அறிமுகம் :
கற்றாழை (Aloe vera) பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: மூடிய விதைப்பயிர்கள்
தரப்படுத்தப்படாத: மோனோகாட்கள்
வரிசை: அஸ்பாரகல்கள்
குடும்பம்: அஸ்ஃபோடெலிசீ
பேரினம்: கற்றாழை
கேரோலஸ் லின்னேயஸ்
உற்பத்தி :
இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியின் மலைகளிலும், ஆப்பிரிக்காவின் தீவுகள், அராபியத் தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (ஆந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
வகைகள் :
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிறத் திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.
கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை:
குர்குவா கற்றாழை – அலோ பார்படென்ஸ் (Aloe vera) கேப் கற்றாழை – அலோ பெராக்ஸ் (Aloe ferox) சாகோட்ரின் கற்றாழை – அலோ பெர்ரி (Aloe perryi)
அடங்கியுள்ள பொருள்கள் :
அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில்தான் பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இத்துடன் சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளன.சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் உள்ளன. மேலும் அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளன.
மருத்துவ குணங்கள் :
மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சித்த மருத்துவத்தில் கருப்பை தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
அழகு சாதனப் பொருட்களில் :
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக முறையாக அதன் “கூழி” உலகெங்கிலும் சருமப்பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது. இலைகளில் உள்ள கூழ் (ஜெல்) கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
மருத்துவத்தில் :
கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, குடல்புண், கருப்பை நோய்கள், மூலநோய், கண்ணோய்கள் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.
இனங்கள் :
கற்றாழை இனத்தில், சுமார் 500 வகை இனங்கள் உள்ளன. இதில் உள்ளடங்கும் இனங்களாவன:
- ஆலோ வேறா – உடல்நல பராமரிப்பு மற்றும் உடல்நல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
- ஆலோ அர்போரெசென்ஸ் – உடல்நல பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது
- ஆலோ அரிஸ்டாட்டா – பந்த செடி, இழை வார் கற்றாழை
- ஆலோ டிக்கோடோமா – க்வீவர் மரம் அல்லது கோக்கெர்பூம்
- ஆலோ நீரீன்சிஸ்
- ஆலோ வெரீகட்டா – கௌதாரி மார்புடைய கற்றாழை , புலி கற்றாழை
- ஆலோ பார்பாடென்சிஸ் – குருத்து கற்றாழை , பொதுவான கற்றாழை , மஞ்சள் கற்றாழை , மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை . இது ஆலோ வேறாவின் பழைய பெயராகும்.
- ஆலோ வைல்டீ