அறிமுகம் :
‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் பெருமையுடைய ஏலகிரி, வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடைவாசஸ்தலமாகும். பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து கிராமிய சூழலில் அமைந்துள்ள இப்பகுதியில் தூய்மையான காற்று வீசுகிறது.
ஏலகிரி :
ஏலகிரி என்னும் மலைவாழிடம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்.
பசுமைமாறா மரங்கள் :
அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன.
மக்கள் :
சுமார் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர்.
இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
சலகாம்பாறை அருவி :
ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் சலகம்பாறை அருவி உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனுார் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது.
பூங்கானூர் ஏரி :
ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த இடம் புங்கனூர் செயற்கை ஏரி. 55 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி உண்டு. ஏரியின் நடுவில் செயற்கை நீருற்று உள்ளது.
குழந்தைகள் பூங்கா :
ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் இருபுறமும் புல் தரைகள், அழகிய செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கை சிற்றருவி, தொட்டில் மீன்கள், ரோஜா தோட்டம் என கண்கவர் அம்சங்களும் உண்டு.
மூலிகை பண்ணை :
ஏரியின் அருகே மங்கலம் கிராமத்தில் மூலிகை பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான மூலிகைகள் கிடைக்கின்றன. அரசு பழப் பண்ணை ஒன்றும் உள்ளது. இதில் மலையில் விளையும் பழங்களை பயணிகள் வாங்கிச் செல்லலாம்.
சுவாமி மலை :
சுவாமிமலை என்ற பெயரில் அழகிய சிவன் கோயில் ஒன்றும் ஏலகிரி மலையில் அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இடமான இந்த சுவாமிமலைப் பகுதிக்குச் செல்ல மங்கலம் கிராமத்தில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாத் துறை நடைபாதை அமைத்துள்ளது.
பாராகிளைடிங் :
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் புங்கனூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அத்தனாவூரில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முன்னதாக பாராகிளைடிங் சாகசங்களை உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து செய்து காட்டுவதும் கண்கொள்ளக் காட்சி. ஏலகிரியில் சுற்றிபார்ப்பதற்கான இடங்களும் குறைவு, இருந்தாலும் மலையேற்ற பயிற்சிக்கு சிறந்த இடம்.
தொலைநோக்கி இல்லம் :
மலைக்கு செல்லும் பாதையில் 14-வது கொண்டை ஊசி வளைவில் தொலைநோக்கி இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
வனத்துறை பராமரிப்பில் உள்ள இந்த இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளையும், தொலைவில் அமைந்துள்ள வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரப் பகுதிகளையும் கண்டுகளிக்க முடியும்.