அறிமுகம் :
பலவகையான கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், தீர்வு என்னவோ கிடைத்தபாடில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன.
சந்தனம் :
சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
ரோஜா மொட்டு :
ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.
வேப்பிலை :
வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.
சோற்றுக்கற்றாழை :
சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
குப்பைமேனி இலை :
அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும்.
பூண்டு :
வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.
ஃபேஸ் பேக்குகள் :
ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி, பருத்தொல்லை அகலும்.