குகனைச் சந்தித்தல் :
கோசலை நாட்டைக் கடந்து கங்கைக் கரையை அடைந்தான் பரதன்; சேனைகள் எழுப்பிய துகள், அவன் வருகையைக் குகனுக்கு அறிவித்தது. குகன் கொதித்து எழுந்தான்; தன் படையைக் கொண்டு பரதன் எதிர்க்க அவற்றை அருகில் கூவி அழைத்தான்.
‘அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகனாகிய இராமன் ஆளாமல், வஞ்சனையால் அரசு வவ்விய மன்னர்கள் வந்திருக்கிறார்கள்; யான் விடும் அம்புகள் தீ உமிழும் தகையன; அவை அவர்கள் மார்பில் பாயாமல் போகா; அவர்கள் தப்பிப் பிழைத்துச் சென்றால் என்னைக் கேவலம் “நாய்க்குகன்” என்று உலகம் ஏசும்;
‘குரைக்கத் தெரியுமே தவிரக் கடிக்கத் தெரியாது’ என்று உலகம் இகழும். ஆழம் மிக்க இவ் ஆற்றை இவர்கள் எப்படி என் உதவி இல்லாமல் கடக்க முடியும்? யானைப்படை கொண்டு வந்தால் அதைக் கண்டு நடுங்கிப்போக நான் ஒரு சிற்றெலியா? ‘தோழமை’ என்று அவர் சொல்லிய சொல் ஒன்றேபோதும்;
அவர்களை எதிர்த்து உயிர்விட்டால் அதுவே எனக்குப் பெருமை; ‘இந்தக் கோழை வேடன் எதிர்த்து இறக்கவில்லை’ என்ற பழியை நான் ஏற்கமாட்டேன்,” ‘பரதனது சேனையைச் சாடி அழித்து இராமனே ஆளும்படி வேடுவர் ஆட்சியை மீட்டுத் தந்தனர்” என்ற புகழுக்கு உரிமை உடையவன் ஆவேன்;
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்கள், நாம் ஆளும் காடும் கொடுக்க மறுக்கிறார்களே! படை எடுத்து அழிக்க வருகிறார்களே!’ என்று வீரர்களிடம் உரை நிகழ்த்தினான்.இராமனுக்கு அன்பனாகிய குகன், இவ்வாறு பேசி நிற்பதைக் கண்ட பரதன், ‘இவன் யார்’? என்று சுமந்திரனைக் கேட்டான்.
சுமந்திரன் அவனை அறிமுகப்படுத்தினான். ‘கங்கையின் இருகரையும் இவன் ஆட்சிக்கு உட்பட்டவை; அளவற்ற மரக்கலங்களுக்கு உரியவன்; இராமனுக்கு உயிர்த் துணைவன்; களிறு போன்ற திண்மையும், பெருமையும் உடையவன்; கடல் போன்ற படைகளை உடையவன்; ‘குகன்’ என்பது அவன் பெயர்; உன்னைக் கண்டு வரவேற்க நிற்கின்றான்’ என்று கூறினான்.
‘சுமந்திரன் கூறிய சொற்களைக் கேட்டுப் பரதன் உள்ளம் குளிர்ந்தான்; இராமனுக்கு இனிய துணைவனாய் அவன் என்னைக் காண்பதற்குமுன் நானே போய் அவனைக் காண்பேன்’ என்று சொல்லிப் புறப்பட்டான். மரவுரி ஆடையும், மாசடைந்த மேனியும், சிரிப்பு இழந்த முகமும், கனியும் துயரமும் உடைய பரதனைக் கண்டான் குகன்; கையில் இருந்த வில் தானாகவே கீழே நெகிழ்ந்து விழுந்தது; விம்மி விம்மி அழுதான்.
‘தாயுரை கொண்டு, தந்தை உதவிய தரணியைத் ‘தீவினை’ என்று கூறித் துறந்து, சிந்தனையை முகத்தில் தேக்கிக் காட்டுகிறான் என்றால் அவனை விடச் சிறந்த தியாகி யாரும் இருக்க முடியாது; புகழுக்கு உரியவன் ஆகிவிட்டான்; அவன் தன்மைக்கு ஆயிரம் இராமர் ஒன்று கூடினும் நிகராய் இருக்க முடியாது’ என்று கூறிப் பாராட்டினான்.
‘இராமன் எங்கே உறங்கினான்? இலக்குவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்விகளைப் பரதன் கேட்டான். “அல்லை ஆண்டு அமைந்தமேனி அழகனும் அவளும் துஞ்ச, வில்லையூன்றியகையோடும் வெய்துயிர்ப்போடும் வீரன், கல்லையாண்டு உயர்ந்த தோளாய்! கண்கள்நீர் சொரியக் கங்குல் எல்லைகாண் பளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம் என்றான்”.
அழகனும் அவளும் துயில் கொள்ள இளவல் அவர்களுக்காகக் காவல் காத்தான்; உறக்கம் நீத்தான் என்று குகன் விவரித்தான். ‘யான் துன்பத்துக்குக் காரணம் ஆயினேன்; இலக்குவன் அதைக் துடைக்க நின்றான்; அவன் அன்புக்கு எல்லையே இல்லை; என் அடிமைத்தனம் அழகிது’ என்றான் பரதன். நங்கையர் நடையின் அன்ன நாவாய்கள் கங்கையில் இடமே இல்லாதபடி நிறைந்துவிட்டன; அவை வந்தவர்களைக் கரை ஏற்றின.
தன் தம்பியும், தாயர் மூவரும்,சுமந்திரனும், குகனும் ஒரே படகில் ஏறிச் சென்றனர். குகன் கோசலையைத் தொழுது நோக்கி, ‘இவர் யார்?” என்று வினவினான். ‘தசரதன் முதல்தேவி; இராமன் தாய்; அவனைப் பெற்றதால் அடைந்த செல்வத்தை யான் பிறந்ததால் இழந்த பெரியாள்’ என்றான் பரதன். அடுத்துச் சுமித்திரையை அறிமுகம் செய்தான்.
‘இராமனுக்குப் பின்பிறந்தான் என்னும் பெருமைக்குரிய இலக்குவனைப் பெற்றெடுத்த பெருமை உடையவள் இவள்’ என்றான். அடுத்துக் கைகேயியை அறிமுகம் செய்தான். “இத் துன்பங்களுக்குகெல்லாம் காரணமாய் நின்றவள்; பழி வளர்க்கும் செவிலித்தாய்; இவள் குடலிலே கிடந்து பாவம் செய்தவன் நான்; இந்த உலகம் களைஇழந்து, உயிர்ப்பு அடங்கி இருப்பதற்கு இவள்தான் காரணம்;
இந்நிலையில் இடரே இல்லாத முகத்தினைடையளாய் இவள் இருக்கிறாள் என்றால், இவளே என்னை “ஈன்றவள்” என்றான். தாய் என்பதால் இரக்கமற்ற அவளையும் குகன் கையெடுத்து வணங்கினான். தோணியை விட்டு இறங்கிய தாயர் மூவரும் சிவிகையில் ஏறினர். குகனோடு பரதன் காலால் நடந்தான். அனைவரும் பரத்துவாசர் இருப்பிடத்தை அடைந்தனர். அவர் இவர்களை இன்முகம் காட்டி வரவேற்றார்.
திருவடி சூட்டிய வரலாறு :
பரத்துவாசர், ‘ஆள்வதை விட்டுக் காட்டுக்கு வந்தது ஏன்?’ என்றார். ‘மாள்வதற்கு வழிதேடி வந்துள்ளேன்; முறை தவறி எனக்குத் தந்த ஆட்சியை நிறை மனத்தோடு இராமன் ஏற்றுக்கொள்ள வேண்டுதற்காக வந்தேன்; அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால் யான் மாள்வது உறுதி’ என்றான் பரதன். முனிவர் மனம் குளிர்ந்தது; சேனையையும்; மற்றவர்களையும் வரவேற்று உபசரித்தார். அன்று இரவு அவர்கள் அங்குத் தங்கி இருந்தனர்;
பொழுது விடிந்ததும் மறுநாள் பாலைவன வழியைக் கடந்து, அனைவரும் சித்திரகூடம் நோக்கிச் சென்றனர். சேய்மையிலேயே பரதன் சேனையோடு வருவதை இலக்குவன் கண்டான்; அவன்மீது ஆத்திரம் கொண்டான்; குகனைப் போலவே அவனும், பரதன் படைகொண்டு தாக்க வந்திருக்கிறான், என்று தவறாய் நினைத்தான்.
அவனை ஆற்றுவது இராமனுக்கு அரும்பாடு ஆயிற்று. “நம் குலத்து உதித்தவர் இதுவரை தவறே செய்ததில்லை. அறம் நெகிழ்ந்தது இல்லை. பரதன் நீதிநெறியினின்று நிலை குலையான். அவன் இங்கு வருவது ஆட்சியைத் தரவே தவிர மாட்சிமை நீங்கிப் போரைத்தொடுக்க அல்ல” என்று விளக்கினான். படையை நிறுத்திவிட்டுப் பரதனும் தன் தம்பி சத்துருக்கனனோடு முந்திச் சென்றான்.
இறந்த தந்தையை எதிர் கண்டதுபோலப் பரதன் இராமனைச் சந்தித்தான். “அறத்தை நினைத்தாய் இல்லை; அருளையும் நீத்தாய்; முறைமையைத் துறந்தாய்” என்று கூறி இராமன் அடிகளில் விழுந்து வணங்கினான். அறத்தைத் தழுவியதுபோல இராமன் பரதனைத் தழுவினான்;
அவன் புனைந்த வேடத்தைப் பன்முறை நோக்கினான். “துயருற்ற நிலையில் அயர்ச்சி கொண்டுள்ளாய்; தந்தை வலியனோ?” என்று கேட்டான். “ஐயா! நின் பிரிவு என்னும் துயரினால் மெய்யைக் காக்க வேண்டித் தன் மெய்யைவிட்டு அவன் மேல் உலகம் சென்றுவிட்டான்” என்றான் பரதன்.
‘விண்ணிடை அடைந்தனன்’ என்ற சொல் புண்ணிடை நுழைந்த வேல்போல் செவிபுகு முன்னர் கண்ணும், மனமும் சுழல மண்ணிடை விழுந்தான் இராமன்; இடியேறு உண்ட நாகம்போல உணர்வு நீங்கினான். இராமன் மனங்கலங்கிப் பலவாறு புலம்பினான்;
“நந்தா விளக்கனைய நாயகனே! தனியறத்தின் தாயே! அருள் நிலையே! எந்தாய்! பகை மன்னர்க்குச் சிங்க ஏறு போன்றவனே! நீ இறந்தனையே! இனி வாய்மைக்கு யார் இருக்கிறார்கள்? ஆட்சித் தலைமை இறக்கி வைத்து விட்டு நீ விரும்பிய ஓய்வு இதுதானா?! இதுதானா நீ செய்ய நினைத்த தவம்?” என்று கதறினான்.
இராமனை வசிட்டர் தேற்றத் தொடங்கினார்; பரத்துவாசரும், மற்றைய முனிவர்களும், அமைச்சர்களும், அரசர்களும், சேனைகளும் வந்து சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கூறிய ஆறுதல் மொழிகள் அவலத்தைத் தணித்தன. அவர்கள் இறுதிக் கடனை அவன் செய்கையால் செய்ய வேண்டினர். இராமன் புனலிடை மூழ்கினான்;
சடங்கின்படி தருப்பண நீரை எடுத்துவிட்டான்; பின் பர்ண சாலைக்குச் சென்றான். உடன் சென்ற பரதன் சீதையின் கால்களில் விழுந்து அரற்றினான்; சீதை அவனை எடுத்து ஆற்றினாள்.
‘நாயகன் என் நெடிய பிரிவினால் துஞ்சினான்” என்று சீதைக்கு இராமன் உரைத்தான். அவள் நெஞ்சு திடுக்கிட்டது; நடுங்கினாள்; கண்களில் நீர் வழிந்தது; காட்டுக்குச் சென்றபோதும் துயரம் அடையாத சீதை, தசரதன் இறப்புக்கு மிகவும் வருந்தினாள். அவளை முனிபத்தினிகள் கங்கையில் முழுகவைத்துத் தேற்றித் துயரம் நீக்கி, இராமனிடம் சேர்ப்பித்தனர்.
இறுதிச் சுற்று :
“தந்தை செய்த தவறும் தாய் செய்த கேடும் நீ ஆட்சி ஏற்றால் மாறும்” என்றான் பரதன். ‘முறை தவறியது என்று குறைபடாதே; குரவர் பணி இது; ஆட்சி உனக்குமாட்சி தரும்; தவம் எனக்குத் தக்கது” என்றான் இராமன்.
‘சட்டம் பேசுகிறாய்; பேச்சுக்கு ஒப்புக் கொள்கிறேன்; நீ பிறந்த பூமி எனக்கு ஆள உரிமை உடையது என்கிறாய்; அது என்னுடையதுதான்: அதை உனக்கு வழங்குகிறேன்; மன்னா! நீ மகுடம் சூடுக” என்றான் பரதன்.
‘நீ அறிவாளி; என்னை மடக்கி விட்டாய்; ஆட்சியை ஏற்கிறேன். தந்தை எனக்கு இட்ட கட்டளை, ‘நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். என்பது; “தாழிருஞ் சடைகள் தாங்கிக் கடும்தவம் மேற்கொண்டு பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடித் திரும்பி வருக” என்ற சொல் என்ன ஆகும்? பதினான்கு ஆண்டுகள் பொறுத்துக் கொள்;
அதுவரை என் கட்டளை ஏற்று அரசு ஆள்வாய்! இது நான் உனக்கிடும் ஆணை; மறுக்காதே” என்றான் இராமன். வசிட்டர் இராமன் ஆட்சியை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்; “சூரிய குலத்து மன்னர்கள் முறை பிறழ்ந்தது இல்லை.
மேலும் நான் தந்தையைப்போல மதிக்கத் தக்கவன்; ஆசான்; ஆசான் சொல்லைத் தட்டாதே! யான் இடும் ஆணையை ஏற்று உனக்கு உரிய நாட்டைப் பாதுகாப்பாய்” என்று கூறித் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். அம் ‘முனிவனைத் தொழுது’ ”அறிஞ! ஒரு செயலைச் செய்வதாக ஒப்புக் கொண்ட பின் அதனைக் கைவிடுவது அறமாகுமா; தாயும் தந்தையும் இட்ட கட்டளைகளை மேற்கொள்ளாத அற்பனாக நான் வாழேன்;
அவர்கள் இட்ட பணியைத் தாங்கிச் செயலாற்றும்போது வேறுவிதமாக மாற்ற முனைவது நீதியாய்ப் படவில்லை; முறை தவறி நான் ஆட்சியைக் கைவிடுகிறேன் என்று சொல்கிறீர்; நீங்கள் முறை தவறி உரை செய்வதுதான் வியப்பாக உள்ளது என்றான் இராமன்.
முனிவன் உரைத்தும் அவன் ஏற்கவில்லை என்பதை அறிந்த பரதன், முடிவாகத் தன் கருத்தைக் கூறினான். ‘அப்படியானானல் நாட்டை ஆள்பவர் ஆளட்டும்; நான் காட்டை மேவுதல் உறுதி” என்றான். ‘அது என் உரிமை; இதை யாரும் தடுக்க முடியாது” என்ற பரதன் உறுதியாக நின்றான்.
வானவரும் “என்ன ஆகுமோ?” என்று அஞ்சினர். “தெய்வத் திருவுளமும், அங்கு கூடியிருந்தவர் கருத்தும் பரதன் ஆட்சியை ஏற்று நடத்துவதே தக்கது” என்ற முடிவுக்கு வந்தனர். மறுபடியும் இராமன் பரதனை அன்புடன் கேட்டுக்கொண்டான்.
“என் ஆணையால் பாரினை ஆள்க” என்றான். ‘குறிப்பிட்ட ஆண்டுகள் பதினான்கு முடிந்ததும் நீ அங்கு வந்து சேர வேண்டும்; ஒருநாள் தாமதம் ஆனாலும் நெருப்பில் விழுந்து உயிர் துறப்பேன்” என்றான் பரதன்.
இராமன் உறுதிமொழி தந்தான். அதற்குமேல் பேசமுடியாமல் “நின் திருவடி நிலைகளை ஈக”என்று கேட்டான். இராமன் தன் பாதுகைகள் இரண்டனையும் அவனுக்குத் தந்தான். பரதன் அழுத வண்ணம் பாதுகை இரண்டையும் தரையில் வைத்து வணங்கினான்; மணி முடிகளாய் அவற்றைத் தலையில் தாங்கிக் கொண்டான்.
பரதன் அயோத்திக்கு, அடியெடுத்து வைக்கவில்லை; கங்கையைக் கடந்து, கோசல நாட்டின் தென்எல்லையில் இருந்த நந்தியம்பதியை அடைந்தான்; சிம்மாசனத்தில் இராமன் திருவடி நிலைகள் இடம் பெற்றன. அவற்றை வணங்கி வழிபட்டு இராமன் ஆட்சியைப் பரதன் அங்கு இருந்து நடத்தினான்.
சித்திர கூடத்தில் மேலும் தொடர்ந்து தங்கி இருந்தால், அயோத்தி மாந்தர், வந்து வருத்துவர் என்பதால் தானும் தம்பியும் தையலுமாகத் தென்திசை நோக்கிச் சென்றான் இராமன். அடவியை அடைந்த இராமன், அறிவும் ஆசாரமும்மிக்க தவசிகளின் விருந்தினாய்த் தங்கி வந்தான்.
அத்திரி முனிவர் என்பவர் அவனை இன்முகம் காட்டி, இனிதுரை வழங்கி, நல் விருந்து அளித்தார். அவர் பத்தினாயாகிய அனசூயை சீதையிடம் சொந்த மகள்போல் பந்தம் காட்டினாள்; அந்தம் இல்லாத அழகுடைய சீதைக்கு அணிகலன் சேர்த்து, ஆடையும் தந்து, தங்கப்பதுமை போல் அலங்கரித்தான்.
விண்டுரைக்க முடியாத பேரழகியாகிய சீதையைக் கண்டு விராதன் என்னும் கிராதன் அவளைத் தின்று விழுங்கக் கரம்பற்றி விண்வழியே இழுத்துச் சென்றான். வஞ்சனை மிக்க அவன் செயலை அஞ்சன வண்ணனாகிய இராமன் எதிர்த்து, அம்பு எய்து, அவளை விலக்கி அவனை எதிர்த்தான்.
படைகள் அவனைத் தொடவில்லை; படைக் கருவியால் அழிவு பெறாத வரங்களை பிரமனிடம் வாங்கி இருந்தான். மராமரம் ஒன்றை அவன் இராமன்மீது வீசினான். அது அவன் கைக்குச் சிக்கி வேரோடு பட்டது; கிளையோடு கெட்டது. இராமன் அம்புகளை ஒரு சேர விட்டான்; அவன் முள்ளம் பன்றிபோலக் காட்சி பெற்றான்;
எனினும், விதிர் விதிர்த்து விடுதலை பெற்றான்; மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுச் சீறிய சிங்கம் எனப் பாய்ந்தான். வாள்கொண்டு அவன் தோள்களை வெட்டினான் இராமன்; வெட்டிய தோள்கள் மறுபடியும் ஓட்டிக்கொண்டன. அவன் தோள்கள்மீது ஏறி இருவரும் அமர்ந்தனர்.
அவன் அவர்களை உலகம் சுற்றும் வாலிபர்களாக்கினான். கருடன்மீது அமரும் திருமால் போல் இராமனும் இலக்குவனும் காட்சி அளித்தனர். வேறு வழியின்றி அவனை வெட்டிக் குழி தோண்டி மண்ணில் புதைத்தனர். விண்ணில் அவன் தேவகந்தருவனாய்க் காட்சி அளித்தான்.
அவன் ஒரு கந்தருவன்; கலை ரசிகன்; தும்புரு என்பது அவன் பெயர்; செல்வச் சிறப்புமிக்க அளகாபுரியில் வாழ்ந்து வந்தவன்; அரம்பை ஒருத்தி ஆடல் நிகழ்த்த, அவளை அவன் நாடினான். கலைஞன் காமுகன் ஆனான். இதையறிந்து அளகை வேந்தனாகிய குபேரன், அவனை “அரக்கனாகுக என்று சாபமிட்டான்.
தேவனாகப் பிறந்தவன் அரக்ககுணம் கொண்டு அழிவுப்பாதையை அடைந்தான். இராமன் திருவடி தீண்டப்பட்டதால் அவனுக்குச் சாப விமோசனம் கிடைத்தது; காந்தருவனாய் மாறினான்; நன்றி நவின்றுவிட்டு விண்ணுலகில் மறைந்தான்.
கல்லாக இருந்தவள் காரிகையாக மாறி, விமோசனம் பெற்றதைப் போல் முரடனாக இருந்த அரக்கன், சாப விமோசனம் பெற்று காந்தருவனாக மாறினான். இதுவும் கருத்துள்ள கதையாகும்.
கலை உள்ளத்தோடு ரசிக்க வேண்டியவன் காமப் பார்வையோடு அவளைப் பார்த்துத் தன் நிலைகெட்டான். அது அவளை அரக்கனாக மாற்றியது. சீதை புனிதமானவள். அவளைத் தொட்டான் என்றாலும், கெட்டான் என்ற நிலை ஏற்படவில்லை.
தெய்வம் அவனை மன்னித்துத் தேவனாக மாற்றியது. பள்ளத்தில் விழுந்து இருப்பவர், தெய்வ அருள் பெற்றால் ஒளிபெற்று உயர் பதவி பெறுவர்’ என்பதற்கு அவன் ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தான்.