தசரதன் வருகை :
கோலம் மிக்க அழகி; அவள் சீலத்தை மறந்தாள்; திலகத்தை அழித்துக் கொண்டு விதவையானாள். கூந்தலை விரித்தாள்; ஏந்தலைப் பகைத்தாள்; அணிகலன்கள் அவளுக்கு அழகு செய்தன; அவை அவள் பணிகேட்டுப் பதுங்கிக் கொண்டன! சேலை இது வரை கசங்கியது இல்லை; அது அவள் கண்களைப் போலக் கசங்கிக்காட்சி அளித்தது; கட்டிலில் புரண்ட அவள், தரையில் உருண்டாள்.
நள்ளிரவு வந்தது; கள்வர், காதல்வெறியர் உறங்காத நேரம்; யாழினும் இனிமை சேர்க்கும் குரலாள் கைகேயி; அவள் அந்தப்புரம் நோக்கி அயோத்தி மன்னன் அடலேறு போலச் சென்றான்; புதிய செய்தி சொல்லி, அவளைப் பூரிப்பு அடையச் செய்ய விரும்பினான்.
நிலைமை மாறிவிட்டது; அவள் அவல நிலை கண்டு கவலை கொண்டான் வேந்தன்; மானை எடுக்கும் யானையைப் போல அவளைத் தழுவி எடுத்தான்; அவள் நழுவி விழுந்தாள்; தரையில் தவழ்ந்தாள்; வானத்து மின்னல் தரையைத் தொட்டது; கட்டி அணைத்தான்; கொட்டிய தேளாகக் கடுகடுத்தாள் அவள்.
“தேனே என்றான்; மானே என்றான்; தெள்ளமுதே உன்னை எள்ளியது யார்?” என்றான். “மங்கை உதிர்த்த கண்ணீர், அவள் கொங்கையை நனைத்தது; முத்துமாலை உதிர்ந்ததுபோல் இருந்தது; அவன், தன் அங்கை கொண்டு கண்ணீரைத் துடைத்தான்; அவள் தலையில் அடித்துக் கொண்டு பதைத்தாள்; பார் பிளந்தது போன்று ஓர் நினைவு அவனுக்குத் தோன்றியது; “யார் உமக்குத் தீமை செய்தவர்?” என்று வினவினான். “நீர் வாய்மை மன்னன்; வாய் தவற மாட்டீர் என்று கருதுகிறேன்” என்றாள்.
“விரும்பியதைக்கேள், அரும்பியதைப் போன்ற உன் திருவாயால்; உள்ளம் உலோபேன்; வள்ளல் இராமன் மீது ஆணை” என்றான். “தேவர்களைச் சாட்சி வைத்தாய்; வரங்கள் இரண்டு தருவதாக மாட்சிபடக் கூறினாய்; அவற்றைத் தருக” என்றாள். ‘விளம்புக வழங்குகிறேன்” என்றான். “என் மகன் முடிசூட வேண்டும்; இது முதல் வரம்; ராமன் காடு ஏக வேண்டும்! இஃது அடுத்த வரம்” என்று தொடுத்துக் கூறினாள்.
நஞ்சு தீண்டியது; வேகம் அடங்கியது; யானை போலச் சுருண்டு விழுந்தான் வேந்தன். மருண்டு விழித்தான். மயக்கம் நீங்கினான்; தயக்கம் காட்டினான். “உன் சுய நினைவில் பேசுகிறாயா? மற்றவர் சொல்ல நீ கேட்கிறாயா?” என்று கேட்டான். “முடிந்தால் கொடு; இல்லாவிட்டால் விடு என்றாள். சொற்கள் அவனுக்குத் துணை வரவில்லை, பற்களைக் கடித்துக் கொண்டான்.
அவன் தன் கைகளைப் புடைத்தான்; புழுங்கி விம்மினான்; அழுங்கி நைந்தான்; நெஞ்சு அழிந்து சோர்ந்தான். அவளைக் கொல்ல நினைத்தான்; அவள் சொல்லை வெறுத்தான்; ‘கேட்டது தருவது கேடு’ என்பதை அறிந்தான்; எனினும், என் செய்வது? கொன்றால் பழி வந்து சேரும்; அதனால், அழிவுகள் மிகுதி; வேறு வழி இல்லை; ‘பணிவதுதான் பயன்தரும்’ என நினைத்தான்.
“நீ கேட்கிறாய்; நான் மறுக்கவில்லை; உன் மகன் வேட்கமாட்டான்; அரியணையை ஏற்கமாட்டான்; உலகம் அதற்கு உறுதுணை நில்லாது; ஆட்சிதானே வேண்டும்? ராமனைக் கேட்டால் தம்பிக்கு மறுப்புக் கூறமாட்டான். அவனைக் கேட்பதா என்று நீ தயங்கலாம்; மண்ணைக்கேள்; தருகிறேன்; என் கண்ணைக் கேட்காதே; அதனை மறந்து விடு. இராமனைப் பிரிந்து என்னால் உயிர்வாழ முடியாது” என்று கூறி இரந்தான்.
‘வாய்மை விலகுகிறது” என்றாள். “சத்தியம் தலை காக்கும்; அது என் உயிரைப் போக்குகிறது” என்றான். “உயிர் இழக்க அஞ்சவில்லை; இளம்பயிர் அவன்; தழைத்து வாழவிடு” என்றான். ‘வாய் கொழிக்கப் பேசினாய்; வரம் தந்து மகிழ்வித்தாய்; இப்பொழுது தரம் கெட்டுப் பேசுகிறாய்” “சிபிச் சக்கரவர்த்தி உன் முன்னோன்; வாய்மை தவறவில்லை; புறாவிற்காகத் தன் உயிரைத் தந்தான்; பின் விளைவைப்பற்றி அவன் சிந்திக்கவில்லை”.
“கொடு; இல்லாவிட்டால் என்னைச் சாகவிடு” என்று இறுதி ஆணை பிறப்பித்தாள். அரசன் செயல் இழந்தான்; உணர்வு ஒழிந்தான்; கீழே சவம் எனக் கிடந்தான்; காரியம் முடிந்தது; காரிகை மனநிறைவோடு அந்த இரவு கவலையின்றி உறங்கினாள்.
விழாக் கோலம் :
அடுத்த நாள் திருவிழா; முடிசூட்டும் நாள். இராமனுக்காக அவ்விழா காத்துக் கிடந்தது; எங்கும் பரபரப்பு; சுருசுருப்பு; மக்கள் தேனீ போல விழாவுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். அலங்காரங்கள் எங்கும் அழகு செய்தன. மங்கலப் பொருள்கள் வந்து குவிந்தன. வேதபாரகர் மறைகளைச் சொல்லினர்; அவர்கள் வசிட்டரை வணங்கினர்.
கங்கை முதல் குமரிவரை உள்ள புண்ணிய நதிகளில் இருந்து குடங்களில் நீர் கொண்டு வந்து சேர்த்தனர்; அவையில் அமைச்சர்களும் பிரமுகர்களும் வந்து சேர்ந்தனர்; வசிட்டரும் வந்து அமர்ந்தார்; மன்னன் தசரதன் வரவில்லை; அனைவரும் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வசிட்டர் தசரதனை அழைத்து வரும்படி சுமந்திரனை அனுப்பிவைத்தார்.
அரண்மனையில் அவனைக் காணவில்லை; சேடியர் கூற அரசன் கைகேயின் அந்தப்புரத்தில் இருப்பதை அறிந்தான்; நேரே அங்குச் சென்றான்; சேடியர்பால் செய்தி அனுப்பி, அவையோர் மன்னனை எதிர்ப்பார்ப்பதாகக் கூறினான். மன்னன் அவனைச் சந்திக்கவில்லை; மன்னிதான் அவனுக்குச் செய்தி தந்தாள். ‘இராமனை அழைத்து வருக” என்று சொல்லி அனுப்பினாள் கைகேயி.
சுமந்திரன் தேரைத் திருப்பினான், இராமன் திருக்கோயிலுக்குச் சென்று செய்தி செப்பினான். இராமன் முடிசூடும்முன் அன்னையின் அடிசூட விரைந்தான்; திருமாலை வழிபட்டு வணங்கிப் பின் கேகயன் மகள் இருந்த மனை நோக்கிச் சென்றான்.
மாடவீதி வழியாகச் சென்றபோது மாநகர மாந்தர் அவன் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தனர். மன்னன் தங்கி இருந்த மணிமண்டபத்தை அடைந்தான்; பதும பீடத்தில் மன்னனைக் காணவில்லை; மகுடம் கையில் ஏந்தி மன்னன் காத்திருப்பான் என்று நினைத்தான்;
பிள்ளையார் பிடிக்கப் பூதம் புறப்பட்டது போல் புயல் கிளம்பியது; தாய் என நினைத்து வரும் இராமனை நோக்கி, உயிர் உண்ணும் பேய் போலக் கைகேயி வந்தாள். “மன்னன் தன் வாயால் சொல்ல நினைப்பதை நான் கூறுகிறேன்” என்றாள்.
“தந்தை கட்டளை இடத்தாய் அதைத் தெரிவிக்க, அந்த ஆணையை ஏற்று நடத்தத் தனயன் யான் காத்துக்கிடக்கிறேன்” என்றான். “கடல் சூழ்ந்த உலகத்தைப் பரதன் ஆள்வான்; நீ சடைகள் தாங்கித் தவமேற்கொண்டு காடுகளில் திரிந்து, நதிகளில் நீராடி, ஏழிரண்டு ஆண்டுகளில் திரும்பி வர வேண்டும் என்பது மன்னன் ஆணை” என்றாள்.
வியப்போ திகைப்போ அவனைத் தாக்கவில்லை; அதிர்ச்சிகள் அவனை அணுகவில்லை; தாமரை மலரை நிகர்த்த அவன் முகப் பொலிவு முன்னிலும் அதிகம் ஆனது; அதனை வென்றுவிட்டது. சுமையை ஏற்றுக்கொள்ள அமைந்தது தசரதன் ஆணை; அதற்கு மறுப்புச்சொல்லவில்லை. சுமையை ஏற்க வந்தவனுக்குச் சுதந்திரம்
கிடைத்தது. தசரதன் எருதினை இழுத்து வந்து வண்டியின் நுகத்தடியில் பூட்டினான்.
அருள் உள்ளம் படைத்தவள் கைகேயி; அதனை அவள் அவிழ்த்துவிட்டாள்; பாரம் அவனை விட்டு நீங்கியது; அதற்காக அவளுக்கு நன்றி காட்டினான்; அவன் முகம் மும்மடங்கு பொலிவு பெற்றது. ‘அரசன் பணி அது அன்று ஆயினும், தாயின் கட்டளை இது; இதை மறுக்க மாட்டேன்;
என் பின்னவன் பெறும் செல்வம் நான் பெற்றதேயாகும்; இதைவிடச் சிறந்த பேறு எனக்கு உண்டோ! இன்றே காடு ஏகுகின்றேள்; விடையும் கொண்டேன்” என்று கூறி வருத்தம் சிறிதும காட்டாமல் அவன் அவளை விட்டு அகன்றான்.
கோமகள் கோசலை துயர் :
இராமன் வருவான் என்று கோசலை எதிர்பார்த்தாள்; பொன்முடி தரித்து வருவான் என்று நினைத்தாள்; சடைமுடி தாங்கி அவள் முன் வந்து நின்றான்; அரசனாக வேண்டிய அவன் தவசியாய்க் காட்சி அளித்தான். சாமரம் வீசும், கொற்றக் குடை சுற்றி வரும்; மகுடம் புனைந்து மகன் வருவான் என்று அவள் காத்திருந்தாள்; தவக் கோலத்தில் வந்து காட்சி அளித்தான் அவன். ”இம் மாற்றத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டு அவன் மாற்றத்தை எதிர்பார்த்தாள்.
“பரதன், உன் நேயமகன், மணிமுடி புனைகின்றான்” என்றான். ‘முறையன்று; எனினும், அவனிடம் எந்தக் குறையும் இன்று. உன்னைவிடப் பரதன் நல்லவன்” என்று பாராட்டினாள். ‘தவசிகள் உறையும் காட்டுக்கு அவசியம் நான் போக வேண்டும் என்பது அடுத்த கட்டளை” என்றான். அதிர்ச்சி அடைந்தாள். “ஏழிரண்டு ஆண்டுதான்” என்று கால எல்லையைக் குறிப்பிட்டான்.
‘ஆணையா? தண்டனையா? என்னால் வேறுபாடு காண இயலவில்லையே. இது வஞ்சனை; நஞ்சு அனையது; இனி உயிர் வாழேன்” என்றாள். ஒருகையை மற்றொரு கையால் நெறித்தாள்; பெற்ற வயிற்றைப் பிசைந்தாள்; வெய்து உயிர்த்தாள்; ‘மன்னன் கருணை நன்று’ எனக்கூறி நகைத்தாள்; தானும் இராமனோடு செல்ல நினைத்தாள். ‘அரசனுக்கு நீ என்ன பிழை செய்தாய்? அறம் எனக்கு இல்லையோ?” என்று அலறினாள்.
தெய்வங்களை நொந்தாள்; கன்றைப் பிரியும் தாய்ப் பசுவைப் போலக் கலங்கினாள். இராமன் துயருறும் அன்னையைத் தேற்ற முனைந்தான்; “மன்னவன் சொல் கேட்டு நடப்பது தானே உனக்குப் பெருமை; கணவன் சொற் காத்தல். இல்காப்பவர்க்கு உரிய கடமை அன்றோ” என்றான். மகனைப் பிரிந்து தவிக்கும் அவர் துயரை அவித்து ஆற்றுவது உன் கடன் அன்றோ!
சாகும் போதும், மனம் வேகும் போதும் உற்றவர் அருகிலிருப் பது கற்றவர்க்குக் கடமை அன்றோ; அவரை ஆற்றித் தேற்றித் தவநெறிக்குச் செல்ல நீ துணை இருக்க வேண்டாவோ! பத்தினிப்பெண்டிர் கணவனுக்குப் பணி செய்வதுதானே பாரதநாட்டுப் பண்பாடு! இல்லற தருமம் அதுதான்; தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவது மானிட தருமமும் ஆகும்” என்று கூறி விடை பெற்றான்.
செய்தி முற்றிவிட்டது என்பதை அறிந்தாள்; முதலுக்கே மோசம் வந்துவிட்டது என்று முந்தினாள். கேகயன் மகளின் தனி அறையில் கீழ்த்தரையில் புழுதியில் மன்னன் படிந்துகிடப்பதைக் கண்டு அழுது அரற்றினாள்.
“பொன்னுறு நறுமேனி புழுதிபடிந்து கிடப்பதோ?” என்று கூறிக் கதறினாள்; “சந்தனம் கமழும் மார்பு சகதியில் கிடக்கிறதே?” என்று கூறி நைந்தாள். வீட்டிற்கு எட்டிய செய்தி நாட்டுக்கும் பரவியது; மங்கல ஒலி மயங்கியது; மகிழ்ச்சி மக்களிடம் இருந்து நீங்கியது; அலறல் ஓங்கியது.
அந்தப்புரத்தில் வசிட்டர் :
வசிட்டர் கைகேயியிடம் நீதிகள், நியதிகள், மரபுகள்,வரம்புகள், அறிவுரைகள் ஆயிரம் எடுத்துச் சொல்லியும் அவை செவிடன் காதில் ஊதிய சங்கு ஒலியாகியது. அவள் நெஞ்சு உறுதியை அசைக்கவில்லை. தசரதன் விழித்துப் பார்த்தான்; வேர்த்தான்; தன் உள்ளத்துக் குமுறல்களைக் கொட்டி ஆர்த்தான். அவன் செயற்கையாய்ச் செவிடன் ஆகிவிட்டான்; எதிரொலிகள் எதுவும் எடுபடவில்லை.
அழுது அயர்ந்த அரசி கோசலைக்கு அவன் தன் நிலையை விரித்து உரைத்தான். “தரையில் கொட்டிய பால், அதை மீட்டு எடுக்க முடியாது; தயிர் புளித்துவிட்டது; மீண்டும் அதைப் பால் ஆக்க முடியாது; தந்த வரத்தை மீண்டும் திரும்பப் பெறமுடியாது. ‘அது மட்டும் அன்று; விதியின் செயல் இது, சாபத்தின் விளைவு இது; நான் செய்த பாபத்தின் பரிகாரம்” என்று பழைய நிகழ்ச்சி ஒன்றை அவளுக்கு எடுத்துக் கூறினான்.
‘இது உனக்குத் தெரியாது; அரசன் நான்; அதனால்; காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த வேட்டையாடச் சென்றேன்; அங்கே ஒரு யானை தட்டுப்பட்டது; அதனைக் கண்ணால் காணவில்லை; யானை நீர் குடிக்கும் கேட்டேன்; ஒலி வருவழி நோக்கினேன்.’
அரவம் கொண்டு “கூர்த்த செவிப்புலன் படைத்த யான், தவறி விட்டேன்; குருடன் ஆகிவிட்டேன்; அது யானை எழுப்பிய ஒலியன்று; ஓர் இளைஞன் பானை எழுப்பியது; நீர் மொள்ளும் முடுமுடுப்பு அது. அம்பு பட்டு அவன் அலறி விழுந்தான்; அலறல் கேட்டு ஓடினேன்; அவனைத் தேடினேன்; வாடினேன்.”
‘ஐயா! நான் அந்தணச் சிறுவன்; விழி இழந்தவர் என் பெற்றோர்; அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வந்தேன் யான்; நீர் வேட்கையால் அவர்கள் தவித்தனர்; அதனால், இங்கு முகக்க வந்தேன்; நீ என் உயிரை முகந்துவிட்டாய்”. “ஐயா! எனக்கு நீர் ஓர் உதவி செய்துதர வேண்டும்; இந்தத் தண்ணீர் மிடாவை அவர்களிடம் தந்து குடிக்கச்செய்; என் இறுதி அஞ்சலியை அவர்களுக்கு அறிவித்துவிடு” என்றான்.
அம்முதியவருக்குப் பருக நீர் கொண்டு சென்றேன்; அவர்கள் மனம் உருக, “மகனே வருக! நீர் தருக”! என்று குழைந்து பேசினர். “கரம் நீட்டினேன்” “உன் உரம் எங்கே?” என்று என்னைத் தழுவினர். “என் தரம் அவர்களுக்கு அறிவித்தேன்” “இப்பொழுதே விழி இழந்தோம்” என்று கதறினர். “நான் நாட்டு மன்னன்” என்றேன். கேட்டு அவர்கள் மன்னிக்கவில்லை; “நீயும் எம்மைப் போல் மகனைப் பிரிந்து தவிப்பாய்” என்றனர்.
அவர்கள் சாபத்தால் எனக்கு ஓர் நன்மையும் ஏற்பட்டது. ‘மகன் எனக்குப் பிறப்பான்’ என்ற நம்பிக்கையை அந்தச் சாபம் தந்தது. மகனைத் தேடி அவர்கள் மயானம் அடைந்தனர். ‘சிதையில் மூவர் உடலையும் வைத்து எரித்தேன்’ “அதே நிலை எனக்கு வந்துதான் தீரும்; மகனைப் பிரிந்தேன்; என் உயிர் என்னை விட்டுப் பிரியும்” என்றான்.
மன்னன் மரணத்தால் ஏற்படும் அவலம்; மகனைப் பிரிந்ததால் ஏற்படும் துயரம்; ”அவன் அவலத்துக்கு அழுவதா? மகன் பிரிவுக்குப் புலம்புவதா?” என்று அவள் அழுகைக்கே அர்த்தம் தெரியவில்லை. இராமன் பிரிவு நாட்டு மக்களை அழுகையில் ஆழ்த்தியது.