அறிமுகம் :
கசப்பு சுவைமிக்க அகத்திக்கீரையின் சுவையை பெரும்பாலும் பலரும் விரும்புவதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் அளிக்க பல சுவைகளோடு கசப்பு சுவையும் கண்டிப்பாக தேவை.
அகத்தி கீரையில் வெள்ளை பூக்களை கொண்ட அகத்தியும் சிவப்பு நிற பூக்களை கொண்ட அகத்தியுமாக இரண்டு வகைகள் உண்டு.
எதற்கெல்லாம் அகத்தி பயன் தருகிறது? என்று பார்ப்போம்…..
அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது :
அகத்தி கீரையின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மாவுச்சத்து.. இரும்புச்சத்து. வைட்டமின் ஏ, வைட்ட்மின் சி சத்துகள் நிறைந்திருக்கின்றன. சித்தமருத்துவத்தில் 63 வகையான சத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அகத்தை சீராக வைத்திருக்க உதவுவதாலும் , அகத்தில் இருக்கும் தீயை உடல் உஷ்ணத்தை தணிப்பதாலும் இவை அகத்தி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
நுரையீரலை பாதுகாக்கும் :
புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புகைப்பிடிக்கும் போது புகையில் இருக்கும் நிகோடினை உடல் உறிஞ்சும். இவை சுவாசக்குழாய் வழியாக கிரகிக்கப்பட்டு மூச்சுகுழாயில் பயணித்து நுரையீரலில் தங்கி விடும்.
இவை நுரையீரலில் இருந்து பாதிப்பை உண்டாக்கும் . இந்த நிகோடின் நச்சை வெளியேற்ற உதவும் சிறப்பு அகத்திக்கீரைக்கு உண்டு.
வயிற்று புண் :
வயிற்றில் உண்டாகும் புண் நாளடைவில் அல்சர் பிரச்சனையை உண்டாக்கிவிடும். உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடலின் உட்சுவரில் உண்டாகும் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது அகத்திகீரை.
இவை மலக்குடலையும் சுத்தம் செய்து மலத்தை இளக்கி வெளியேற்றூம். சிறுநீர் கடுப்பு பிரச்சனையையும் சரிசெய்யும். உடல் உஷ்ணத்தால் உண்டாகும் வயிற்று புண்களையும் ஆற்றும்.
இரத்த ஓட்டம் சீராக்கும் :
முன்னோர்கள் உணவை மருந்தாக்கி சாப்பிட்டார்கள். விரத நாட்களின் போது முன்னோர்கள் விரதத்தை முடிக்கும் போது அகத்திக்கீரையை சாப்பிடுவார்கள்.
உணவு இல்லாமல் இருக்கும் உடல் சோர்வுக்கு அதிக பலத்தை கொடுப்பதோடு உடல் உஷ்ணத்தையும் தருகிறது. உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.
சருமத்துக்கும் சைனஸுக்கும் உதவும் :
அகத்திக்கீரையை அதிகம் சாப்பிட்டால் சருமபிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
ஆனால் படர் தாமரை பிரச்சனை இருப்பவர்கள் அகத்திகீரை சாறை தடவி வந்தால் படர்தாமரை நாள்பட்டிருந்தாலும் குணமாகும்.
தலைவலி இருப்பவர்கள் சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தலையில் நீர் கோர்வை பிரச்சனை இருப்பவர்கள் அகத்திகீரை சாறை தடவலாம்.
நோய்களை தடுக்கும் :
அகத்திக்கீரையில் இருக்கும் வெள்ளை பூக்களை தனியாக சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வையுங்கள். வயிறு வலி, வயிறு எரிச்சல் இருக்கும் போது கால் டம்ளர் நீரில் கால் டீஸ்பூன் பொடியை சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
சிறுநீரக கடுப்பு, சிறுநீரக எரிச்சல், இதய நோய் அனைத்தையும் தடுக்கும் வல்லமை அகத்திக்கீரைக்கு உண்டு.
வயதானவர்களுக்கு :
இதில் வைட்டமின்- சி உள்ளதால் , நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் தேவை என்றாலும் முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் .
எனவே அவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்திக் கொள்ள முடியும் .
பெண்களுக்கு :
அகத்தி கீரையில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால் இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால் பால் சுரப்பி தூண்டப்பட்டு அதிக அளவில் பால் சுரக்கும்.
சிறுவர்களுக்கு :
உடல் வள்ர்ச்சிக்கு தேவையான புரதம் இதனுள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் .
மேலும் இதில் சுண்ணாம்பு சத்தும் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
செரிமானத்தை சீராக்கும் அகத்தி :
இதில் நார்சத்து உள்ள காரணத்தினால் செரிமானத்தை சீராக்கும் ஆற்றலை பெற்றது. உடலில் செரிமானம் சரியாக இருப்பின் கழிவுகள் முறையாக வெளியற்றப்டுவதுடன் பசியையும் முறையாக தூண்டும்.
கண்களை குளிர்ச்சியாக்கும் அகத்தி :
இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும்.
இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.
உடல் உஷ்ணத்தை போக்கும் அகத்தி :
இன்று பலருக்கு வெளியில் சென்று வேலை செய்யும் காரணத்தினால் உடல் உஷ்ணமாக இருக்கும்.
அகத்தியானது உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு , உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய குடல்புண் , வாய்ப்புண் போன்ற வற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
இரத்த அழுத்தத்திற்கு :
இளம் பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இரத்த அழுத்த நோய் பரவலாக காணப்படுகிறது.
அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும்.
தோல் நோய்களுக்கு :
அகத்தியுடன் தேங்காய் மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளான சொறி, சிரங்கு, தேமல் போன்றவை முற்றிலும் குணமாகும்.
அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள் , அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்.
அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியத்தோடு வாழுங்கள் :
அதிக சத்துக்களை அகத்தி பெற்று இருந்தாலும் , அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றபடி இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
அதிகமாக எடுத்து கொண்டால் இரத்தம் கெட்டு போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கீரையை மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது. ஏனெனில் பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும்.
வாயு கோளாறுகள் உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது. ஆகவே, அளவோடு சாப்பிட்டு வளமுடன் வாழ அகத்தியை பயன்படுத்துவோம்.