அறிமுகம் :
உங்கள் உணவுகளில் சிறிது காரத்தை அதிகரிக்க விரும்பினால், அதற்கு பச்சை மிளகாய் சரியான பொருளாக இருக்கும். சமைக்கும் போது பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உடல் எடை :
பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் தான் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இதன் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன.
இதய ஆரோக்கியம் :
பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறையும்.
சளி, ஜலதோஷம் நீங்கும் :
பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது சவ்வுகளிடையே இரத்த ஓட்டத்தைத் தூண்டி, உடலில் உற்பத்தியாகும் சளியை இளகச் செய்கிறது. சிம்பிளாக கூற வேண்டுமானால், பச்சை மிளகாய் சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுக்களை அழிக்க உதவி, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம். இருப்பினும், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது பச்சை மிளகாயை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது.