அறிமுகம் :
இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை. சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.
பிரண்டை வகைகள் :
இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
மருத்துவ மூலிகை :
இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.
மெலிந்த உடல் குண்டாக :
ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
ரத்த ஓட்டம் சீராகும் :
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
எலும்பு முறிவு :
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.