ஒரு சிறிய அறிமுகம் :

ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏரிகள், அடர்ந்த காடுகள், பசும் புல்வெளிகள், வித்தியாசமான தாவரங்கள், தூய்மையான காற்று என்று மக்களை கவர்ந்திழுக்க கூடிய ஏராளமான சிறப்பம்சங்கள் ஊட்டியில் இருக்கின்றன.
நீலகிரி :
நீல நிற புகை போன்ற படலம் எப்பொழுதும் சூழ அமைந்துள்ளதால் நீலகிரி என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவு 2549 ச.கி.மீ, தலைமையிடம் உதகமண்டலம் (ஊட்டி) கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரம் உள்ளது.

ஆண்டிற்கு 121 சென்டிமீட்டர் மழை பெய்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதியில் நீலகிரி மாவட்டம் உள்ளது.
பேருந்து மற்றும் இரயில் வசதி :
உதகமண்டலம் வந்தடைய தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.

அருகில் உள்ள விமான தளம் கோவை மாவட்டம். கோவை – மேட்டுப்பாளையத்தை அடுத்து மலையில் ஊட்டி வரை குறுகிய இரயில் தடம் உண்டு.
பொட்டானிக்கல் கார்டன் :
அரசு தாவரவியல் தோட்டமான இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் மற்றும் தாவரங்கள் அழகு செய்கின்றன. 2 கோடி வருடங்களுக்கு முந்திய கல்மரம் இங்கு உள்ளது.

திரு. எம். சி. ஐஓர் என்ற ஆங்கிலேயர் வடிவமைத்தார். இதன் பரப்பளவு 22 ஹெக்டேர். இது கடல் மட்டத்திலிருந்து 2400-2500 அடி உயரத்தில் மலைச்சரிவை ஒட்டி இத்தோட்டம் அமைந்துள்ளது.
ஏராளமான மலர் செடி வகைகள், அபூர்வ தாவரங்களும், மூலிகை செடிகளும் இங்கு உள்ளன.இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தொட்டபெட்டா :
புகழ் பெற்ற இந்த மலை உச்சி, மேற்கு நிலப்பகுதியின் நடுவில் வடக்கு தெற்காக ஓடி தொட்டபெட்டாவில் அதிகபட்ச உயரத்தை எட்டுகிறது. தொட்டபெட்டா ஊட்டியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு தென் கிழக்காக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திலேயே அதிக உயரமான சிகரம் தொட்டபெட்டா தான். இதன் உயரம் 2636 மீட்டர்.
பைகாரா :
மாவட்டத்தில் பெரிய ஆறு பைகாரா, தோடர் பழங்குடியினர் இந்த ஆற்றை புனித நதியாக கருதுகின்றார்கள். முக்குர்த்தி உச்சியிலிருந்து இந்த ஆறு புறப்படுகிறது. பின்னர் பல குன்றுகள் வழியே பயணம் செய்து வடக்குப் பக்கமாக பொதுவாக ஓடி, பின்னர் பிராந்தியத்தின் முனையைத் தொடும்இடத்தில் மேற்காகத் திரும்புகிறது.

இந்த ஓட்டத்தில் பல இடங்களில் அருவியாகக் கொட்டி கீழ் நோக்கி இறங்குகிறது. இதன் கடைசி இரண்டு அருவிகள் முறையே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பைக்காரா அருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அருவிகள் ஊட்டியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அவிலாஞ்சி :

இந்த இடம் ஊட்டியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எமரால்டு பாரஸ்ட் வழியாக மேல் பவானி செல்லும் வழியில் உள்ளது. இந்த இடத்துக்கு செல்லும் ஒவ்வொரு திருப்பத்தில் இருந்து பார்த்தால் அற்புதமான,அழகிய வனக்காட்சிகள் தெரியும்.
சில்ட்ரன்ஸ் பார்க் :

சில்ட்ரன்ஸ் பார்க் ஏரியின் கிழக்கு பக்கம் முடிவில் உள்ளது. இங்கு உள்ள புல்வெளியில் இங்கு பூத்திருக்கும் பூக்களும் எந்தக் குழந்தையின் மனதில் மகிழ்ச்சியை பேரானந்தத்தையும் ஏற்படுத்தும் அவர்களை அறியாமலேயே விளையாட ஓடுவார்கள்.
லேடி கானிங் சீட் :
லேம்ப்ஸ் ராக்கில் இருந்து மேலும் இரண்டு கிலோமீட்டர் சென்றால் இந்த இடத்தை அடையலாம். இந்த இடத்திற்கு இப்பெயர் வரலாற்று முறையான காரணம் ஒன்று உண்டு.

நமது முதல் சுதந்திரப் போராட்டம் 1857ஆம் ஆண்டு எழுச்சி பெற்றது. அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கானிங் பிரபு இப் போராட்டத்தை நசுக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய மனைவியான லேடி கானிங் அம்மையாரோ இப்பகுதியில் தங்கியிருந்து ஓவியம், குதிரைச் சவாரி, செடி வளர்த்தல் என்று உல்லாசமாக பொழுது போக்கி கொண்டிருந்தார்.
ஊட்டி ஆர்வமுள்ள இடங்கள்
முக்கூர்த்தி நேஷனல் பார்க் :
நீலகிரி மலையின் உயரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா நீலகிரி பையோ-ஸ்பியரின்ஒரு பகுதியாகும். ஊட்டியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தேசிய பூங்கா உள்ளது.

பர்சன்வேலி, போர்புமண்ட், பைக்காரா போன்ற பகுதிகளிலிருந்து வண்டிப் பாதைகள் இப்பகுதிக்கு உண்டு. இங்குள்ள ஆறுகளிலும், முக்கூர்த்தி ஏரியிலும் மீன் பிடித்து மகிழலாம்.
கெய்ரன் ஹில்ஸ் :

அவிலஞ்சி குன்றுக்குச் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. இங்கு அற்புதமான சைப்ரஸ் மரங்கள் அமைந்த நீண்ட இயற்கையான நடைபாதை அமைந்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிஅளிக்கக் கூடியது.
கிளன்மோர்கன் :
ஊட்டியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி இயல்சீர்மை பெற்ற இடம் இது. இங்கிருந்து சிங்கரா மின் நிலைய பணியாளர்கள் மூலமாக சிங்கரா மின் நிலையத்திற்கு செல்கிறார்கள். இதற்கான தூரம் நாலு கிலோமீட்டர்.

இங்கு அழகான சோலைகளையும் சில சமயம் காட்டு மிருகங்களையும் பார்க்கலாம். ஆனால் மின்வாரியத்திடம் முன் அனுமதி பெற்றால் தான் பயணம் செய்ய முடியும்.
குதிரை பந்தய மைதானம் :

ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது குதிரைப்பந்தய மைதானம். இந்தியாவின் பிரபலமான குதிரை பந்தய மைதானங்களில் ஒன்று என்ற பெருமையுடைய இதன் ஓடுதள நீளம் 24 கிலோ மீட்டர்.
கல்கட்டி அருவி :

ஊட்டி-மைசூர் சாலையில், ஊட்டியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் கல்கட்டி மலைத்தொடரில் உள்ளது இந்த அருவி. இது நாற்பது மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.
கெட்டி வேலி வியூ :

குன்னூர் சாலையில் அமைந்துள்ள இந்த பசுமை பள்ளத்தாக்கு உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழ்பெற்றது. அழகிய சிறுமலை கிராமங்கள் வரிசைத் தொடராக, கோவை மற்றும் மைசூர் மேட்டு சமவெளி வரை நீள்கிறது.
லேக் ஹவுஸ் :

புகழ் பெற்ற ஊட்டியில் உள்ள ஏரி. இந்த ஏரியில் பெடல் படகுகள்,ரோ படகுகள், போன்றவற்றை ஓட்டி மகிழலாம். மேலும் இங்கு மினிர யில்கள் டான்சிஸ் கார்கள் போன்ற கவர்ச்சி வாகனங்களும் உபரி மகிழ்ச்சியைத் தரும்.
வெஸ்ட்டன் கட்ச்மென்ட் :

பார்சன் பள்ளத்தாக்கில் இருந்து 20 கிலோமீட்டர். இதுவும் மிகவும் ரம்மியமான ஒரு இடம். இங்க பச்சைப் பசும் புல்வெளிகளும் சோலைகளும் உள்ளன.
ஊட்டி சுற்றுலா தலங்கள்
டைகர் ஹில் :

தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில், ஊட்டி நகருக்கு கிழக்கே உள்ள இடம் டைகர் ஹில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு குடிநீர்த் தேக்கம் உள்ளது.
அப்பர் பவானி :
ஊட்டியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல் பவானி. அதேபோல கோர குண்டாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலும், அவலாஞ்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

மிகவும் ரம்மியமான இடம் இது. இயற்கை வளமிக்க இந்த இடத்தில் காட்டு உயிர்கள் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் வாழ்கின்றன.
வென்லாக் டவுன்ஸ் :

இந்தப் பரந்த சமவெளியில் ஜிம்கானா கிளப், செம்மறி ஆட்டு பண்ணை மற்றும் பசும் புல்வெளி, எப்போதும் குளிர்ச்சியை தக்க வைத்திருக்கும் சோலைகள் என்று இந்த பகுதி முழுவதுமே அழகுடன் காட்சியளிக்கும்.