அகலிகை கதை :
இராமன் கைவண்ணத்தைத் தாடகை வதத்தில் அவன் வில் திறமையில் காண முடிந்தது. அவன் கால் வண்ணத்தைக் காணும் வாய்ப்பு இவனுக்காகக் காத்துக் கிடந்தது. அகலிகை கதை, பெண்ணின் விமோசனத்தைப் பேசும் கதையாகும்.
அது தனிப்பட்ட ஒரு தவ முனிவன் பத்தினி கதை மட்டுமன்று; “தவறு செய்துவிட்டால் அதனை வைத்து அவதூறு செய்வது கூடாது” என்ற பாடத்தையும் கற்பிப்பது.
கற்பு என்பதற்கு அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “அவர்கள் பிறர் நெஞ்சில் புகமாட்டார்கள்” என்று பேசப்படுகிறது. அவர்களுக்குக் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு இருந்தன. எப்படியோ இவள், மற்றொருவன் நெஞ்சில் புகுந்து பெறாவிட்டாள்.
ஆசை அவன் நெஞ்சில் பஞ்சினைப்போல் பற்றிக் கொண்டது. இந்திரனுக்கு ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அழகியர் பலர் இருந்தும் அவன் நெஞ்சு, இவள்பால் இளகிவிட்டது. உயர்ந்த பதவியில் இருப்பவன் உடனே தாழ்ந்து போக முடியாது; வலியப் பற்றி அவளை வம்புக்கு இழுத்து இருக்கலாம்;
அகலிகை கவுதமர் மனைவி; அவர் பார்வையில் பட்டால் எரிந்து சாம்பல் ஆக வேண்டுவதுதான்; முனிவருக்குத் தெரியாமல் தனிமையில் அவளை எப்படிச் சந்திப்பது? சாத்திரத்தில் சம்பிரதாயத்தில் உருண்டு புரண்டு எழுந்தவள். அவன் பேரழகனாய் இருக்கலாம்; செல்வச் சிறப்பில் அவன் மிதக்கலாம். மன்மதனே வந்து மயக்கினாலும் அவள் ‘சம்மதம்’ என்று சொல்ல மாட்டாள்.
கட்டுப்பாட்டில் வாழும் அவள், தன் நெறியில் தட்டுப்பாடு காட்டமாட்டாள். என் செய்வது? அவளை ஏமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மலரினும் மெல்லிய காதல் இன்பத்தை அவன் வலியப் பெற விழைந்தான். இதனைப் பெருந்திணை என்று பெரியோர் பேசுவர். இருட்டிலே அவளை மருட்டி உறவு கொள்வது’ என்று உறுதி கொண்டான்.
கவுதமர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறுவார்? பொழுது புலர்ந்தால்தான் கங்கைக்கு நீராடச் செல்வார்; அதற்கு முன் உள்ளே சென்றால் அவன் கள்ளத்தன்மை வெளிப்பட்டு விடும். பின்னிரவுப் பொழுதில் கோழி கூவுவதைப் போல இவன் குரல் கொடுத்தான்.
“பொழுது விடிந்து விட்டது என்று அவர் இறைவனைத் தொழுது வழிபட உறக்கத்தினின்று எழுந்தார். தூங்குபவளைத் தட்டி எழுப்பாமல் உறங்கட்டும் என்று அவளை விட்டுவிட்டு இவர் மட்டும் கங்கைக் கரை நோக்கி அக் கங்குற் பொழுதில் நடந்தார்.
‘எப்பொழுது இந்தத் தவமுனிவர் போவாரோ’ என்று காத்திருந்த கயவன். அம் முனிவர் வேடம் கொண்டு அவள் பக்கத்தில் சென்று படுத்தான்; கரம் தொட்டான்; வண்டு தேன் உண்ண மலர் தன் இதழ்களை விரித்தது. அவள் அவனிடம் புதியதோர் இன்பம் கண்டாள். மது உண்ட நிலையில் அவள் மயங்கிவிட்டாள்.
கங்கையில் நீராடச் சென்றவர், அவர் காலடி பட்டதும் நித்திரையில் சலனமற்று இருந்து ஆறு, ‘என்னை ஏன் எழுப்புகிறாய்?” என்று கேட்டது. தாம் விடியும் முன் வந்துவிட்டதை அறிந்து கொண்டார் முனிவர்.’கோழி கூவியது சூழ்ச்சி’ என்று தெரிந்து கொண்டார். ஞானப் பார்வையால் நடப்பது என்ன? என்பதைத் தெரிந்து கொண்டு வேகமாய் வீடு திரும்பினார்.
குடிசைக்குள் ஏற்பட்ட சலசலப்பும், முனிவர் வேகமாகச் சென்ற பரபரப்பும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டன. கலவியில் மயங்கிக் கிடந்த காரிகை விடுதல் அறியாவிருப்பில் அகப்பட்டுக் கொண்டாள். ‘அவள் ஏமாந்துவிட்டாள்’ என்று கூற முடியாது. தூண்டிலில் அகப்பட்ட மீன் ஆகிவிட்டாள்.
முனிவர் விழிகள் அணலைப் பொழிந்தன. “கல்லாகுக” என்று சொல்லாடினார்; அவனையும் எரித்து இருக்கலாம்; இந்திரன், தேவர்களின் தலைவன்; அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. “ நீ பெண் ஆகுக என்று சபித்தார். “மற்றவர் கண்களுக்கு நீ உன் சொந்த உருவில் காட்சி அளிப்பாய்; உனக்கு மட்டும் நீ பெண்ணாகத்தான் தோன்றுவாய்” என்று சாபம் இட்டார்.
இருட்டிலே நடந்தது வெளிச்சத்துக்கு வரவே இல்லை. உலகத்துக்கு அவள் ஒரு பாடமாக விளங்கினாள். கல்லாகி விட்டவளுக்குப் பாவ விமோசனமே கிடையாதா? ஆண்கள் தவறு செய்தால் மன்னிக்கப்படுகின்றனர். பெண்கள் மட்டும் ஏன் ஒறுக்கப்பட வேண்டும். நெஞ்சு உரம் கொண்டவள்தான்; என்றா லும், அவள் அவனோடு மஞ்சத்தில் மெழுகுவர்த்தியாகிவிட்டாள். அவள் காலம் காலமாகக் கல்லாகிக் கிடந்தாள்.
அந்தக்கல் இராமன் வழியில் தட்டுப்பட்டது. இராமன் திருவடி பட்டதும் அவள் உயிர் பெற்றாள். கல்லையும் காரிகையாக்கும் கலை, அவன் காலுக்கு இருந்தது. அவள் சாபவிமோசனம் பெற்றாள். ஆத்திரத்தில் முனிவர் மிகைப்பட நடந்து கொண்டார். அவரே அவளை மன்னித்து இருக்கலாம்; அத்தகைய மனநிலை அவருக்கு அப்பொழுது அமையவில்லை.
இராமனைக் கண்டதும் அவர் மனம் மாறியது; விசுவாமித்திரர் வேறு அறிவுரை கூறினார். ‘பொறுப்பது கடன்’ என்று எடுத்துக் கூறினார்; அவளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டினார். கவுதமர் மறுபடியும் தம் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினார். அகலிகையும் முனிபத்தினியாய் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தாள்;
அவள் கூந்தல் மலர் மணம் பெற்றது; கல்லைப் பெண்ணாக்கிய காகுத்தன் பெருமையைப் பாராட்டினார் விசுவாமித்திரர். “தாடகை அழிவு பெற்றாள்; அகலிகை வாழ்வு பெற்றாள்; அவன் கைவண்ணம் அங்குப் புலப்பட்டது. கால்வண்ணம் இங்கே தெரிய வந்தது”என்று விசுவாமித்திரர் பாராட்டினார். “கைவண்ணம் அங்குக்கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன்” என்பது அவர் சொல்.