குகன் வருகை :
அங்கே அவர்கள் இருக்கும் இடம்தேடித் தறுக்குமிக்கவேடுவர் தலைவன் குகன் வில்லேந்தியவனாய் வந்து சேர்ந்தான்; அவன் கல்லினும் வலிய தோளினன். படகுகள் ஆயிரத்துக்கு அவன் நாயகன்; கரிய நிறத்தினன்; யானைக்கூட்டம் போன்ற அரிய சுற்றத்தினன்;
சீற்றமின்றியும் தீயெழ நோக்கும் விழியினன்; கூற்றுவனும் அஞ்சும் குரலினன்; சிருங்கிபேரம் என்னும் நகர் மருங்கு வாழ்ந்துவருபவன்; தேனும் மீனும் ஏந்தி, மானவன் ஆகிய இராமனைக் காண வந்தான்;
அவன் தங்கியிருந்த தவப்பள்ளியின் வாயிலை அடைந்தான். ‘இறைவா! நின் கழல் சேவிக்க வந்தனன்” என்றான். இலக்குவன் அவனை மேலும் விசாரித்தான். மீனும் தேனும் இராமன் உண்டு பழக்கம் இல்லை; எனினும், அன்பன் கொண்டு வந்து அளித்தவை ஆதலின் அவற்றை வேண்டா என்று மறுக்கவில்லை. “அன்புடன் படைத்தது; தின்பதற்கு இனியது என்று கூறி ஏற்றுக்கொண்டான் “அமுதினும் இனியது” என்று பாராட்டினான்;
“இதை யாம் ஏற்றுக்கொண்டோம்; அதுவே உண்டதற்குச் சமம்; நீர் மனநிறைவு கொள்ளலாம்” என்று கூறி அவற்றை அவர்களிடமே திருப்பித் தந்தான்; கண்ணப்பன் ஒப்பதோர் அன்பினை அவ்வேடன்பால் கண்டான்;
காளத்தி வேடனாகக் கங்கை வேடனைக் கருதினான்.”உன்னை இந்நிலையில் பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இருக்கின்றேனே” என்று கூறி அங்கலாய்த்தான் குகன். அவன் ஆழ்ந்த அன்பு இராமனைக் கவர்ந்துவிட்டது.
‘யாதினும் இனிய நண்பனே என்னோடு இருப்பாயாக!’ என்று குழைந்து அவனை ஏற்றுக்கொண்டான். குகன் தன் சேனையைச் சுற்றியும் காவல் செய்யுமாறு செய்து, தானும் உறங்காமல் கறங்கு போல் சுற்றி வந்து காவல் செய்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது; இராமன் காலைக்கடனை முடித்தான்; வேதியர் சிலர் அவனைத் தொடர்ந்து வந்தனர்; குகனைப் பார்த்து இராமன், “படகினைக்கொணர்க”; “கங்கையைக் கடந்து அக்கரை போகவேண்டும்” என்றான்.
இராமன் மீது அக்கறை காட்டினான். ‘வனத்து வாழ்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமா? இங்கே எங்களோடு கங்கைக் கரையிலேயே நங்கை சீதையோடு தங்கிவிடலாமே?” “காலமெல்லாம் இங்கே தங்கி வாழ்ந்து முடிக்கலாம்;
இங்கே உங்களுக்கு என்ன குறை? நாங்கள் காட்டு மனிதர்தான்; எனினும், உம் பகைவர்க்கு உங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்; உண்ண உணவு, உடுக்க உடை, தங்க உறையுள் இவற்றை அமைத்துத் தருகிறோம்.
“தேனும் தினையும், ஊனும் மீனும் உள்ளன; திரிந்து விளையாட விரிந்த காடுகள் உள்ளன. நீந்தி விளையாட நீர்நிறைந்த கங்கை நதி இருக்கிறது. உறுதுணையாகத் தறுகண்மை மிக்க எம் வீரர் உளர்;
ஏவலுக்கும் காவலுக்கும் கணக்கற்ற வீரர்கள் இங்கே காத்துக்கிடக்கின்றார்கள்’ என்று அன்பு காட்டி வேண்டினான். “வீரனே! இங்கு வந்தது சுற்றுலாப் பயணம் செய்ய அன்று; உண்டு உறங்கிக் களித்து விளையாட அன்று; புண்ணிய நதிகள் ஆடவும், ஞான் நன்னெறி நண்ணவுமேயாகும்; இதுவே என் அன்னையின் அன்புக் கட்டளை;
இது எமக்கு ஏற்பட்ட கால் தளை; பதினான்கு ஆண்டுகள் விரைவில் கழிந்து விடும். திரும்பும்போது விரும்பி உங்களைச் சந்திப்போம்; உம் விருந்து ஏற்போம்” என்று கூறினான்.
“யாம் உடன் பிறந்தவர் நால்வர்; உன்னோடும் சேர்ந்து ஐவர் ஆகிவிட்டோம்” என்று ஆறுதல் கூறினான். குகன் அதற்குமேல் அதிகம் பேச, அவன் அடக்கம் இடம் அளிக்கவில்லை. அவன் கடமை செய்வதில் நாட்டம் கொண்டான். ஓடம் ஒன்று வந்து நின்றது. அதில் மூவரும் ஏறிக் கங்கையைக் கடந்து அடுத்த கரை சேர்ந்தனர்.
வனம்புகு வரலாறு :
இளவேனிற் காலம் அந்தக் காட்டுக்குப் பொலிவை ஊட்டியது; இராமன் வரவும் முகில்கள் பூ மழை பொழிந்தன; வெய்யில் இளநிலவைப் போலத் தண் கதிர்களை வீசியது; மரங்கள் தழைத்து நறுநிழல் தந்தன. பனித்துளிகள் சிதறின. இளந்தென்றல் மலர்களில் படிந்து மணம் அள்ளி வீசியது; மயிலினம் நடமாடின; இத்தகைய காட்டுவழியில் இராமன் இனிதாய் நடந்து சென்றான்.
மூவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் பரத்துவாசர் ஆசிரமம் காணப்பட்டது. முனிவர் அவர்களைச் சந்தித்தார்; இராமன் துன்பக் கதையைக் கேட்டு, அன்பு மொழி பேசி ஆதரவு காட்டினார். “இந்த ஆசிரமத்திலேயே தங்கி, நீங்கள் அமைதியாகத் தவம் செய்துகொண்டு இருக்கலாம்;
இங்கு நீரும், மலரும், காயும், கனியும் நிரம்ப உள்ளன; இது தவம் செய்யத் தக்க சூழ்நிலை உடையது. நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடம் இது; அவை கங்கை, யமுனை, சரசுவதி எனும் மூன்று நதிகளின் சங்கமம்” என்றார் முனிவர்.
‘இது தவம் செய்யத்தக்க இடம்தான்; என்றாலும், எம் நாடாகிய கோசலை நாட்டுக்கு ஒரு யோசனை தூரத்திலேயே இது உள்ளது. இங்கு இருப்பது அறிந்து மக்கள் தொக்கு வந்து தொல்லை தருவர்; அதனால், சேய்மையில் உள்ள சித்திரகூட மலைச் சாரலே தக்கது ஆகும்” என்று கூறி, அவர் கூற்றை மறுத்தான் இராமன்.
பரத்துவாசரிடை விடை பெற்று யமுனைக் கரையை அடைந்தனர்; அதனைக் கடத்தித் தர ஒரு குகன் அங்கே இல்லை; படகும் இல்லை; என் செய்வது? இலக்குவன் அங்கிருந்த மூங்கிற் கழிகளைக் கயிற்றால் பிணைத்துத் தெப்பம் அமைந்தான்; அவர்களை அமரச் செய்தான்; துடுப்புகள் தேவைப்படவில்லை. அவன் கைகளே துடுப்புகள் ஆயின; நீரைத் துடுப்புப் போலத் தள்ளி யமுனையைக் கடந்து அடுத்த கரை வந்து சேர்ந்தான்.
அந்தக் கரையைக் கடந்து சென்றபோது அவர்கள் கல்லும் முள்ளும் கலந்த பாலை நிலத்தைக் கடக்க நேரிட்டது. காலை வைத்து நடக்க முடியவில்லை. இராமன் ஆணைக்கு அஞ்சிப் பகலவனும் பால் நிலவைப் பொழிந்தான்; தணல் வீசும் இடங்கள் தண்பொழில்களாகக் குளிர்ந்தன. கற்கள் மலரென மென்மை பெற்றன. கூரிய பற்களை உடைய புலிகள் கொலைத் தொழிலை மறந்தன. அப்பாலை நிலத்தைக் கடந்து, சித்திரகூட மலையை அடைந்தனர்.
சித்திரகூட மலை :
சித்திரகூட மலை எழில்மிக்கதாய் விளங்கியது. மலையடியில் ஏலக் கொடியும், பச்சிலை மரமும் தவழ்ந்தன; சாரல் பகுதியில் யானையும் மேகமும் வேறுபாடின்றிப் படர்ந்தன; மலை உச்சியில் வருடைமான் கதிரவனின் பச்சை நிறக்குதிரைபோல் பாய்ந்தது;
யானைகளை விழுங்கிய மலைப் பாம்புகளின் தோல்கள், மூங்கில்களில் சிக்கிக் கொடிச் சீலைகள்போல் காட்சி அளித்தன; சிங்கம் தாக்கிய யானைகளின் தந்தங்களிலிருந்து சிந்திய முத்துகள் சிதறிக் கிடந்தன.
பாறைகளில் வேங்கைப் பூக்கள் படர்ந்தன; சந்தனச்சோலைகள் சந்திரனைத் தொட்டுக்கொண்டு இருந்தன; கொடிச்சியர் கின்னர இசை கேட்டு மகிழ்ந்தனர்; வேடுவர் கவலைக் கிழங்கை அகழ்ந்து எடுத்தனர்;
குரங்குகள் நீரைச்சொரிந்து விளையாடின; கான்யாற்றில் விண்மீனைப் போல மீன்கள் துள்ளி ஒளி செய்தன; அரம்பையர் அங்கிருந்த அருவிகளில் நீராடி ஆரவாரித்தனர்.அங்கேயே நிரந்தரமாய்த் தங்குவது என்று இராமஇலக்குவனர் முடிவு செய்தனர்.
அவர்கள் தங்கி இருக்கப் பர்ணசாலை ஒன்று இலக்குவன் வகுத்துக் கொடுத்தான். மூங்கில் துண்டுகளைக் கால்களாக நிறுத்தினான்; அவற்றின்மீது நீண்ட தூலத்தை வைத்து, வரிச்சில்களை ஏற்றிக் கட்டினான்;
ஒலைகளைக் கொண்டு அவற்றை மூடினான்; தேக்கு இலையால் கூரையைச் சமைத்தான்; நாணல் புல்லை அதன்மீது பரப்பினான்; சுற்றிலும் மூங்கிலால் சுவரை வைத்து, மண்ணைப் பிசைந்து நீரைத் தெளித்து ஒழுங்குபடுத்தினான்.
கல்லும் முள்ளும் அடங்கிய காட்டில் சீதையின் மெல்லிய அடிகள் நடந்து பழகின. “இன்னல் வரும் போது எதையும் தாங்கும் ஆற்றல் உண்டாகிறது” என்று இராமன் கூறினான்; தம்பியின் கைகள் இப்பர்ண சாலையை அமைத்துத் தந்ததைக் கண்டு வியந்தான்; அவன் செயல்திறனைப் பாராட்டினான்.
இராமன் தம்பியை நோக்கி, “உலகில் பொருட்செல்வத்துக்கு அழிவு உண்டு; அறத்தின் அடிப்படையில் விளையக் கூடிய இன்பத்திற்கு நிகர் எதுவும் இல்லை;
ஆட்சி நிலைப்பது அன்று; தவம்தான் நிலையானது என்று தத்துவம் போதித்தான்; தவ வாழ்க்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
பரதன் வருகை :
வசிட்டர் அனுப்பிய தூதர் பரதனிடம் ஓலை தந்தனர். “தசரதன் அழைக்கின்றான்” என்று மட்டும் அதில் எழுதியிருந்தது. முடங்கல் கண்டதும் தடங்கல் இன்றிப் புறப்பட்டான் பரதன்; இராமனைக் காணும் ஆர்வம் அவனை உந்தியது; இளயவன் சந்துருக்கனனும் உடன் புறப்பட்டான். பரதன் பயணம் ஏழுநாள் தொடர்ந்தது; எட்டாம் நாள் கோசல நாட்டை அடைந்தான்; அயோத்தியை அடைந்தான். ஆனால், அந்நாட்டை அவனால் காண முடியவில்லை.
‘கொடிச் சீலைகள் ஆடி அசைந்து அவனை வரவேற்கும்’ என்று எதிர்பார்த்தான்; அவை அரைக் கம்பத்தில் தொங்கி உயிருக்கு ஊசல் ஆடிக்கொண்டிருந்தன; “வண்ண மலர்கள் கண்ணைப்பறிக்கும்” என்று எதிர்பார்த்தான்; இவை வாடி வதங்கிச் சோககீதம் பாடிக் கொண்டிருந்தன;
வயல்கள் உழுவார்அற்று ஊடல் கொண்ட பத்தினிப் பெண்டிராய் விளங்கின. பல நிறச் சேலை அணியும் உழத்தியர், நிலத்தில் புகுந்து களை பறிக்கக் கால் வைக்கவில்லை; உழவர்களின் ஏர்கள் துறவுக் கோலம் பூண்டு, மூலையில் முடங்கிக் கிடந்தன.
குவளை மலர்கள் கண்திறந்து பார்க்க மறுத்துவிட்டன. தாமரை மலர்கள் தடாகங்களில் தலைகாட்டத் தவறி விட்டன; பாவையர் மொழிகளைப் பேசி, இச்சைப்படி மகிழும் பச்சைக் கிளிகள் மவுனம் சாதித்தன. மகளிர் இல் வறுந்தலையராய்க் காட்சி அளித்தனர்.
மாறிமாறி ஒலிக்கும் யாழும் குழலும் இசைப்பார் அற்று அசைவற்றுக் கிடந்தன; அரங்குகளில் ஆடல் மகளிர் அடியெடுத்து வைப்பதை நிறுத்திக்கொண்டனர்; நீர்நிலைகளில் வண்ண மகளிர் குடைந்து நீராடிப் பண்கள் மிழற்றுவதை நிறுத்திவிட்டனர்;
பொன்னகை இழந்த மகளிர் புன்னகையையும் இழந்தனர்; அகிற்புகை, ‘அடுப்புப் புகை, வேள்விப்புகை எல்லாம் புகைபிடிக்கக் கூடாது என்ற விளம்பரத்திற்கு அடிமையாகிவிட்டன. தெய்வங்கள் அந்த நகரில் தங்காமல் தேசாந்திரம் சென்றுவிட்டன; கோயில் மணிகள் நாவசைந்து நாதம் எழுப்பவில்லை; பயிர்கள் பசுமையை இழந்து விட்டன; தான் இருப்பது அயோத்திதான் என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.
நகரில் ஓவியத்தைக் காண முடிந்ததே அன்றி எந்தக் காவியத்தையும் காணமுடியவில்லை; சிலைகள் அசைவதை மக்கள் அசைவில் கண்டான். அவனுக்கு வரவேற்பே இல்லை. வாழ்த்துகள் மலரவில்லை; அவன் தேரைக் கண்டதும் மக்கள் ஓரம் கட்டினர்; ஒதுங்கி மறைந்தனர்;
அந்நிய நாட்டில் அடியெடுத்து வைத்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. தசரதன் மாளிகை நோக்கிப் பரதன் தேரைச் செலுத்தினான். அரண்மனைக் கட்டடங்கள் விதவைக் கோலத்தை விரும்பி ஏற்றுக்கொண்டன. ‘தசரதனை அவன் கண்கள் துரூவித்தேடின.
தசரதன் கண்கள் மூடிக்கிடந்தன. இவன் வந்ததைத் தசரதன் பார்க்க இயலவில்லை. பார்வையை இழந்தான். அதற்குள் பணிப்பெண் ஒருத்தி பரதன்முன் வந்து நின்றாள்; ‘அன்னை உன்னை அழைக்கிறார்’ என்றாள்; அதற்குமேல் அவள் சொல்ல அனுமதி இல்லை. தாயைக் காணச் சென்றான்; அங்குப் பேய் ஒன்று நின்று பேசியது. “உன் தந்தைக்கு வானுலகத்தினின்று அழைப்பு வந்தது; மறுக்க முடியாமல் அவர் போய்விட்டார்” என்றாள்.
மங்கலமாகச் சொன்ன அச்சொற்களை அவனால் சுவைக்க முடியவில்லை. இது முதலில் தோன்றிய மின்னல்; அடுத்து இடி ஒலியும் கேட்டது. “தவத்தை நாடித் தனயன் இராமன் வனத்துக்கு ஏகிவிட்டான்; பத்தினிப் பெண் ஆகையால், சீதையும் உடன் பயணம் மேற்கொண்டாள்; தம்பியாகையால் அண்ணனை நம்பி இலக்குவனும் உடன் சென்றான்” என்றாள். முகத்திரை விலகியது; முழுமதியைக் காணவில்லை; பல்லவி முடிந்தது; அனுபல்லவி தொடர்ந்தது.
உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன்; என் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிவிட்டது” என்றாள். “பாலூட்டி வளர்த்தவள் பழிதந்து அழிப்பாள்’ என்று அவன் எதிர்பார்க்கவில்லை; அமுது என நினைத்து ஆலகால நஞ்சை அவள் தந்திருப்பதை அறிந்தான்;
“பாற்கடலில் அமுதம் அன்றி, நஞ்சும் பிறக்கும்” என்ற கதையை அவள் மெய்ப்பித்துவிட்டாள் என்பதை அறிந்தான்; பாசம் விளைவித்த நாசத்தை அறிந்தான்; தன் தாய் கொடுமை செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்; மறுபடியும் அவள் முகத்தில் விழிக்க அவன் விழிகள் அஞ்சின ;
கோசலையிருக்கும் இடம் தேடி ஓடலானான்; “அரவுக்கு நஞ்சு பல்லில்; அன்னைக்கு நஞ்சு சொல்லில்” என்பதை உணர்ந்தான். அன்னை கோசலை அடிகளில் விழுந்து வணங்கினான்; “பரதனுக்கும் இச்சூழ்ச்சியில் பங்கு உண்டு” என்று தவறாகக் கருதினாள் அவள்; பார்வையில் அவ்வினாக்குறி அமைந்திருந்தது. அவன் விழிகளில் வழிந்த கண்ணீர் அம்மாசினைத் துடைத்தது.
“பாசத்தால் உன்தாய் தவறு செய்துவிட்டாள்; தவறு நடந்துவிட்டது; முதலிலேயே களைந்து இருக்க வேண்டும்; இப்பொழுது முள்மரம் ஆகிவிட்டது” என்றாள். ‘சூழ்ச்சிக்கு உடந்தையாய் நான் இருந்திருந்தால் நரகத்தின் கதவு எனக்காகத் திறந்திருக்கும்; அக்கொடுமைக்கு நான் காரணம் அல்லன்; அவள் வயிற்றில் பிறந்ததுதான் கொடுமை” என்றான்.
நெஞ்சு துளைக்கப்பட்டுப் பரதன் அஞ்சி அழுது அலறுவதைக் கண்டாள்; ஆறுதல் கூறிஆற்றினாள்; இராமனை அவன் வடிவிற்கண்டு ஆறுதல் பெற்றாள்;தன் கண்ணீரைக் கொண்டு அவனைக் குளிப்பாட்டினாள்; சத்துருக்கனன்; அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
“மன்னன் உயிர் நீங்கி, ஏழு நாள்கள் ஆகின்றன; இன்று நாள் எட்டு; அவனுக்கு ஈமக் கடன் செய்து முடிக்க வேண்டும்; எரி தழலில் வைத்து நெறிப்படி இறுதிக்கடன் செய்யவேண்டும்” என்றார் வசிட்டர். முனிவரோடு சென்று வாய்மை மன்னன் அறத்தின் திருஉருவைக் கண்டான்; விழுந்து அலறினான்; எண்ணெய் உண்ட எழில் மேனியைக் கண்ணீர் கொண்டு கழுவினான்.
“கருமக்கடன் செய்தல் தருமம்” என்று அவன் தொடங்கினான்; வசிட்டர் திருத்தம் கொண்டு வந்தார். ”உனக்கு அருகதை இல்லை” என்றார். ‘அந்தச் சிறு கதை என்ன?’ என்று கேட்டான். “நீ அவர் சடலத்தைத் தொடக்கூடாது, என்பது தசரதன் ஆணை; அவர் சாவுக்கு உன்தாய் காரணம் ஆதலின், நீ தொடக் தகாதவன் ஆகிவிட்டாய்” என்றார். ஆட்சி உரிமை தந்த மன்னன் எந்த அடிப்படையில் தந்தான்? மகன் என்பதால்தானே! அதை எப்படி இப்பொழுது மறுக்க முடியும் ? என்று வினவினான்.
‘ஆட்சிக்கும் உரிமை இல்லை? என்பது இதனால் தெளிவாகிறது அன்றோ’ எனத் தெளிவுபடுத்தினான். “சத்துருக்கனன் எந்தத் தவற்றுக்கும் ஆளாகவில்லை; அவனே தக்கவன்’ என்று வசிட்டர் கூறத் தம்பியைக் கொண்டு தணல் மூட்டித் தந்தையின் இறுதிக்கடனைப் பரதன் முடித்தான். நாள்கள் சில நகர்ந்தன; ஆள்கள் வந்து அவனைச் சூழ்ந்தனர்; அமைச்சர், அந்தணர், நகரமாந்தர் வசிட்டர் அவனை அணுகினர்.
‘நாட்டுக்குத் தலைவன் இல்லை, என்றால், ஆட்சி செம்மையாய் நடைபெறாது; சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும்; மற்றைய அறங்களும் செம்மையாய் நடைபெறா; பகைவர் போர் தொடுப்பர்; நீதியும் நிலை குறையும்; உழவும் தொழிலும் ஓய்வு கொள்ளும்; ஆட்சி ஏற்று நடத்துக” என்று வேண்டினர். ‘அண்ணன் இருக்கத் தம்பி ஆட்சியை ஏற்பதில் நியாயம் இல்லை” என்றான் பரதன்.
‘தெய்வம் அவனை வேறு வழியில் திருப்பிவிட்டது; அறம் தழைக்க நீ ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன; இங்கு இருப்பது நீயும் உன் தம்பியும்தான்; சூரிய குலத்துக்குச் சுடர் விளக்காக இருக்கும் நீங்கள், பொறுப்பேற்று நானிலத்தை வழிநடத்த வேண்டும்;
நல்லதோ கெட்டதோ அரசன் வாய்மொழி! அதற்கு நீ கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்; நீ மன்னனாய்ப் பொறுப்பு ஏற்க வேண்டும்; மணிமுடி சூட வேண்டும். என்பது தசரதன் கட்டளை; ‘நீ அதனைச் செயல்படுத்த வேண்டும்’ என்பது, நாங்கள் பூட்டும் தளை’ என்று தெரிவித்தனர்.
“உங்கள் ஆர்வத்தை மதிக்கிறேன்; ஆனால், அவசரத்தை எதிர்க்கிறேன்; இராமன் மணி முடிதரிப்பதில் உங்களுக்குத் தடை இராது என்று நினைக்கிறேன்” என்றான். கிணறு வெட்டப் புதையல் கிடைத்தது போல இருந்தது; புதுமையாய் இருந்தது; உள்ளப் பூரிப்பைத் தூண்டியது; மூச்சுச் சிறிது நேரம் நின்றுவிட்டது அவன் சொற்களை ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்.
“நான் இராமனை அழைத்துவர ஏகுகிறேன்; அவன் வாராவிட்டால் தவசியர் நால்வர் ஆவோம் என்பது உறுதி; சடைமுடியைத் தரித்துச் சந்நியாசியராய் அங்கு அவனோடு காலம் கடத்துவோம்; அதற்கும் அனுமதி இல்லை என்றால், என் உயிர் என்னிடம் அனுமதி பெற்றுச் சென்றுவிடும்” என்றான்.
அவன் திண்மையைக் கண்டு நாட்டோர் திகைத்தனர்; உறுதியாய் நன்மை விளையும் என்று நம்பினர். ‘தனி ஒருவனால் இதைச் சாதிக்க முடியாது; இராமன் திரும்பி வரும்போது அரச மரியாதையோடுதான் வரவேண்டும்; அவனைப் பேரரசனாய்ப் பார்க்க வேண்டும்;
நால்வகைப் படையும் அவனைத் தொடர்ந்து வரவேண்டும்” என்றான். நகரமாந்தரும் நல்லோர் அனைவரும் உடன்செல்லப் புறப்பட்டனர்; சுற்றத்தவரும் உடன் செல்லப்புறப்பட்டனர்; அன்னையரும் அங்கிருந்து அடையும் பயன் இல்லை ஆதலின், அவர்களும் உடன் செல்ல எழுந்தனர்;
கைகேயியும் எதிர் நீச்சல் அடிக்க முடியாமல் வெள்ளத்தில் ஒருத்தியாய்க் கலந்து கொண்டாள்; அவள் எடுத்த முடிவு தோற்றுவிட்டது; குதிரையைக் குளத்திற்குக்கொண்டு போனாள்; குதிரை நீர் குடிக்க மறுத்துவிட்டது; குதிரை அவளைத் தட்டி அவளுக்குக் குழிபறித்துவிட்டது. கூனி படைத்த கைகேயி மாய்ந்துவிட்டாள்; ‘மாகயத்தி’ என்று பேசப்பட்ட தீமை அவளிடமிருந்து நீங்கிவிட்டது; மூவரில் ஒருத்தியாய் மாறி நின்றாள்; புதிய அலைகளில் அவளும் ஒருமிதக்கும் சருகானாள்;
பரதனுக்குக் கைகேயி மரவுரி எடுத்துக் கொடுக்க வரவில்லை; வற்கலையை அவனே உடுத்திக் கொண்டான்; தவக்கோலம் தாங்கி நின்றான்; முடி வில்லாத துன்பத்துக்கு உறைவிடமானான்; தம்பியும் தவக்கோலம் பூண்டு, பரதனுக்கு ஓர் இலக்குவன் ஆனான்; இராமனை அழைத்து வருவது, அல்லது உயிர்விடுவது, அல்லது தாமும் தவம் செய்வது என்ற உறுதியோடு புறப்பட்டனர்; இராமன் இருக்கும் இடம் சேய்மையாகையால் தேர் ஏறிச் சென்றனர்.
தாய்மாரும், தவத்தைச் செய்கின்ற முனிவரும், தன் தந்தை போன்ற பெருமைமிக்க அமைச்சரும், வசிட்டரும், தூய அந்தணரும், அளவற்ற சுற்றத் தினரும் பின் தொடர்ந்துவர, அயோத்தி மாநகரின் மதிலைப் பரதன் அடைந்தான். நொண்டிக் குதிரை ஒண்டியாகச் செல்வதைப் போல நச்சு வித்தாய் விளங்கிய கூனியும் கூட்டத்தில் ஒருத்தியாய் துரிதமாய் முன்னோக்கி நடப்பதைச் சத்துருக்கனன் பார்த்தான்;
அவளைத் தூக்கி எறிந்து தாக்க எழுந்தான்; பரதன் அவனைத் தடுத்து நிறுத்தினான். ‘அவள் பயணம் தொடரட்டும்; அதைத் தடுக்க நாம்யார்? மூல நெருப்பு அவள்; முண்டெழுந்த செந்தழல் என்தாய்; பாசத்தால் என் தாயை நான் கொல்லாமல்விட விரும்பவில்லை; ‘இராமன்முன் விழிக்க முடியாதே’ என்பதால்தான் விட்டுவிட்டேன்;
அந்தத் தவற்றை நீயும் செய்ய வேண்டா’ என்று கூறித் தடுத்தான். இராமன் தங்கியிருந்த புல் தரைகளும், சோலைகளும் பரதனுக்குப் புண்ணிய க்ஷேத்திரங்கள் ஆயின; இராமன் தங்கியிருந்த சோலையில் பரதனும் தங்கினான்;
கரடு முரடான பாதைகளையும், கல்லும் முள்ளும் கலந்த புல்தரைகளையும் காணும்போதெல்லாம் அவன் கண்கள் குளம் ஆயின; மலையில் கிடைக்கும் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு பசியைப் போக்கிக்கொண்டான்;
இராமபிரான் தங்கியிருந்த புழுதியில் புல்படுக்கையில் தானும் படுத்தான்; ‘அங்கிருந்து இராமன் காலால் நடந்து சென்றான்’ என்ற காரணத்தால் தேர்களும் குதிரைகளும், யானைகளும் பின் தொடரத்தானும் காலால் நடந்து சென்றான்.