மிதிலையில் சானகி :
கருகிய மொட்டு ஆகாமல் ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்த இராமன், மற்றோர் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் சூழ்நிலை அவனை எதிர்நோக்கி நின்றது. காடும் மேடும் கடந்தவர் நகரச் சூழலை அடைந்தனர்; மிதிலையின் மதிலையும், அகழியையும், சோலைகளையும் கடந்து நகருக்குள் புகுந்தனர்;
அந்நகரத்துப் பெருவீதிகளையும், கடை வீதிகளையும், அரச வீதிகளையும் கடந்து கன்னி மாடம் இருந்த தெருவழியே நடந்து சென்றனர். அந்தத் தெருவில் கன்னி மாடத்து மாளிகையில் எழில்மிக்க நங்கை ஒருத்தி நின்று கொண்டு, அம் மாளிகையின் கீழே முற்றத்தில் அன்னமும் அதன் துணைப் பெடையும் அன்புடன் களித்து ஆடும் அழகைக் கண்ட வண்ணம் இருந்தாள்.
முனிவர் பின் சென்ற இராமன், மாடத்துப் புறாவைக்கண்டு வியந்தாள். பொன்னை ஒத்து ஒளி பொருந்திய மேனியும், மலர்க் கூந்தலும், கண்ணைக் கவரும் அழகும் அவனைக் கவர்ந்தன. அக்கோதையாள் சனகன் மகள் சீதை என்பது அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் அவ்விளைஞன் யார்? என்பதும் தெரியாது;
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”. மாடத்தில் இருந்தவள் அவன் நெஞ்சில் குடி புகுந்தாள். முற்றத்தில் நடந்த இளைஞன் அவள் நெஞ்சில் குடிபுகுந்து விட்டாள். அவள் அவனுக்குச் செஞ்சொற்கவி இன்பமாக விளங்கினாள்.
சந்திப்பு :
முனிவர், முன்னே நடந்தார். அவர்பின் இராமன் தொடர்ந்தான். திட்டமிட்டபடி மூவரும் சனகன் அரண்மனையை அடைந்தனர். அவன் விருந்தாளிகளாய் மூவரும் அங்குத் தங்கினர். இராமன் நெஞ்சில் சீதையைச் சுமந்து அவள் நினைவாகவே இருந்தான்; அவளும் இராமன் நினைவே நிறைந்தவளாய் இருந்தாள். புதிய வேட்கையில் அவர்கள் நெஞ்சங்கள் பதிந்து கிடந்தன.
சனகன் ஒரு பெரு வேள்வி நடத்தினான். அதில் பங்கு கொள்ள முனிவர்களும் அந்தணர்களும் வந்து சேர்ந்தனர். மாமன்னனை மறையோர்கள் வாழ்த்தினர். அரண்மனையில் அகலமான ஒரு பெரிய கூடத்தில் சனகன் வந்து அமர்ந்தான்; குழுமி இருந்த விழுமிய முனிவர்களோடு அளவளாவி அவர்கள் நல்லாசியைப் பெற்றான்.
விசுவாமித்திரரோடு வந்திருந்த அரசிளங்குமரர்களான இராம இலக்குவரை சனகன் கவனித்தான். பெண்ணைப் பெற்றவன் ஆயிற்றே அதனால், அவன் கண்கள் தன் மகளுக்குத் தக்க மணாளனைத் தேடியது. ‘முருகனைப் போன்ற அழகன் தன்மருகனாக மாட்டானா”? என்று ஏங்கினான்.
“யார் இந்தக் காளையர்? அம் முனிவரோடு ஏன் வந்தனர்?” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தான் சனகன். ஏன் அவர்களைப்பற்றி இவன் விசாரிக்க வேண்டும்? மகளைத் தருவதற்கு அவன் அடிபோடுகிறான் என்பதை அறிந்து கொண்டார் விசுவாமித்திரர்.
இராமன் குலப் பெருமையையும், அவன் நலங்களையும் விவரித்தார். ‘அவர்கள் கோசல நாட்டு மன்னன் தசரதன் அரும் புதல்வர்கள்” என்று தொடங்கி அவர்கள் தமக்காக வனத்துக்கு வந்து அரக்கர்களை விரட்டியதையும், செய்த வீரச் செயல்களையும் விளக்கமாக உரைத்தார்.
திருமணம் :
“குலமும் நலமும் பேரழகும் ஆற்றலும் மிக்க இராமன், சீதையை மணக்கத் தக்கவன்” என்று சனகன் முடிவு செய்தான். எனினும், அவளை மணக்க அவனே வைத்த தேர்வு அவனுக்குக் குறுக்கே நின்றது; மூலையில் மலைபோல் வில் ஒன்று கிடப்பது நினைவுக்கு வந்தது. ஒரு தடைக்கல் ஆக இருக்குமோ? என்று கவலையுற்றான்; அவனே சீதையைச் சுற்றி ஒரு முள்வேலியை அமைத்து விட்டான்.
அதனை அவனே எப்படி அகற்ற முடியும்? “வில்லை வளைத்தே இராமன் அவளை மணக்க வேண்டும்” என்று முடிவு செய்தான். அதற்கு முன்னர்ச் சீதையின் பிறப்பு. அவள் வளர்ப்பு இவற்றைப் பற்றி அறிவிக்க விரும்பினான். அந்த வில்லின் வரலாற்றையும் தெரிவிக்க விரும்பினான்.
அவன் குறிப்பறிந்துசெயல்படும் அவைக் களத்தில் இருந்த முனிவர் சதானந்தர், சீதை சனகனுக்குக் கிடைத்த ஆதி நிகழ்ச்சியையும், வில்லை முறிக்க வேண்டிய தேவையையும் உரைத்தார். சீதை சனகன் வளர்ப்பு மகள்; அவன் மன்னனாக இருந்தும் உழவர்களைப் போலத் தானே சென்று நிலத்தை உழுது வந்தான்.
‘அவன் கலப்பையின் கொழு முனையில் தட்டுப்பட்ட செல்வக் கொழுந்து சீதை’ என்பதைத் தெரிவித்தார். அவள் மண்மகள் தந்த அரிய செல்வம்; அவளைச் சனகன், ‘தன் மகள்’ என்றே வளர்த்து வந்தான். அவள் பேரழகைக் கண்டு அரசர் போர் எழுப்பித் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.
அவனாக விரும்பி, அவளை யாருக்கும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அமைச்சர்களுடன் கலந்து, அடுத்துச் செய்வது யாது? என்று ஆலோசித்தான்; தன்னிடம் ஒரு காலத்தில் ஒப்படைக்கப்பட்ட சிவதனுசு ஒன்று, எடுப்பார் அற்று முடங்கிக் கிடந்தது. “அந்த வில்லை எடுத்து, அதனை வளைத்து, நாண் ஏற்றி, அம்பு செலுத்தக்கூடிய ஆடவனே அவளை மணக்கத் தக்கவன்” என்று அறிவித்தான்.
கனியைப் பறிக்கக் கல் தேவைப்பட்டது. கல்லை எடுத்தால்தான் அதைக் கொண்டு கனியை வீழ்த்த முடியும். அதே நிலைமைதான் இங்கு உருவாயிற்று. ‘வில்லை வளைத்தால்தான் அவளை அடைய முடியும்’ என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
தேசத்து அரசர்கள் பலர் சீதைபால் நேசம் கொண்டு வில்லைத் தூக்கிப் பார்த்தார்கள்; அது தந்த தொல்லையைக் கண்டு தோல்வியைத் தாங்கியவராய் அவ்வேல் விழியாளை மறந்தனர். இம்முயற்சியைத் துறந்தனர்.
சீதையைத் தொடுதவதற்கு முன் இந்த வில்லின் நாணைத் தொட நேர்ந்தது. அதனால், பல்லை இழந்தவர் பலர். அந்த முல்லைக் கொடியாளை அடைய முடியாமல் துயருற்றுத் திரும்பியவர் பலர்; சீதையின் கன்னிமைக்கு அந்த வில்லின் வல்லமை காப்பாக இருந்தது.
வில் முறிவு :
சிவதனுசு சீதையைப் போலவே தக்க வீரனின் கைபடாமல் காத்துக் கிடந்தது. வில்லை முறிக்கும் விழாவைக் காண நாட்டவர் வந்து குழுமினர். “புதியவன் ஒருவன் வருகை தந்திருக்கிறான்” என்ற செய்தி எங்கும் பரவியது. ‘இந்த முற்றிய வில்லால் கன்னியும் முதிர்ந்து போக வேண்டிய நிலை ஏற்படுமோ?’ என்று பலரும் அஞ்சினர்.
‘இந்த வில்லை முறிப்பவர் முல்லைக் கொடியாளை மணக்கலாம்’ என்று முன்னுரை கூறினான் சனகன். வாய்ப்புக்காகக் காத்திருந்த வாலிபன் முனிவரைப் பார்த்தான்; அவர் இவனைப் பார்த்தார்; விழியால் குறிப்புக் காட்டி ‘அதை முறிக்க’ என அறிவிப்புச் செய்தார்.
அவன் வில்லை எடுக்கச் செல்பவனைப் போல அதை நோக்கி நடந்தான்.”இந்த வில்லை இவன் எடுப்பானா; எடுத்தால் இதை முறிப்பானா? என்று எதிர்பார்த்திருந்த, அவையோர் வைத்த விழி வாங்காமல் அவனையே பார்த்து இருந்தனர்.
“இவன் எப்படி எடுப்பான்?” எடுத்தால் வில் முறியுமா அவன் இடுப்பு முறியுமா” என்று பார்க்கக் காத்துக் கிடந்தனர். அவன் சென்ற வேகம், எடுத்த விரைவு, அதை முறித்த ஓசை எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்கு முன் தொடர் நிகழ்ச்சிகள் ஆயின. எடுத்தது கண்டவர் இற்றது கேட்டனர்.
ஓசைதான் முடிவை அவர்களுக்கு அறிவித்தது. அவன் வில்லை வளைத்ததையும், நாண் பூட்டியதையும், அவர்கள் காணவே இல்லை. முறிந்த ஓசையை மட்டும் கேட்டுச் செய்தி அறிந்தனர்.
அது வளைக்கும் போதே இரண்டாக முறிந்து விட்டது. அப்பேரொலி திக்கெட்டும் எட்டியது. சீதையின் செவிகளையும் எட்டியது. அவளுக்கு அது மணமுரசாக இரட்டியது. நீலமாலை என்னும் பெயருடைய பேரழகி அவள் தோழி சீதையிடம் செய்தி சொல்ல ஓடோடிச் சென்றாள்.