கொடைக்கானல் :
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
பரப்பளவு :
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும்.
காலநிலை :
கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 6 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
கொடைக்கானல் ஏரி :
கொடைக்கானல் ஏரி படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாகும். மிதிவண்டிப் பயிற்சியாளர்கள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சியாளர்களுக்கு கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சாலைகள் சிறப்பிடமாக உள்ளது.
குறிஞ்சி ஆண்டவர் கோயில் :
குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
எனவே, இந்த இடம் இதற்கு புகழ் பெற்றது. இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி ஈஸ்வரன் என்றழைக்கப்படும் முருக கடவுளுக்காக அமைக்கப்பட்ட கோயில். 1936-ஆம் வருடம் கட்டப்பட்ட கோயில் இது.
பிரையண்ட் பார்க் :
கொடைக்கானல் நகரத்தில் மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது இந்த ப்ரையான்ட் பூங்கா. இங்கு சுற்றுலாப் பயணிகளின் பார்வை அரிதாகவே படுகிறது. கோடை ஏரிக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா, பல அழகிய செடி, மரங்களால் சூழப்பட்டுள்ளது.
கோக்கர்ஸ் வாக் வழியாக நடந்து சென்றால் இந்த பூங்காவுக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளில் குடும்பத்துடன் வருபவர்கள் இங்கு வருகை தந்து செல்வார்கள்.
கோக்கர்ஸ் வாக் :
1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது.
இந்த இடம் மிக நீளமான வளைந்த பாதைகளோடு ஆங்காங்கே அழகிய மரங்கள் மற்றும் பூக்களுடன் காட்சி அளிக்கும். இங்கே உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கின் அழகையும் மலைக்கு இறக்கத்தில் அமைந்துள்ள நகரங்களையும் கண்டு களிக்கலாம். இயற்கையை ரசித்து கொண்டே நடைக்கொள்ள இது மிகவும் ரம்மியமான இடம்.
தூண் பாறைகள் :
கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது. இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன.
இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. எனவே இதுவும் மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது.
குணா குகை :
மலைகளின் ராணி என்று கொண்டாடப்படும் கொடைக்கானலில் உள்ளது தான் இந்த குணா குகை. நடிகர் கமலஹாசன் நடித்த குணா திரைப்படம் இங்கு படமாக்க பட்ட பிறகுதான், இது குணா குகை என்று பெயர் பெற்றது. அதற்கு முன்பு வரை இதன் பெயர் பேய்களின் சமையலறை என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வெள்ளி நீர்வீழ்ச்சி :
வெள்ளி நீர்வீழ்ச்சி கொடைக்கானலில் உள்ள மிக பெரிய மற்றும் அழகிய அருவி.கொடைக்கானலில் இருந்து 8 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும்.
இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ. கொடைக்கானலின் உள்ளே நுழையும்போதே இந்த அருவி மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
நீர் வீழ்ச்சி என்றாலே அனைவருக்கும் அதில் குளித்து மகிழ வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் இங்கு குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். ஏனென்றால், எந்த நேரமும் நீரின் வேகம் அதிகரிக்கலாம்.
தற்கொலை முனை :
தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான மற்றும் ஆபத்தான பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.