திருப்புமுனை :
இராமனுடைய மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தசரதன், அவனை ஆட்சியில் அமர்த்தி, மணி முடிதரித்த அரசு கோலத்தில் காண விழைந்தான். அதற்குக் காரணம் என்ன? இராமன் தக்க பருவத்தை அடைந்தான். என்பது அன்று; தசரதன் முதுமையின் நுழைவாயிலில் கால் அடி எடுத்து வைத்தான் என்பதுதான். தன் தோள்சுமையை மாற்று ஆள்மீது ஏற்ற நினைத்தான்.
நரைமுடி ஒன்று அவனுக்குத் தன் முதுமையை அறிவித்தது; தான் இனி வாழ்க்கையில் கரை ஏற வேண்டும் என்று நினைத்தான். நிலைக் கண்ணாடி முன் புதிய நினைவு தோன்றிது. பெருநிலக் காவலனின் கறுத்து இருந்த மயிர்முடி ஒன்று வாழ்க்கையை வெறுத்து வெளுத்துக்காட்டியது; அவன் செவியில் வந்து மோதியது; அவன் மூப்பைப் பற்றி ஓதியது.
உனக்கு வயது ஆகிவிட்டது; இனி வாய்ப்புத் தரமுடியாது; ஆட்சியை மாற்று; காளைப் பருவத்து ஆளை உன் மகனாய்ப் பெற்றிருக்கிறாய்; நாளையே அவனுக்கு மணிமுடி சூட்டு; நீ காட்டுக்கு நடந்து காட்டு; இம்மைக்கு வேண்டுவன தேடிக் கொண்டாய்; மறுமை வெறுமையாய்க் கிடக்கிறது.
தவம் செய்க; வாழ்நாளை அவம் ஆக்காதே; இளமைக்கு அழகு இன்புற்று இருத்தல்; முதுமைக்கு ஆக்கம் அறிவு மிக்க நோக்கம்; இங்கே இருந்தால் ஏற்படும் தேக்கம்; அமையட்டும் தவத்தில் ஊக்கம்” என்று அறிவுறுத்தியது.
“காடு வா வா என்கிறது; வீடு போபோ என்கிறது” என்னும் நிலையைத் தசரதன் அடைந்தான். அறிவுடை அமைச்சர் இருந்தனர்; செறிவு மிக்க வேள்வியர் இருந்தனர்; அவர்கள் எடுத்து உரைக்காத அறிவுரையை ஒரு மயிர்முடி தோற்றுவித்தது.
அது வரலாற்றுத் திருப்பத்துக்குத் துணை செய்தது; “மாட்சிமிக்க இராவணன் வீழ்ச்சி அடைதற்கு உரிய காலம் வந்துவிட்டது” என்று அறிவிக்கும் முன்னறிவிப்புக் காட்சியாக இது விளங்கியது. அவன் ஆற்றிய தீவினைகள் இந்நரை முடி வடிவத்தில் வெளுத்து வந்து, அவனைக் கொல்லுமாறு செயல்பட்டது.
தசரதன் மனமாற்றம் :
தசரதன் அமைச்சர் அவையைக் கூட்டினான்; வசிட்டரை அழைப்பித்தான்; ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரை அழைத்தான்; அரசியல் சட்டம் அறிந்தவர் அமைச்சர்; சாத்திர சம்பிரதாயங்கள் அறிந்தவர் குலகுரு வசிட்டர். எந்த முடிவையும் தானே துணிந்து எடுக்கத் தசரதன் விரும்பவில்லை;
வீட்டுப் பிரச்சனையாக இருந்தால் தம் மனைவியரைக் கேட்டுச் செய்யலாம்; இதனால், ஏற்படுகின்ற பாதிப்பு நாட்டு மக்களைச் சாரும்; அதனால், அமைச்சர் அவை கூட்டி ஆலோசனை நடத்தினான். தசரதன் அமைச்சர் எத்தகையவர்? வள்ளுவர் காட்டும் அமைச்சியல் நன்கு அறிந்தவர்; அரசியல் நுட்பம் உணர்ந்தவர்; விலை கொடுத்து வாங்க முடியாத மனநிலை பெற்றவர்கள்.
அமைச்சர் இயல்புகள் :
தசரதன் அமைச்சர் குலத் தொன்மையும், கலைச்செல்வமும், கேள்வி ஞானமும்,நடுநிலைமையும் உடையவராய் விளங்கினார். குலத் தொன்மை என்பது அக்காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. காலம், இடம், கருவி இம் மூன்றையும் நூல் வழியும் ஒற்றர் வழியும் ஆராய்ந்து, தெய்வ அருளையும் நம்பிச் செயலாற்றினர்.
அரசன் சினத்துக்கு அடங்கித் தாம் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்; அறவழிகளினின்று என்றும் பிழை செய்ய நினைக்கமாட்டார்கள். இடித்து உரைக்கும் துணைவர் இல்லாத ஆட்சி, வீழ்ச்சியுறும் என்பதை அறிந்தவராய்ப் படித்து உரைப்பர். உறுதிகளைக் கேளாத அரசன் தனக்கு இறுதிகளைத் தேடிக்கொள்வான். அதனால், அவனுக்கும் அவனுக்கும் நாட்டுக்கும் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது எது என்று முடிவு செய்யும் இயல்பினர்.
அவர்கள் மருத்துவர்போல் தக்க அறிவுரைகள் தரும் செருக்கினை உடையவர்; கசக்கும் என்பதால் அவன் இசையான் என்று நினைத்து அடங்கி இருக்க மாட்டார்கள். மனதில் பட்டதை மட்டும் கூறாமல் நன்கு ஆராய்ந்து காரண காரியங்களைக் காட்டித் தம் முடிவுகளுக்குச் சான்றுகள் தருவர்.
முன்னோர் காட்டிய வழி இது என்று அறிந்து, அதனால் ஏற்பட்ட ஆக்கமும் கேடும் கண்டு உரைப்பர்; பழம்பொருள் ஆராய்ச்சி செய்து அதனை நிலை நாட்டக் கருதாமல் வருபொருள் இது என்று முன்கூட்டி அறிவிப்பர். அரசுக்கு இவர்கள் தூண்களாக நின்று செயல்பட்டனர்.
புறத்தாக்கு எதுவும் நிகழவில்லை; அகநோக்கு எதுவும் அவன் அறிவிக்கவில்லை; கூட்டிய சூழ்நிலை ஏதும் அறியாத அவர்கள், அவன் வாய்திறந்து மொழி வதைக் கேட்க ஆவல் நிரம்பியவராய் அமர்ந்திருந்தனர். தசரதன் தன் மனநிலையை எடுத்து உரைத்தான்; அவர்கள் செவிமடுத்தனர். “சொல்வது புதுமை; அதனால், அது அதிர்ச்சியைத் தரலாம்; என்றாலும், அறிவு முதிர்ச்சி உடையவர் தக்கது என்று இதனை ஏற்றுக் கொள்வர்.
இதுவரை என் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தீர்; இனி என் தவமாட்சிக்குத் தடையாக நிற்க மாட்டீர் என்று நினைக்கிறேன்.” “என் மகன் இராமன் ஆட்சி ஏற்க, நீங்கள் தக்க துணைவர்களாக இருக்க வேண்டும்; வழி நடத்தித் தரவேண்டும்” என்றான்.
அமைச்சர் தந்த மாற்றம் :
வாமனனாக வந்தவன் மூன்றடி மண் கேட்டான். இதை மாவலி எதிர்பார்க்கவில்லை; மாமன்னனாகிய தசரதன் மண் வேண்டாம்; விண் வேண்டும் என்று புதிய வரத்தைக் கேட்கிறான். இது புதுமையாய் இருக்கிறது. ஆட்சியின் சுகத்தை நுகர்ந்தவன் அவன்; அதை விட்டுக் கொடுக்கிறான் என்றால், அது புதுயுகமாகத் தான் இருக்கும்.
நாட்டிலே மறுமலர்ச்சி உண்டாவது கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் அவர்கள் பழகி வந்த பழையோன், தன் கிழமையை விடுகிறான் என்றால் அவர்களால் வருந்தாமல் இருக்க முடியவில்லை; பாசம் அவர்களை இழுத்தது.
மூத்த கன்று விலகினால்தான் இளைய கன்றுக்குட்டிக்குத் தாய்பசு பால் தரமுடியும். அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை அந்த அமைச்சர் பெற்றனர். ‘அரசன் தம்மை விட்டு விலகுகிறான்’ என்பதால் வருத்தம் ; இராமன் தம்மை வந்து அணுகுவதால் மகிழ்ச்சி; இந்த இரு உணர்வுகளுக்குஇடையில் அவர்கள் தள்ளப்பட்டுத் தத்தளித்தனர்.
“பாசம் எங்களைப் பிரிகிறது; இராமன்பால் நேசம் எங்களை அழைக்கிறது. எதற்கு நாங்கள் சாய்வது என்று தெரியாமல் வேகிறோம்” என்றனர். வருவது முறையா? என்று உம்மைக் கேட்கவில்லை. நான் போவது சரியா இராமன் அந்த முடிவை நான் ஏற்கனவே எடுத்துவிட்டேன்.
‘இரு’ என்று சொன்னாலும் நான் இனி இந்த ஆட்சியை விரும்பிச் சுமக்கப் போவது இல்லை” “நீங்கள் இனிச் சொல்ல வேண்டுவது இராமனுக்கு ஆளும் தகுதி உளதா? என்பதை மட்டும் கூறினால் போதும்; உள்ளத்தில்படும் மதிப்புகளைக் கள்ளத்தால் மறைக்காமல் வெள்ளத்துக் கவிப் பெருக்குப்போலத் தடையின்றிச் சொல்ல வேண்டுகிறேன்” என்றான்.
“நீங்கள் மாற்றத்தை ஏற்கிறீர்களா? இல்லையா? என்பது கேள்வி அன்று; இராமன் ஏற்றத்தை மட்டும் கூறி, அவனை ஏற்க இசைவு தருகிறீர்களா இல்லையா என்பதை இயம்புக” என்றான். “நாட்டு மக்கள் அவனை விரும்புகின்றனர்;
அதனால் ஆட்சி ஏற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளது”என்று சுருக்கமாகவும் தெளிவுபடவும் அமைச்சர் உரைத்தனர். “அமைச்சர் ஏற்கிறார்களா? அரசன் விரும்புகிறானா என்பன அடிப்படை அல்ல; மக்கள் விருப்பம் தான் முடிவுக்கு உதவுவது” என்று கூறிய அரசியல் கருத்துப் போற்றுவதாய் இருந்தது.
வசிட்டர் கருத்து :
வசிட்டரை அணுகி அவர் கருத்து யாது? எனத் தசரதன் கேட்டான். “அமைச்சர் ஆமோதித்து விட்டனர்; நீயும் இதை விரும்புகிறாய்; மக்களும் இதை வரவேற்பர்; இராமனுக்கும் தகுதிஉள்ளது” என்று வசிட்டர் கூறினார்; மேலும், தொடர்ந்து இராமனைப் பற்றிய தம் கருத்துகளை விரித்து உரைத்தார்.
இராமன் யாரோ எவரோ என்று கூறும் நிலையில் இல்லை; மாமன்னன் மகன்; அதனால் ஆட்சி உரிமைக்கு அவன் தகுதி உள்ளவன்”. “அடுத்து அவன் மனைவி சீதைபால் பட்டத்து அரசி ஆவதற்கு வேண்டிய நல்லியல்புகள் அனைத்தும் உள்ளன; அவள் மக்களுக்கும் நற்பணிகளுக்கும் நடு நின்று தடையாய் இருக்க மாட்டாள்”.
“நாட்டு மக்கள் அவனே தலைவனாய் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்; அவன் நல்லாட்சியில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; அவனும் அவர்களை மிகவும் நேசிக்கின்றான்”. “நீ எடுத்த முடிவு இந்த நாட்டுக்கு நல்ல விடிவேயாகும்” என்று கூறினான்.
சுமந்திரன் இடையீடு :
தேர் ஓட்டியாகிய சுமந்திரன் நா அடக்கம் இன்றி, நிலை கொள்ளாமல் தன் மனத்தில் பட்டதை உரைத்தான். “நீங்கள் ஆட்சியைத் துறப்பது தக்கதாகப்படவில்லை; என் செய்வது? பழையன கழிகின்றன; புதியன புகுகின்றன. இது உலக இயலின் மாற்றம்; இதை யாரும் தடுக்க முடியாது. “தோளுக்கு வந்துவிட்டவன் இராமன்; அரசு சுமை தாங்கும் ஆற்றல் அவனிடம் உள்ளது.
“நேற்று எப்படியோ அப்படித்தான் இன்றும்; இன்று எப்படியோ அதுதான் நாளையும்; உங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. உலகம் மாற்றம் விரும்புகிறது. அதனால் அவன் ஆட்சிக்கு வருவது மாட்சிமை உடையது. எனினும், உம்மை இழக்கின்றோம்; அது எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது” என்று இரங்கற்பா பாடினான்.
தேர் ஓட்டி தன் நிலை மறந்து பேசுவதை தசரதன் விரும்பவில்லை; இராமனை அழைத்து வரச் சொன்னான். “அப்பம் எண்ணச் சொன்னேனே தவிர அதில் எத்தனை குழிகள் உள்ளன என்று உன்னைக் கேட்கவில்லை”. ‘கடமையைச் செய்; கதைகள் பேசிக் கொண்டு இங்கு உன் மடமையைக் காட்டாதே” “தேரைச் செலுத்து; இராமனை இங்கு அழைத்துவா” என்று ஆணையிட்டான்.
அதற்குமேல் அங்கே அவன் நிற்கவில்லை. காற்றிலும் கூடிய வேகத்தோடு காகுத்தன் அரண்மனையை அடைந்தான். மனையில் இராமன், தன் மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தான்; மகிழ்வு நிரம்பிய சூழலில் அவன் தன் அகமுடையாளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவனிடம் என்ன சொல்வது? உண்மை சொல்வதா? மன்னன் உரைத்தை மட்டும் உரைப்பதா? ‘ஆட்சி உனக்குத் தரத் தசரதன் அழைக்கின்றான் என்று கூறவில்லை. அப்படிக் கூறினால் அது மிகைப்படக் கூறுதல் ஆகும்; அதிர்ச்சியும் தருவது ஆகும். ஆசைகளைத் தூண்டிவிட்டால் அவை அணைக்க முடியாமல் போகும்; ‘செய்தி சொல்ல வந்தவன்’ என்ற தன் நிலையை மறக்காமல் செப்பினான். காவலன் உன்னைக் காண ஆவல் கொண்டுள்ளான்” என்றான்.
அவ்வளவுதான்; அவன் தன ஆருயிர்த் துணைவியிடம் சொல்லிவிட்டுப் புறப்படவில்லை; ஆடை வேறு மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று உரை ஆற்றவில்லை; எதற்கு? ஏன்? என்ற வினாக்களைத் தொடுக்காமல் உடனே அவனோடு புறப்பட்டான். கரிய மேகம் சூழ்ந்ததுபோல நீல நிறத்தவன் ஆகிய அழகன் தேரில் ஏறிச் சொன்றான்.
இராமனைத் தழுவிக் கொள்ளுதல் :
வந்தவனைத் தசரதன் தன் தோள்கள் ஆரத் தழுவிக்கொண்டான். அத்தழுவலில் புதிய பொருள் இருந்ததுபோலக் காணப்பட்டது. அத்தோள்கள் திண்மை உடையனவா? என்ற உண்மையைக் காண எடுத்துக்கொண்ட முயற்சி போல இருந்தது. “நிலமகள் தன்னைச் சுமக்க வலிமை மிக்க தோள்களை நாடுகிறாள்; முதியவன் நான்; ஆட்சிச் சுமையால் தளர்ந்து வாடுகிறேன்; வளர்ந்துவிட்ட நீ வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்’.
“நொண்டிக் குதிரை எத்தனை நாளைக்கு வண்டியை இழுக்கும்; அது சண்டித்தனம் செய்வதற்கு முன் முண்டிஅடித்து நீ வந்து குடை சாயாமல் தாங்க வேண்டும்.” “மகனைப் பெறுவதற்கு எதற்காக? மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பது போன்றது அன்று அது. மகனை மதலை என்பர் ஏன்? தாங்கும் சக்தி அவனுக்கு உண்டு என்பதால்; ‘சுமை தாங்கி’ மகன் என்று கூறுவர்.
“மக்களைப் பெற்றவர் மகாராசர் என்கிறார்கள்; ஏன்? அவர்கள் ஆட்சியைத் தாங்க வந்து நிற்பதால்” “பெற்றவர்க்குப் பெருங்கடமை செய்த பெருந்தகைகள் உன்முன்னோர், பகீரதன் கதை உனக்குத் தெரியாதா? செத்து மடிந்தவரின் சாம்பலுக்கு நித்திய பதவி தரக் கங்கையை வரவழைத்தான். அவன் அரியமுயற்சியை அகில உலகும் பாராட்டுகிறது.”
‘செல்வம் என்றால் உலகப் பொருள்கள் அல்ல; அவை நிலையாது கைமாறும். மக்கட் செல்வம்தான் மதிப்பு மிக்க செல்வம்; அது மட்டும் அன்று; யார் பெருமகிழ்விற்கும் மதிப்பிற்கும் உடையவர் தெரியுமா?” ‘பதவியில் உயர்ந்தவன் இந்திரன்; சுக போகங்களை அனுபவிப்பதில் அவன் தொடர்ந்து இன்பம் அடைகிறான்’ என்று கருதுகிறார்கள்.
‘மோன நிலையில் இருந்து தவம் செய்யும் ஞானிகள் பேரின்ப நிலை அடைகிறார்கள்’ என்று பேசலாம். அது முழு உண்மையன்று; நன்மக்களைப் பெற்றவர்களே நானிலத்தில் நன்மதிப்புப் பெறுகின்றனர்” “உன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்; தோள்மேல் சுமந்து உன்னைத் தூக்கி வைத்து மகிழ்ந்து இருக்கிறேன்;
கல்வியும் படைப் பயிற்சியும் தந்து உன்னை மாவீரன் ஆக்கினேன்; சான்றோர் என்று உலகம் உன்னைப் புகழ்கிறது. நாட்டு மக்கள் நேசிக்கின்றனர்; சீதை கேள்வன் என்ற பெருமை உன்னைச் சார்கிறது. மணக்கோலத்தில் கண்ட நான் அரசு கோலத்தில் உன்னைக் காண விழைகின்றேன்.
“நான் காளைப் பருவத்தையும் கடக்கவில்லை; நாளை பார்த்துக் கொள்ளலாம், என்று நீ தள்ளிப்போட நினைக்கலாம். உன் சுதந்திரம் பறிபோகின்றது என்று நீ நினைக்கலாம்; சுமை மிக்க பொறுப்புகளை ஏற்பதால் சுவைமிக்க வாழ்வு நீ இழக்க நேரிடலாம் என்றும் என் வேண்டுகோளை மறுக்கலாம்; உன் விருப்பு வெறுப்புகளும் தடுக்கலாம்; நாடு உன்னை நாடுகிறது” என்றான்.
மன்னன் உரைத்த உரைகள் அவனுக்கு உவகையை ஊட்டவில்லை; அதே சமயத்தில் பொறுப்புச் சேர்கிறதே என்று சோர்வும் காட்டவில்லை. சுக துக்கங்களைச் சமமாகப் பார்க்கின்ற மனநிலை அவன் தகவாக இருந்தது; இடுக்கண் அது என்று அவன் நடுக்கம் கொள்ளவில்லை. வடுக்கள் மிக்கது என்று அதனை விடுவதாகவும் இல்லை.
பதவி என்பது பிறர்க்கு உதவி செய்வதற்கு அமையும் வாய்ப்பே தவிர, அதை வைத்துக் கோடிகள் குவித்துக் கேடுகளை வளர்ப்பதற்கு அன்று; அரச பதவி என்பது மக்களுக்குத் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பு; மாந்தர் வாழத் தலைமை ஏற்க ஒருவருக்கு ஏற்படும் நிலைமை; அரசன் என்பதால் உலகம் புகழ்மாலை சூட்டுகிறது; அதற்காக அவன் தலை சாய்க்கவில்லை; தந்தையிட்ட கடமை; அதைத் தள்ளக் கூடாது என்பதால் ஏற்க ஒப்புக் கொண்டான்.
முடிசூட்டு விழா முடிவு செய்யப்பட்டது. அவ் விழா நடத்துதற்குமுன் உலக மன்னர்க்கு ஓலை அனுப்பி அழைப்பு விடுத்தான். அவன் பெருநில மன்னன்; மற்றைய குறுநில மன்னர்களை அழைத்து அவர்தம் கருத்தைக் கேட்டான். “மகன் என்ற பாசத்தால் நான் மற்றைய நலன்களைக் கருதாமல் அவசரப்பட்டு எடுத்த முடிவாக இருக்கலாம்; அது தவறாகவும் அமையலாம்; உங்கள் கருத்தை அறிவித்தால் அது பொருத்தமாய் இருந்தால் இதை நிறுத்திக் கொள்ளக் காத்திருக்கின்றேன்” என்றான்.
அரசர் கருத்துரை :
அவர்கள் இராமனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துகளை வரிசைப்படுத்தி உரைத்தனர். “தானம்,தருமம், ஒழுக்கம், ஞானம், நல்லவரைப் போற்றும் நயம், தீயவரை ஒறுக்கும் தூய்மை, பகைவரை அழிக்கும் தகைமை இவை எல்லாம் இராமனிடம் நிரம்ப உள்ளன”.
”ஊர்ப் பொதுக்கிணறு பலருக்கும் பயன்படுகின்றது; பயனுள்ள மரம் பழுத்தால் நயம் உள்ளதாகப் பலருக்குப் பழங்கள் தருகின்றன. வானத்து மழை பயிர்களைப் பசுமையாக்குகிறது. கழனிகளில் நதிப்புனல் பெருகிப் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது. இவற்றை எல்லாம் யாராலும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. மக்கள் இராமனை எல்லா வகையிலும் நேசிக்கின்றனர்.
அவனும் அவர்களிடம் அன்பும், பரிவும் காட்டுகிறான். அதனால், அவனே தக்கவன்” என்று ஒருமித்த கருத்தை உரைத்தனர். தான் எடுத்த முடிவு ஏற்றம் உடையது என்பதால் தசரதன் மகிழ்வு கொண்டான். “இவன் என் மகன் என்பதைவிட உங்கள் ஏற்பு மகன் என்பதில் பெருமைப்படுகிறேன். இவன் உலகக் குடிமகன்” என்று கூறிப்பெருமிதம் கொண்டான்.
கோசலைக்கு அறிவித்தல் :
நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த கணக்கரை அரசன் கூட்டினான். இச் செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட அணங்கு அனைய நங்கையர் கோசலைபால் தலைதெறிக்க ஓடினர். “மன்னன், உன்மகனுக்கு மணிமுடி சூட்டு கிறான்” என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர். தென்றலின் சுகத்தை அச்சொற்கள் தேடித் தந்தன. அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது. வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.
“ஈன்றபொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற குறட்பாவுக்கு அவள் விளக்கமாக மாறினாள். தன் மகன் மூத்தவன்; அறிவு முதிர்ந்தவன்; பொறுப்பு ஏற்கத்தக்கவன் என்பதால் தேர்வு சரி எனப்பட்டது. இவற்றோடு நால்வருள் இராமனைப் பெற்றதால் அவள் பேருவகை அடைந்தாள். தனக்கு நெருக்கமான சுமத்திரையை அழைத்துக்கொண்டு நாரணன் கோயிலை நண்ணிப்பூசனைகளும் வழிபாடுகளும் செய்தாள்.
வசிட்டர் அறிவுரை :
அடுத்த நாளே ‘முடிசூடும் நாள்’ எனக் கணித்து உரைத்தனர். தசரதன் வசிட்டரிடம் முடிசூட்டுதற்கு முன் இராமனைச் சந்தித்து நல்லுரைகள் நல்க வேண்டினார். ஆட்சிக்கு வரும் இளவரசனுக்கு நலமிக்க வாசகங்களை வடித்துத் தந்தார்; பட்டம் தாங்கும் விழாவுக்கு முன் பார்வேந்தன் அறிய வேண்டியவை இவை என எடுத்து ஓதினார்.
”நாட்டுக்குக் கேடு விளைவிப்பது உட்பகையும் வெளித்தாக்குதலும் ஆகும்; பகை இல்லாவிட்டால் போர் இல்லை; போர் இல்லை எனில் அழிவு இல்லை; அமைதி நிலவினால்தான் மக்கள் ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்டுவர்; செல்வம் செழிக்கும்; அறங்கள் தழைக்கும்”. ‘நாட்டு ஆட்சிக்குப் பொருள்வருவாய் தேவை; தேவைக்குமேல் மக்களிடமிருந்து வரித்தொகை பெறக்கூடாது.
ஈட்டும் பொருளை நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட வேண்டும்; சொந்த சுகங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது”. “நீதித் துறையில் அரசன் இரு தரப்பினரையும் விசாரித்து நடுவுநிலை பிறழாமல் நீதி வழங்க வேண்டும்;கொடியவரை ஒறுப்பது களைகளை நீக்குவதற்கு நிகர் ஆகும். அப்பொழுதே ஏனைய மக்கள் அச்சமின்றி வாழ முடியும்”.
‘அரசன் மிக்க ஆற்றல் உடையவன் ஆயினும் போற்றத் தகு நல்லமைச்சரைக் கேட்டுச் செயல் ஆற்ற வேண்டும்; முதிர்வு உடைய அறிஞரைக் கலக்காமல் அதிர்வு தரும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது”. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அவர்களை நல்வழி இயக்குவதற்கு மன்னன் வழிகாட்டியாய் இருக்க வேண்டும். மன்னன் எவ் வழி மக்கள் அவ் வழி;
அறவாழவும் அருள்நெஞ்சும் அவனுக்கு இன்றியமையாதன; இன்சொல், ஈகை, எண்ணிச் செயற்படும் திறன், முயற்சி,தூய்மை, விழுமியது நினைத்தல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்; நீதியும் நேர்மையும் உன்னிடம் இயல்பாக உள்ளன; அவற்றோடு பரிவும் பாடு அறிந்து ஒழுகும் பண்பும் இருத்தல் வேண்டும்”.
“நாட்டு மக்களை மதிக்க வேண்டும்; அற ஒழுக்கம் தவறாத அந்தணர், தவ ஒழுக்கத்தில் தலை சிறந்த முனிவர் இவர்களை மதித்து இவர்பால் பணிவு காட்ட வேண்டும்”. “உழுவார் உலகத்துக்கு அச்சாணி போன்றவர்; அவர்கள் கை மடங்கி விட்டால் தவசிகளும் பட்டினிதான்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; சோம்பித் திரியாமல் சுருசுருப்பாய்த் தொழில் செய்யும் ஏனைய தொழிலாளிகள் இவர்களை மதித்து, இவர்கள் தேவைகளைக் கேட்டுத் திட்டங்கள் இயற்றிச் செயல்படுத்த
வேண்டும்”.
“சோம்பலையும் மறதியையும் விட்டு ஒழிக்க வேண்டும்” என்று வசிட்டர் ஓர் ஆத்திச்சூடியை அறிவித்தார். “மேலும், இளைஞர் தவறும் இடங்கள் சில உள்ளன. மங்கையரின் அழகு மயக்கம் தருவதாகும்; அவர்கள் அங்கைகளைத் தொட்டுவிட்டோம் என்பதால் அவர்கள் மயக்கிய அறிவுரைகளைக் கேட்டுப் பாதை தவறக் கூடாது.
கட்டிய மனைவி ஆயினும் அவளிடம் ஒட்டிய உறவு கொண்டு விட்டதால், ஆட்சியில் அவள் தூண்டும் தவறான செயல்களைச் செய்யக் கூடாது”. ‘ஆடல் அழகியர் கூடலில், நாட்டின கடமையை மறந்து ஆட்சியை இழந்தவர் பலர். காமக் களியாட்டம் வேண்டி அமைச்சரிடம் ஆட்சியைத் தந்து ஒதுங்கி விட்டவர் நாமம் இல்லாமல் மறைந்தது உண்டு”.
‘அரச வாழ்வு சுக போக வாழ்வு அன்று; மக்களைச் சுகப்படுத்த எடுத்துக் கொள்ளும் சூளுரை; விருப்பு வெறுப்புக் காட்டாமல் பொறுப்பாய் ஆட்சியை நடத்த வேண்டும். கண்ணோட்டம் கண்ணுக்கு அழகுதரும்; அது பெண் நாட்டத்தில் முடியக்கூடாது. கலைகளை வளர்ப்பது வேறு; அவற்றை விலை பேசுவது வேறு. புலவர், கலைஞர் இவர்களை மதித்துப் பாராட்டிப் பரிசுகள் தந்து கலைகளை ஊக்குவிக்க வேண்டும்”.
இராமன் ஏற்பு :
இவ் அறிவுரைகளை ஒரு சடங்காகமட்டும் அல்லாமல் தேவைக்காகவும் அவர் இராமனுக்கு எடுத்துக் கூறினார். வசிட்டர் கூறிய அறிவுரைகளைச் செவிமடுத்துப் “புவியாள்வது பொறுப்புமிக்கது” என்று எடுத்துக் கொண்டான்; அன்னை கோசலை தெய்வத்தை வழிபட்டதுபோல இவனும் ‘உலகுக்கு எல்லாம் ஒருதலைவன் உளன்’ என்பதை உணர்த்துபவனாகித் தெய்வ வழிபாடு செய்தான்.
விழாவுக்கு முன்னால் புண்ணியப் புதுப்புனல் கொண்டு வந்து அப்புனிதனை நீராட்டினர். நன்மைகள் அவனை வந்து அடையச் சடங்குகளைச் செய்தனர். வெள்ளை நிறப் புல்லில் கள்ளமில்லாத கார்வண்ணனை அமர வைத்தனர்; அப்புல்லிற்குத் தருப்பைபுல் எனப் பெயரிட்டனர்.
மணநாளுக்கு முந்தியதினம் வழக்கமாக இயற்றும் சடங்குகளைச் செய்தனர். ஒரே நாளில் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பரபரப்பாய் நடந்து முடிந்தன. அடுத்த நாள் நடக்க இருக்கும் முடிசூட்டும் விழாவைப் பற்றிய செய்திகள் இறக்கைகள் கொண்டு பறந்தன; நாடறியச் செய்தனர் அயோத்தி மாநகர் இந்திரன் பொன்னகர் எனப் பொலிவு பெற்றது.
திக்கு எட்டும் செய்தி பரவியது; திசைகள் எட்டிலும் இருந்து மக்களும் மன்னரும் வந்து குழுமினர்; வள்ளுவன் என்னும் செய்தி பரப்புவோன் யானை மீது ஏறி ஊரறியச் செய்தான். இராமன் நாளையே முடி சூடுகிறான்” என்ற செய்தியைப் பரப்பினான்; மக்கள் களிப்பில் மூழ்கினர். வாழை மரங்கள் இடம்பெயர்ந்தன; கமுக மரங்கள் அழகு செய்தன; முத்துமாலைகள் ஒளி வீசின, பொற்குடங்கள் பொலிவு ஊட்டின.