கம்பராமாயணம் :
கம்பராமாயணம் எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும்.
மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
வழி நூல் :
இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார்.
வடமொழி கலவாத தூய தமிழ் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.
காப்பியக் காலம் :
கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள்.
வையாபுரிப்பிள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இந்த கம்பர் தனியன்களில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழில் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு பொ.ஊ. 885ல் இராமாயணம் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.
மா. இராசமாணிக்கனார் பொ.ஊ. 1325க்கும் முன்பே கம்பராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கன்னட நாட்டில் உள்ள கல்வெட்டினைக் கொண்டு குறிப்பிடுகிறார். எனினும் இறுதியாக கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனோடு மாறுபட்டு தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஓரங்கல் எனும் பகுதியில் தங்கியிருக்கிறார்.
அப்போது அவ்விடத்தில் இருந்த அரசன் பிரதாபருத்திரன் என்பவராவார். அவருடைய காலம் பொ.ஊ. 1162–1197 ஆகும். இதனால் கம்பர் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கம்பராமாயணத்தினை இயற்றியுள்ளார்.
நூல் பற்றி :
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. இதில் 10569 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும்.
ஏழாம் காண்டமாகிய “உத்திர காண்டம்” என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய “ஒட்டக்கூத்தர்” இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்குக் கதி” என்பர்.
யாப்பு வண்ணங்கள்,இலக்கணங்கள் :
கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே ” என்றொரு கணக்கீடும் உண்டு.
கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.
தொன்மங்கள் :
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார்.
இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.
இராமாயணம் அரங்கேற்றம் :
கம்பர் இராமாயணத்தினை எழுதியபின்பு, அதனை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கத்தில் உள்ளோர்கள், தில்லை தீட்சதர்கள் ஒப்புக் கொண்டால் இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யலாம், இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். அதனால் கம்பர் தில்லை சென்றார்.
அங்கே தீட்சிதர்களாக இருக்கும் மூவாயிரம் நபர்களும் ஒன்று சேர்க்க இயலாமல் இருந்த போது, ஒரு குழந்தை இறந்தது. அந்தக் குழந்தைக்காக அனைத்து தீட்சிதர்களும் கூடி நின்றார்கள். அப்போது கம்பர் தன்னுடைய இராமாயணத்திலிருந்து நாகபாசப் படலம் என்ற பகுதியைப் பாடி குழந்தையை உயிர்ப்பித்தார். தீட்சிதர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.
தான் இயற்றிய இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதியும் பெற்றார்.திருவரங்கத்தில் உள்ளவர்கள் அரங்கேற்றத்திற்கு முன்பு சடகோபரைப் பாடும் படி கூறியமையால், கம்பர் சடகோபர் அந்தாதியைப் பாடினார். அதன் பின்பு இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.