலிருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த சிகரத்தின் அடிவாரத்திலுள்ள இரு காலடித்தடங்கள் இந்தப் புராணக்கதைக்கு சான்றாக கூறப் படுகிறது.இந்த சிகரத்தின் தென்மேற்குப் பகுதியில்நானூறு அடி உயரமுள்ள ரங்கசாமி தூண் அமைந்துள்ளது.
ஸ்நௌடன் சிகரம் :
ஸ்நௌடன் சிகரம், இங்கிருந்து கிடைக்கும் மைசூரின் மனம் மயக்கும் காட்சிக்காக புகழ் பெற்றது. நீலகிரியிலிருந்து மைசூரின் அழகிய காட்சி காணக் கிடைக்கும் இடம் இது ஒன்று தான். கோத்தகிரியின் பிரதான சாலையில் அமைந்துள்ள இது கடல் மட்டத்திலிருந்து 2677 மீட்டர் உயரத்தில் உள்ளது.
நீலகிரியிலேயே உயரமான சிகரமான தொட்டபெட்டாவுக்கு அடுத்தபடியாக ஸ்நௌடன் சிகரம் ஒன்று தான் இவ்வளவு உயரம் கொண்டது. இங்கிருந்து கிடைக்கும் மைசூரின் அழகிய காட்சி தான் இவ்விடத்தை இங்குள்ள மற்ற சிகரங்களில் இருந்து வேறுபடுத்துகிறது.
நேரு பூங்கா :
நேரு பூங்கா கோத்தகிரி நகரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தனியார் பூங்கா பயணிகளுக்கு ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது.பொதுமக்கள் உபயோகத்திற்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் பூக்களின் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தக் கண்காட்சி நீலகிரியில் மட்டுமே வளரும் பல அரிய வகைப் பூக்களை , குறிப்பாக அரிய வகை ரோஜாக்களை பார்வைக்கு வைப்பதற்கு பெயர் பெற்றது.
கொடநாடு வியூ பாயின்ட் :
கோத்தகிரி மலைப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு நாம் செல்வதற்கு பல காரணங்கள் மலைகளின் அமைதியை ரசிப்பதாகவோ, அரிய வகை மிருகங்களை காண்பதாகவோ, இங்குள்ள மலர்களின் நறுமணத்தை நுகர்ந்து மன அமைதி பெறுவதாகவோ இருக்கலாம்.
ஆனால் கொடநாடு வியூ பாயிண்டிற்கு வருவதற்கு ஒரே காரணம் அங்கு காணக் கிடைக்கும் கோத்தகிரியின் முழுமையான காட்சியமைப்பேயாகும். கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள கொடநாடு வியூ பாயின்ட் , அதன் அமைவிடத்தின் காரணத்தால் டெர்மினஸ் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
கொடநாட்டில் இருந்து காணக் கிடைக்கும் சில காட்சிகள் : ரங்கசாமி சிகரம், தமிழ்நாடு – கர்நாடாக எல்லையின் சில பகுதிகள், மோயார் ஆறு , பவானிசாகர் அணை இவை எல்லாவற்றுக்கும் மேலாக பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் ஆகியன.