மக்கள் மகிழ்ச்சி :
“கோமுனிவனுடன் வந்த கோமகன்; நீல நிறத்தவன்; தாமரைக்கண்ணன்; அவன்தான் அந்த வில்லை முறித்தான் என்று நீலமாலை சொல்ல அதைக் கேட்ட சானகி, அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்னும்படி ஆகியது.
தான் உப்பரிகையில் இருந்து கண்டவனே கொண்டவனாக வரப் போகிறான் என்பதில் அவள் கொண்ட மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது. அவள் பன்மடங்கு பொலிந்த முகத்தினன் ஆயினள். நாட்டு மக்கள் இராமன் நலம் கண்டு வியந்தனர். ‘நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்” என்று பாராட்டினர்.
”சீதையும் இராமனுக்கேற்ற துணைவி” என்று அவள் மாட்சிகளைப் பேசினர். இராமன் தம்பி இலக்குவனைக் கண்டு வியந்து பேசினர்; “தம்பியை பாருங்கள்” என்று சுட்டிக் காட்டினர்; அந்த நகருக்கு இவர்களை அழைத்து வந்த அருந்தவ முனிவராகிய விசுவாமித்திரருக்கு நன்றி
நவின்றனர்.
திருமணம் உறுதி செய்யப்பட்டது. தசரதனுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது. இராமன் வில்லை முறித்த வெற்றிச் செய்தியையும், அவன் வேல் விழியாளை மணக்க இருக்கும் மங்கலச் செய்தியையும் கேட்டுத் தசரதனே பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டான்;
நாற்பெருஞ்சேனையும், அரும்பெரும் சுற்றமும், தம் அன்பு மனைவியரும், இராமன் பின்பிறந்த தம்பியரும் அறிவுடை அமைச்சர்களும், ஆன்றமைந்த சான்றோன் ஆகிய வசிட்டரும் புடைசூழ மிதிலை மாநகரை வந்து அடைந்தான்.
மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் மடமயிலை மகளாய்ப் பெற்ற மாமன்னன் சனகன் வந்து அமர்ந்தான்; கோல அழகியாகிய கோமகளை அழைத்துவரச் சேடியரை அனுப்பினான். மணக் கோலத்தில் வந்த மாணலம் மிக்க பேரழகி தந்தையின் அருகில் அமர்ந்து, அம்மண்டபத்திற்குப் பெருமை சேர்த்தாள்.
சீதையைப் பாராட்டினர் :
பொன்னின் ஒளியும், பூவின் பொலிவும், தேனின் சுவையும், சந்தனத்தின் குளிர்ச்சியும், தென்றலின் மென்மையும், நிலவின் ஒளியும் ஒருங்கு பெற்ற அவள், அன்னநடையைத் தன் நடையில் காட்டினாள்; மின்னல்போல் ஒளி வீசி அவ் அரங்கினை அலங்கரித்தாள்.
அமுதம் போன்ற இனிமையையும் குமுதம் போன்ற இதழ்களையும் உடைய அவ் ஆரணங்கு, அங்கிருந்தவர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்தாள். மாடத்தில் இருந்து தான் கண்ட மாணிக்கத்தை மறுபடியும் காணும் வாய்ப்பைப் பெற அவள் விரும்பினாள். நேரில் காண அவள் நாணம் போரிட்டது;
தலைநிமிர்த்திக் காண்பதைத் தவிர்த்துத் தன் கை வளையல்களைத் திருத்துவது போல அக் கார்வண்ணனைக் கடைக்கண்ணால் கண்டு அவன் அழகைப் பருகினாள்; மனம் உருகினாள்; தன் உள்ளத்தை ஈர்த்த அத் தூயவனே அவன் என்பதை உணர்ந்தாள்;
“ஒவியத்தில் எழுத ஒண்ணாப் பேரழகு உடைய காவிய நாயகன் இராமன்தான் அவன்” என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். “நேர்மை தவறிய இடம் இது ஒன்றுதான் என்பதை எண்ண” அவள் நாணம் அடைந்தாள். நாகரிகமாக அந்த நளினி நடந்து கொண்டதை அங்கிருந்த நங்கையர் பாராட்டினார்.
மணக்கோலத்தில் சீதையைக் கண்ட மாண்புமிக்க வசிட்டர், அங்கு சனகன் மகளைக் காணவில்லை; “திருமகள் தசரதன் மருமகள் ஆகிறாள்” என்பதை உணர்ந்தார். தாமரை மலரில் உறையும் கமலச்செல்வியே அவள்” என்று அந்த முனிவர் பாராட்டினார். தசரதன் வரப்போகும் தன் மருமகளைக் கண்டதும் ‘அவள் தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்” என்றே கருதினான்.
எத்தனையோ செல்வங்கள் பெற்றிருந்தும் அவை அவனுக்கு மன நிறைவைத் தரவில்லை; அவை செல்வமாகப் படவில்லை; அவளை மருமகளாக அடைந்ததையே அருந்தவம் என்று கருதினான்; “இதுவே திரு”என்று எண்ணினான். “திரு என்பதற்கு உரு “இது என்பதை அறிந்தான்.
அவைக்கண் வந்திருந்த நவையில் தவசிகளைச் சீதை முதற்கண் வணங்கினாள்; இராமனைப் பெற்ற பெரியோன் என்பதால் தசரதன் திருவடிகளைத் தொட்டு ஆசி பெற்றாள்; பின் தன் தந்தை சனகன் அருகில் வந்து, அவள் பக்கத்தில் இருந்தாள்; அங்குக் குழுமியிருந்த விழுமியோர் ஆகிய நகர மாந்தரும் நன்கலமாதரும் அவளைத் தெய்வம் என மதித்துப் போற்றினார்.
முனிவர் பாராட்டுரை :
ஆசானாய் வந்த விசுவாமித்திரர், பொன்னொளிர் மகளைக் கண்டதும் பொலிவுபெற்ற மனத்தினர் ஆயினர். மேனகையைக் கண்டு அவள் அழகிற்குக் குழைந்து அவர் தம் தவத்தையே பரிசாகத் தந்தவர். மேனகையைக் கண்டது காதற்பார்வை; அழகு ரசனை அவரை விடவில்லை. “நச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால், இச்சிலை கிடக்கட்டும்; ஏழுமலையாயினும் இவளுக்காக இருக்கலாம்” என்று பாராட்டினார்.
‘காதற்பெண் கடைப் பார்வையில் விண்ணையும் சாடலாம்” என்ற பாரதியின் வாசகம் இந்த மாமுனிவர் பேச்சில் வெளிப்பட்டது. நாள் தள்ளிப்போட அவர்களால் முடியவில்லை. ‘அடுத்த நாளே மணநாள் என்று முடிவு செய்யப்பட்டது. இடையிட்ட அந்த ஒர் இரவும் காதலர் இருவர்களுக்கும் ஒரு யுகமாகக் கழிந்தது. நாளும் கிழமையும் காட்டி, இளையவரைச் சேராதபடி தடுக்கும் முதியவர் செயலைச் சாடினர். மறுநாள் வருகைககாக எதிர்பார்த்து வாடினார்.
மண விழா :
வசிட்டர் தலைமையில் திருமணம் நடந்தேறியது. மணத் தவிசில் மங்கை இள நங்கை சீதையும் அடல் ஏறுபோன்ற விடலையாகிய இராமனும் இருந்த காட்சியைக் கண்டவர் மனம் குளிர்ந்தது. தன் மகளை மருமகன் கையில் சனகன் ஒப்புவித்தான்; ஆசிகள் நல்கினான்.
“நீவிர் இருவீரும் வீரனும் வாளும் போலவும், கண்ணும் இமையும் போலவும், கரும்பும் சாறும் போலவும், பூவும் மணமும் போலவும், நிலவும் வானும் போலவும், அறிவும் அறமும் போலவும் இணைந்து வாழ்வீராக” என வாழ்த்தினான். அவள் மெல்லிய கரங்களைப் பிடித்து இராமன் கைகளில் தந்து, சடங்கின்படி அவளை ஒப்புவித்தான். அவள் மலர்க் கரங்களைப் பற்றி இராமன் அன்றுமுதல் அவள் இன்னுயிர்த் துணைவன் ஆயினான்.
அந்தணர் ஆசி கூறினர்; சுமங்கலிகள் மங்கல வாழ்த்துப் பாடினர்; நகர மாந்தர் பூவும் அரிசியும் தூவி ஆசி கூறினர்; விண்ணவர் மலர்மாரி பொழிந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்; சங்குகள் முழங்கின; முழவுகள் தழங்கின; பேரரசர் பொன்மழை பொழிந்தனர்; முத்தும் மணியும் எங்கும் இறைக்கப்பட்டன; கத்தும் குழலோசை காதிற்பட்டது; மணமிக்க மலர்கள் எங்கும் மணந்தன; புலவர்கள் பாக்கள் வாழ்த்துச் செய்திகளை யாத்து அளித்தன.
வேள்வித் தீயின்முன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செம்மையாய்ச் செய்தனர்; மணத் தவிசில் இருந்து பின் எழுந்து அம்மேடையை வலம் வந்தனர்; அவள் அவனோடு ஒட்டிக் கொண்டு உறவாடிப் பின் தொடர்ந்தாள். அவள் மெல்லிய கரங்களைப் பற்றிக் கொண்டு அம் மேடையைச் சுற்றி வந்தான் இராமன்; அம்மி மிதித்து அருந்ததியை அவளுக்குக் காட்ட, அவள் வணங்கினாள்; வேதங்கள் ஒலித்தன; கீதங்கள் வாழ்த்தொலி பெருக்கின; பேதங்கள் நீங்கி இருவர் மனமும் ஒன்று பட்டன்.
வாழ்த்துப் பெற்றனர் :
மணம் முடித்துக் கொண்ட அவர்கள், பெரியோர்களை வணங்கி வாழ்த்துரைகள் பெற்றனர்; முதற்கண் கேகயன் மக கைகேயியை வணங்கினர்; பெற்ற தாயைவிடப் பாசம்மிக்க தாய் அவள் ஆதலின், அவளுக்கு முதன்மை தந்தான் இராமன்; அடுத்துப் பெற்ற தாய் கோசலையையும், தான் மதித்துப் போற்றிய சிற்றன்னையாகிய சுமத்திரையை யும் வணங்கினான்.
மாமியர் மூவரும் மருமகளை மனமார வாழ்த்தினர். அவள் பேரழகும் பெரு வனப்பும் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவள் மாமியர் மெச்சும் மருமகள் ஆயினள்; ‘வீட்டுக்கு வந்த திருமகள்’எனப் பாராட்டிப் பேசினார். ‘இராமன் கண்டெடுத்த அரிய அணிகலன் அவள்” என ஆராதித்தனர்.
தம்பியருக்கு மணம் :
இராமன் தானே தேடி அவளைக் கண்டான்; மனம்ஒத்த காதல் அவர்களைப் பிணைத்தது; “அவன் தேர்வு மெச்சத்தக்கது” என உச்சியில் வைத்துப் புகழ்ந்தனர்; ‘இவளைத் தவிர இராமனுக்கு வேறு யாரும் மனைவியாக முடியாது’ என்று அவள் தகுதியை மிகுதிப்படுத்திப் பேசினர்; ”செல்வமும் சிறப்பும் பெற்று நீடித்து வாழ்க” எனக் கோடித்து வாழ்த்தினர்.
சீதை மண்ணில் கிடைத்த மாணிக்கம்; பூமகள் தந்த புனை கோதை; அவள் சனகன் வளர்ப்பு மகள். மற்றொருத்தி பிறப்பு மகளாக அவளுக்கு வாய்த்தாள்; அவள் பெயர் ‘ஊர்மிளை’ என்பது; இலக்குவனை அவள் தன் இலக்காகக் கொண்டாள். சனகன் தம்பி மகளிர் இருவரை முறையே பரதனுக்கும் அவன் தம்பி சத்துருக்கனனுக்கும் மணம் முடித்தனர்.
மிதிலையில் பெண்தேடு படலமும், மணம் முடிக்கும் படலமும் முடிந்தன. இவற்றைப் பெரியவர்கள் முன்னிட்டுப் பின்னிட்டதால் கவிதைகளும் காவியங்களும் விவரித்துப் பேசவில்லை; சாதாரண நிகழ்ச்சிகளாய் நடந்து முடிந்தன; ஆரவாரம் இன்றி, அமைதியாய் நிகழ்ந்தன.
பெண் எடுத்த இடம் ஒரே இடமாய் இருந்ததால் அதனையே மடம் ஆகக் கொண்டு சனகன் விருந்தினராய்த் தங்கினர்; உணவும் களியாட்டமும் கொண்டனர். மன்னர் தம் சுற்றமும் படைகளின் ஆட்களும் உண்டாட்டுப் படலத்தில் உறங்கி மகிழ்ந்தனர்.
நாட்கள் சில நகர்ந்தன; வந்தவர் அனைவரும் தத்தம் நாடு நோக்கித் திரும்பினர். மிதிலை மகளின் மதிலைக் கடப்பதற்குத் துணையாக இருந்த தவ முனிவர் விசுவாமித்திரரும் தம் கடமை முடிந்துவிட்டது என்று கூறி விடை பெற்று நடைகட்டினார், வடபுலத்து இருந்த இமயம் நோக்கி; இமயமலைச் சாரல் அவர் தங்கித் தவம் செய்யும் தவப் பள்ளியாயிற்று. எல்லாம் இனிமையாய் முடிந்தன.