மந்தரை குறுக்கீடு :
ஊரே உவகையுள் ஆழ்ந்தது; மலர்ந்த பூக்களைக்காண முடிந்ததே அன்றிக் குவிந்த மலர் ஒன்றுகூட இல்லை; ஒரே ஒரு ஜீவன் மட்டும் புழுக்கத்தால் மனம் அழுங்கிக் கொண்டது. அவள் முதுகு கூனிக் குறுகி இருந்தது. அந்த ஊனம் அவள் மனத்திலும் ஏற்பட்டது.
‘மணிமுடி’ என்றதும் “யாருக்கு?” என்ற வினாவை எழுப்பினாள். இராமனுக்கு; அவன் இந்நாட்டுக் கோமகன்!” என்றனர். உண்டை வில்லால் இராமன் சிறுவயதில் தன் முதுகைக் குறிபார்த்து அடித்த பண்டைய நிகழ்ச்சி ஒன்று அவள் நினைவிற்கு வந்தது. “கிறுக்கனுக்கா இந்தத் தருக்குமிக்க வாழ்க்கை?” என்று அழுக்காறு கொண்டாள்.
கேகயன் மகள் அவளுக்கு மிகவும் வேண்டியவள்; அவள் தோழிகளில் இவள் மிகவும் நெருங்கியவள்; மனம் சுருங்கிய இவள், அவள் மருங்கு சென்றாள். காய்ச்சிய பாலில் ஒரு புரைத்துளி கலந்தால் அது தயிராகிறது; இனிப்பு புளிப்பாக மாறுகிறது. ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பது அவளுக்குத் தெரியும். பெண் மனம் என்பது என்ன என்பதை நன்கு அறிந்தவள்.
‘மகனுக்காகக் கட்டிய கணவனை உருட்டிவிடுபவள் பெண்’ என்பதை அறிந்தவள்; கணவன் துணை; மகன் அவள் உயிர்; பாசம்; கணவன் இறந்த காலம்; மகன் எதிர்காலம். பழமையை நினைத்துத் தன் கிழமையை உதறித் தள்ளமாட்டாள்.தாய்மை என்பது பெண்ணின் பெருமை; ஆனால் அதுவே அவள் வீழ்ச்சிக்குத் துணைமை என்பதையும் உணர்ந்தவள்.
‘பாசம் என்பது நெஞ்சைப் பசையற்றதாக ஆக்க வல்லது’ என்பதை அவள் அறிவாள்; பாரம்பரியப் பற்று வாரிசு நியமனம் மாமேதைகளுக்கும் வீழ்ச்சியைத் தரும் என்பதை அவள் அறிவாள். பிறந்த வீட்டுப் பாசத்தைத் தூண்டிவிட்டால் அது சுடர் விளக்காக எரியும்; அவள் மனம் திரியும்; கணவனை விட்டுப் பிரிக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.
கேகயன் மகளைவிட இவள் வயதில் மூத்தவள்; அதனால், முதிர்ந்த அறிவுடையவள்; அவள் உதிர்க்கும் சொற்களை அவள் தோழி விதிர்க்கமாட்டாள்; அவள் கூரிய அறிவு நிரம்பியவளாய் இருந்தாள். சூழ்ச்சித் திறன் மிக்கவளாயும் விளங்கினாள். “கருமத்தை முடிப்பதில் தருமம் எது? என்று சிந்திக்கமாட்டாள்.
கள்ளம் புகுந்த உள்ளம் :
வானத்து நிலா வையகத்தைக் குளிர்விக்கிறது. பாற்கடலில் இருக்கும் பவளக் கொடிபோலக் கைகேயி சயனித்து இருந்தாள். உறக்கம் அவளைக் கிறங்கச் செய்தது; எனினும், அவள் அருள் உள்ளம் கொண்ட வள் என்பதை அவள் அமைதியான கண்கள் காட்டின. களங்கம் அற்ற அவள் முகம் பளிங்குபோல் ஒளிவிட்டது.
தாமரை மலர் போன்ற அவள் சீறடியை அந்தப் பேரிடி போன்ற கரடி வந்து தீண்டியது; இராகு கேதுக்கள் தீண்டப் பெற்ற திங்களாய் மாறினாள் கைகேயி. ஆழ்ந்த தூக்கத்திலும் தொட்டது யார்? என்பதனை அறியும் மெல்லிய உணர்வு அவள் பெற்றிருந்தாள்;
வழக்கமாகத் தொடுவது; தன்னை வருடுவது தசரதன்; இது புதிய தொடுகை; எனினும், அவள் அறிவு விழித்துப்பேசியது. தெய்வக்கற்பினள் அதனால் அது தன் கணவன் கை அன்று என்பதை அறிந்து கொண்டாள்; கவலையற்ற மன நிலை. அதனால், தன் தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள விரும்பவில்லை.
கூனி தட்டி எழுப்பினாள்; தரையைக் கொழித்தாள்; குரலை உரப்பினாள்; “நெருப்புப் பற்றிக் கொண்டு எரிகிறது; நீ பொறுப்பு இழந்து உறங்குகிறாய்” என்று பொருமினாள். “இராமனைப் பெற்ற எனக்கு இடர் உளதோ?” என்று வினவினாள் கைகேயி. “அதனால்தான் உனக்குப் படர்கிறது வேதனை” என்று உரைத்தாள். “கோசலை உயர்ந்தாள்; நீ தாழ்ந்தாய்” என்று அறிவித்தாள்.
இராமன் மகளிரின் எதிரி; அவன் சீர்மை தவறிய உதிரி; அவன் ஏற்றம் கண்டு இங்கு வந்து இருக்கிறேன் பதறி” என்றாள். “அவன் ஏற்றத்தால் ஏற்பட்ட மாற்றம் யாது?” ‘அவன் பட்டத்துக்கு உரியவன் ஆகிறான்; அதனால், கோசலையின் திட்டம் செயல் பட்டுவிட்டது” பட்டுப்பட்டு என்று பேசிய பதற்றம் கண்டு அவள் வியந்தாள்.
“கோசலைக்கு அப்படி என்ன புதுவாழ்வு புகுந்துவிட்டது? பரதனை அவள் வரதனாக ஏற்று இருக்கிறாள்; விரதம் மிக்கு உடையவள்; தசரதன் அவள் கணவன்;பட்டத்து முதல்வி; இவற்றைவிட அவளுக்கு உயர்வு வேறு என்ன தேவைப்படுகிறது?” என்று கேட்டாள்.
‘நாளை இராமன் முடிசூடப் போகிறான்; நாளை வாழ்வு இது; கோசலை வாழ்கிறாள்; நீ தாழ்கிறாய்’ என்றாள். “இவ்வளவு நல்ல செய்தி சொல்ல முன்னுரை ஏன்? முகவுரை தேவை இல்லை; பதவுரையும், விளக்கவுரையும், உன்னை யார் கேட்டது? இராமன் முடிசூடுகிறான் என்பதை முன்னமே கிளந்து இருக்கலாமே. என் உள்ளம் குளிர, நீ கூறிய உரை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது;
உனக்கு என்ன பரிசு தருவது? என்று தெரியாமல் தவித்துக் கிடக்கிறேன். இது என் முத்துமாலை; இதனை ஏற்றுக்கொள்; இந் நல்ல செய்தியை நீட்டித்துச் சொல்லியது ஏன்? தோழி! நீ எனக்கு நல்லவள்; இதைவிட நல்ல செய்தி நீ வேறு என்ன சொல்ல முடியும் ? கூனிலும் இந்த முத்துமாலை உனக்குப் பொலிவு சேர்க்கும்; வானினும் மிக்க பெருமை இதனால் அடைவாய்” என்று கூறி அதனை நீட்டினாள்.
வாங்கி அதைத் தரையில் கொழித்தாள்; அவளைப் பழித்தாள்; சிவக்க விழித்தாள். சிந்திய முத்துக்கள் மாலையைத் தந்தவளைப் பார்த்துச் சிரித்தன. மனம் கொதித்தாள்; நெஞ்சு பதைத்தாள்; நிலத்தை உதைத்தாள்; அவள் பேச்சினை வெறுத்தாள். ‘இதன் விளைவை நீ எண்ணிப்பார்;
கோசலை இராமன் தாய்; தலைமை அவளுக்கு; அவல நிலைமை உனக்கு; கைகட்டிப் பிழைப்பார் எல்லாரும் அவள் வீட்டு முற்றத்தில் காத்து இருப்பர்” “விரும்பினால் நீ அவளுக்கு அடிமைப்படு அவளுக்கு உழைத்துப் பாடுபடு; என்னைவிடு; நான் அவள் தாதியர்க்கு ஆட்படுதல் செய்யேன்; இது உன் தலைவிதி; வேண்டாம் எனக்கு அந்தக் அவதி” என்றாள்.
“சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த ஆசனத்தில் இருக்கப் போகின்றார். அவந்தனாய் உன் மகன் பரதன் அவர்களுக்குக் கவரி வீசி அடிமைத் தொழில் இயற்றப் போகிறான்”. “இராமன் பதவி பெறுகிறான் என்பதைக் கேட்டு, நீ நிலைகொள்ளாமல் மகிழ்கிறாய்; அதற்கு நீ பரதனைப் பத்துமாதம் சுமந்திருக்கத் தேவை இல்லை. பெற்ற மகனுக்கு வாழ்வு தேடாமல், செல்வ மகனுக்குச் சீர்கள் தேடுகிறாய்; உன் தாய்மை உறங்குகிறது. அதை நான் தட்டி எழுப்பவேண்டி இருக்கிறது”
இந்தக் கிழவன், நயமாகப் பேசிப் பரதனைப் பாட்டன் வீட்டுக்கு ஏன் அனுப்பி வைத்தான்? திட்டமிட்டுச் செய்த சதி இது; நீ பிறந்தது அரசவீடு; அரசர் வீட்டில் வாழ்க்கைப்பட்டாய்; நீ விரசு கோலங்கள் இழந்து விரச வாழ்க்கை மேற்கொள்ளப் போகிறாய்; நினைத்துப்பார் பின்வருவது சிந்தித்துச் செயற்படுக” என்றாள்.
வரம்பு மீறி அவள் தரம் கெட்டுப் பேசுவதைக் கைகேயியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; விட்டால் விண்ணில் பறக்கிறாய்; எல்லை கடக்கிறாய்; அதனால் தொல்லைகளைத் தேடுகிறாய். அக்கம் பக்கத்தில் யாராவது நீ பேசுவது கேட்டு அறிந்தால், உன்னை அக்குவேறு ஆணிவேறாய்ப் பிய்த்துவிடுவர்;
சூழ்ச்சி செய்கிறோம் என்று மன்னன் ஆள்கள் நம்மை வளைத்துக் கொள்வர்; அதனால், விளையும் விளைவுகளை நினைத்துப் பார்! மனம் போன போக்கில் உன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாய்” என்று அறிவிப்புத் தந்தாள்.
‘அஞ்சுகமே! உன் சுகம் கருதியே பேசுகிறேன்; நீ அரசன் ஆணைக்கு அஞ்சுகிறாய்; இன்னும் எதுவும் மிஞ்சிப் போகவில்லை.” பாவம்! பரதன் பரிதவிப்புக்கு ஆளாகிறான்; அவன் செய்த குற்றம் உன் வயிற்றில் பிறந்தமையே; அதுதான் பெரிய குற்றம்.’
“அரசன் மாள, மற்றொருவன் நாடாள முடியும்; அவன் உயிரோடு இருக்க இராமன் ஆட்சிக்கு வருதல் முறையாகாது; மூத்தவன் தசரதன் இருக்கும்போது முன்னவன் என்று கூறிக் கொண்டு இவன் முடி ஏந்துவது தவறு அல்லவா?”
‘காலம் கருதித் தக்கது செய்தால்,ஞாலமும் கைகூடும்; இதை நன்கு பயன்படுத்திக் கொண்டவள் கோசலை; அரசனை அவள் மயக்கிவிட்டாள்; அவனை முடுக்கிவிட்டிருக்கிறாள்; இல்லாவிட்டால் தீடீர் என்று ஏன் அவன் இந்த முடிவுக்கு அடிவைக்க வேண்டும்? நான் படித்துச் சொல்கிறேன்;
நீ மனம் இடிந்து அழியப்போகிறாய்.” “நாளைக்கு இராமன் ஆட்சிக்கு வருகிறான்; நடக்கப்போகும் காட்சி என்ன?””பெட்டிச் சாவி கோசலை கையில்; அவள் கெட்டிக்காரியாகிறாள்; நீ கைகட்டிக் கொண்டு நிற்பாய்”.
“வறியவர் வந்து வாய்திறந்து கேட்டால் சிறியவள் நீ என்ன செய்வாய்? மூத்தவளைக் கேட்க அவள் தந்தால் நீ உன் மானத்தைக் காத்துக் கொள்ள முடியும்; ஆட்சி அவள் கையில்; அடிமைத்தளை உன் தாளில்; வள்ளலாக வாழவேண்டிய நீ, எள்ளல் நிலையில் தாழப் போகிறாய் ஏழ்மை உனக்கு; மேன்மை அவளுக்கு”.
“எந்த வகையில் மூத்தவளுக்கு நீ தாழ்ந்துவிட்டாய்; மூவரில் நீ பேரழகி; அரசன் ஆசைக்கிழத்தி; இப்பொழுது அனைத்தையும் இழத்தி'”கெஞ்சுவது உன்னிடம்; அவன் அஞ்சுவது கோசலைக்கு; மஞ்சம் உனக்கு; தஞ்சம் அவளுக்கு; இது
வஞ்சம் என்று நினைக்கிறது என் நெஞ்சம்” என்றாள்.
“மானே தேனே, என்று தெவிட்டாமல் பேசுவான்; பழகியதால் பால் புளித்ததோ! ‘கட்டிக் கரும்பே’ என்று பேசியவனுக்கு நீ எட்டிக்காய் ஆகிவிட்டாயோ? பித்தம் பிடித்தவள்போல் நீ பிதற்றாமல் இருக்கிறாய்; சித்தம் அடங்கி,நித்தம் அவனோடு குலவப் போகிறாயா?” பூ உனக்கு எதற்கு? அதைப் பிய்த்துப் போடு; திலகம் ஏன்? அதனைக் கலைத்துக் கலகம் செய்;
சடை; அது உனக்குத் தடை; அதை விரித்துவிடு; சிரிப்பான் அவன்முன் சீர் குலைந்துநில்; பட்டுப் புடவை ஏன்? பகட்டை விடு; காசுக்கு உதவாதவர் கலகலப்புக் காட்டுகிறார்கள். சுகாசினியாக இருக்க வேண்டிய நீ, விகாசினியாய் இருக்கிறாய். அந்தப் புரத்து அழகி உன்னை எந்தப்புரமும் வளராமல் தடுத்துவிட்டான்; இட்ட மகிஷி என்றால் பட்டமகிஷியாக ஏன் ஆகக் கூடாது?” “கொஞ்சிக்குலவ உன்னை வஞ்சிக்கொடி என்றான்;
நீ வஞ்சித்து அவனுக்கு அது உண்மை என்பதைக் காட்டு”. “அழகி என்கிறான்; மனம் இளகிவிட்டாய்; இளயவள் என்றான்; வளைந்து கொடுத்தாய்; தாய்மை என்றால் அது அவனுக்குச் சேய்மையாகிவிட்டது. நீ பரதன் தாய் என்பதை அவன் தட்டிக்கழித்து விட்டான். ‘இனி உன் தாய்மை பேசட்டும்; பரதன் வாழட்டும்; உனக்கு இழைத்த அநீதி ஒழியட்டும்; சொன்ன சொல் ஆற்றட்டும்” என்றாள்.
“என்னடி உனக்கு இந்த வேகம்?” என்றாள் கைகேயி.‘அது என் விவேகம்; அவனிடம் உன் பிடிவாதம் காட்டு; உன் பிடியில் அவனை மாட்டு; சிறந்த தாய் என்பதை நீ அவனுக்கு எடுத்துக் காட்டு; இது இராமனுக்கு நான் வைக்கும் அதிர்வேட்டு” என்றாள்.
“நாவை அடக்கு; உன் போக்கு நீக்கு; அக்கம் பக்கம் அறிந்தால் உன்னை மொட்டை அடித்து முழுக்காட்டிவிடுவர்” என்று அச்சுறுத்தினாள். ‘அதற்கு வேறு ஆளைப்பாரு; அஞ்சுவது நான் அல்ல; உன் நலம் தான் எனக்குப் பெரிது” என்றாள்.
அம்மிக் கல்லும் குழவிக் கல்லால் குழைந்துவிட்டது; தேய்ந்துவிட்டது; பரதன் தாய் மனம் நெகிழ்ந்தாள்; உறுதி குலைந்தாள்; மகனுக்கு உறுதி தேடினாள்; அதனால்; விழித்து எழுந்தாள். “வழி யாது?” என்று வினவினாள்; “நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?” என்று கேட்டாள்.
“அறிவுடையவள் நீ! இனி நீ பிழைத்துக் கொள்வாய்; தெரிந்தும் பிழை செய்வாய்” என்றாள். “நீ வெல்வாய்; நான் சொல்வது செய்வாய்; கோமகன் வருவான்; கோமாளியாய்ச் செயல்படாதே; உன்னைத் தழுவ வருவான்; அந்த வாய்ப்பை நழுவவிடாதே; கடிந்து பேசு; படியவை”.
வரம் கேள் :
“சம்பராசூரனோடு தசரதன் போர் செய்தான்; நீ அவனுக்குத் தேர் ஒட்டினாய்; வெற்றி உன்னால் கிடைத்தது. நெற்றிக்குமேல் வைத்து உன்னைப் புகழ்ந்து போற்றினான்; வரம் கேள் என்றான்; இரண்டு வரம் உன் கேள்வனிடம் கேட்டுப் பெற்றாய்; அவற்றை இப்பொழுது செயல்படுத்தச் சொல்” என்றாள்.