• Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Facebook Twitter Instagram
Tamilanwiki.ComTamilanwiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Home»Stories»The Story Of Bhagirathan

The Story Of Bhagirathan

WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email
அரக்கருடன் போர் :

‘தாடகை பட்டதும் அந்த அதிர்ச்சிமிக்க செய்தி அரக்கர்களைச் சுட்டது; அது காடு முழுவதும் எட்டி எதிர் ஒலித்தது. அவள் மாரீசன் சுபாகு என்பவனின் தாய்; அரக்கர்களின் தலைவி; அக்கிரமங்களின் உறைவிடம்; “அவள் வீழ்ந்தாள்” என்றதும் அரக்கர்கள் துயரில் ஆழ்ந்தனர்; கொதித்தனர்; திக்கெட்டும் முரசுகள் அதிர்த்தனர்; வான் எங்கும் குழுமினர்; அவர்கள் கொக்கரித்து இடிமுழக்கம் இட்டனர்.

வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் இவ்வரக்கர்கள் ஒருங்கு திரண்டனர்; ‘தலைவியை வீழ்த்திய அந்தத் தறுகணாளர்களை அழிப்பது” என்று உறுதி கொண்டனர்; வேள்விப் புகை கிளம்பியது; அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்; “இந்த முனிவர்களுக்கு என்ன துணிச்சல்?” அதை நினைத்து அவர்களுக்கு ஓரே எரிச்சல்.

மாமிசத் துண்டங்களை அந்த வேள்விக் குண்டங்களை நோக்கி வீசினர்; குருதிப் புனலை அக்குழிகளில் கொட்டி நெருப்பை அவிப்பதில் உறுதியாய் இருந்தனர். யாக மேடையைக் களப்பலி மேடை போலப் புலால் நாற்றம் வீசச் செய்தனர். கைவில்லை ஏந்தி நாண் ஏற்றி, அவர்கள் மீது அம்பு செலுத்தித் தொல்லைப்படுத்தினர். படைக்கலங்களை வீசி, அவர்கள் நெய்க்குடங்களை உடைத்தனர்.

விண்ணில் இருந்து அவர்கள், இவற்றை வீசுவது இராமன் கண்ணில்பட்டது. ‘அவ்வரக்கர்களைச் சுட்டிக் காட்டி இரக்கம் சிறிதும் காட்டாமல் வீழ்த்துக” என்று இலக்குவனுக்கு அறிவித்தான். இலக்குவன் அவர்கள்மீது அம்பு செலுத்தி, அலறவைத்தான். இராமன் சரக்கூடம் அமைத்து, வேள்விச் சாலையை அவர்கள் தாக்குதலினின்று தடுத்துக்காத்தருளினான்.

அரக்கர்களின் ஆரவாரத்தைக் கண்டு, அருந்தவமுனிவர் அஞ்சி, இராமனை அணுகி முறையிட்டனர். “அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள்வதாக அபயம் அளித்தான்; “அஞ்சற்க” என்று கூறி அரக்கர்களைத் துஞ்சவைத்தற்கு அம்புகளைச் செலுத்தினான். எதிர்க்க வந்த மாரீசன் அதிர்ச்சி அடைந்து, உயிர் தப்பி ஓடிவிட்டான். சுபாகு என்பவன் மரணப் பிடியில் அகப்பட்டு அதிலிருந்த தப்ப முடியாமல் மடிந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

“அரக்கர் தலைவர் இருவரும் களம்விட்டு மறையவே, மற்றவர் எதிர்த்துப் பயனில்லை என்பதால் உயிர்மேல் விருப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஒட்டம் பிடித்தனர். செத்தவர் சிலர்; சிதைந்தவர் பலர் ஆயினர். அரக்கர்களின் கூட்டு எதிர்ப்பு வரட்டுக் கூச்சலாய் எழுந்து,ஓங்கி, அடங்கிவிட்டது. விசுவாமித்திரர் தம் யாகவேள்வியை இனிது முடித்து மன நிறைவு கண்டார்.

மற்றைய முனிவர்களும் பனிப்படலம் நீங்கியது போல மன ஆறுதல் பெற்றுத் தத்தம் வேள்விப் பணிகளைச் செய்து முடித்தனர். அரக்கர்களின் அரட்டலும் மருட்டலும் அதோடு முடிந்தன. இராமன் விசுவாமித்திரருக்குத் துணையாய் இருந்து அவர் இட்ட பணிகளை இனிது முடித்துத் தந்து, அவர்தம் நன்மதிப்பைப் பெற்றான்.

மிதிலை ஏகல் :

கடமையை முடித்துக் கவலை நீங்கி இருந்தனர். ‘அடுத்துச் செய்யத்தக்கது யாது?’ என்று முனிவன் கட்டளையை எதிர்நோக்கி நின்றனர். “அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் நயனம் வினவியது.”சனகன் என்ற பெயருடைய மாமன்னன் ஒரு பெருவேள்வி நடத்த இருக்கிறான்; வேள்வி காண அவன் ஊராகிய மிதிலைக்குச் செல்கிறோம். அங்கு உனக்கு ஒருவீர விளையாட்டுக் காத்துக் கிடக்கிறது”.

“மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி,உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஓர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன”என்று கூறினார். எடுத்த கருமம் முடித்துக் கொடுத்தமையின் அவனைச் ‘சான்றோன்” என்று உலகம் புகழ்ந்தது.

முனிவர்கள் அவன் ஆற்றிய பணியையும், அதனால், தாம் அடைந்த பயனையும் சொல்லிப் பாராட்டி நன்றி நவின்றனர். ”இவனை மாவீரன் என்று கேட்கும் தசரதன் உவகை உறுவது உறுதி” என்றனர். அங்கே அந்த வனத்தில் வாழும் முனிவர் வாயிலாய் அவன் முன்னோர்களின் வரலாறுகளைக் கேட்டு மகிழ்வும் பெருமையும் கொண்டனர்.

முந்தையோர் வீரச்செயல்களைக் கேட்கும் தோறும் அவர்கள் நெஞ்சம் இறும்பூது எய்தியது. தேன் மழையில் தாம் நனைவது போல அக்கதைகள் அவர்களுக்கு இனித்தன. தாய் பாடும் தாலாட்டுப் போல அவர்கள் நெஞ்சில் பதிந்தன; அவர்களுக்கு ஊக்கம் அளித்தன.

பகீரதன் கதை :

விசுவாமித்திரர்பால் கேட்ட கதைகளுள் பகீரதன் கதையும் ஒன்றாகும். “கங்கை நதிக்குப் பாகீரதி என்ற பெயர் வரக் காரணம் யாது” என்று முனிவரைக் கேட்டு அறிந்தனர். பகீரதனின் முயற்சியால் வான் உலகில் பாய்ந்து கிடந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வந்தமையால் அதற்குப் ‘பாகீரதி’ என்ற பெயர் உண்டாயிற்று என்று விளக்கம் தந்தார்.

“மலையரசனாகிய பருவதராசனுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர்; இவர்களின் தாய் பெயர் “மனோரமை”. மூத்தவள் ‘கங்கை’; இளையவள் ‘பார்வதி’; சிவனார் பார்வதியை இடப்பக்கத்தில் வைத்துச் சரிபாதி இடம் கொடுத்தார். பெண்ணுக்குச் சரி உரிமை தந்த முதற்கடவுள் சிவனார்; சக்தியும் சிவனுமாய் அவர்களை மாந்தர் வழிபடுகின்றனர்.

கங்கை வானவர்க்கு அமுதமாக விளங்கிப் பரலோகவாசியாய் இருந்தாள். அவள் தேவர்களுக்கு நீராடும் புனலாக நிலவினாள். ‘சகரன்’ என்ற பெயருடன் சூரிய குலத்து அரசன் ஒருவன், தன் புகழை எட்டுத்திக்கும் பரப்பி, ஏற்றமுடன் ஆட்சி செய்து வந்தான்.

தன்னிகரில்லாத வேந்தனாய் அவன் விளங்கினான்; தன் மாட்சியை உலகுக்கு அறிவிக்க அக்கால வழக்கப்படி அசுவமேத யாகம் ஒன்று நடத்தினான். அவன் அனுப்பி வைத்த குதிரை எட்டுத்திக்கும் சென்றும் அடக்குவார் இன்றிப் பாதாளஉலகம் சென்றது.

அங்குத் தவத்திற் சிறந்த முனிவர் ‘கபிலர்’ என்பார். அதைக் கட்டி வைத்தார். அது மேலே எழும்பி வாராமல் அங்கே அகப்பட்டுக் கொண்டது. சனகனின் புதல்வர் பதினாறாயிரவர் மண்ணைத் தோண்டி அந்த இடத்தைக் கண்டு பிடித்தனர்.

சகரர் தோண்டிய இடம் கடலாக ஆனமையின் அதற்குச் சாகரம் என்ற பெயரும் வழங்குகிறது. வேல் ஏந்திய மன்னரை எதிர்க்கச் சென்றவர், நூல் அணிந்த மார்பன் ஆகிய முனிவரைச் சந்தித்தனர்; நொய்ந்த அவர் உடம்பைக்கண்டு அவர் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டனர்.

அனுமதிகேட்டு கட்டு அவிழ்க்க வேண்டியவர் அவரசப்பட்டுக் குதிரையை மீட்டனர்; அதற்குக் கிடைத்த வெகுமதி அவர் இட்ட சாபம்; வந்தவர் அனைவரும் சாபத்தால் வெந்து சாம்பல் ஆயினர்.

பிற்காலத்தில் சகரனின் சந்ததியார்களுள் ஒருவனான பகீரதன் என்பான் முந்தையோர் கதை களைக் கேட்டு வேதனை அடைந்தான். ஈமக்கடனும் செய்ய முடியாமையால் அவர்கள் நாமமும் மறைந்து சாம்பலாய் மாறி அவர்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது.

அவர்கள் சாம்பலை ஒருங்கு திரட்டிப் புண்ணிய நதியின் தீர்த்தத்தை அவற்றின் மீது தெளித்து, அவர்கள் வானுலகு நண்ண அவன் முயற்சி எடுத்துக் கொண்டான். “கங்கைநீர்தான் புனிதம் மிக்கது” என்று சாத்திரம் அறிந்தவர் சாற்றினர்; ஆனால், அது மண்ணுலகில் பாய்வதில்லை; விண்ணவரின் உடைமையாக இருக்கிறது என்பதைப் பகீரதன் அறிந்தான்.

“செத்தவர்களுக்குச் சிவலோகம் தருவதற்கு மட்டுமன்றிப் பாரத நாட்டுக்கு வளமும் வாழ்வும் தர, அந்நதி தேவை” என்பதைச் சிந்தித்து உணர்ந்தான். ‘மேலவர் என்று சொல்லும் தேவர்கள் தம் உடைமை என்று மதித்த அந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வர முடிவு செய்தான்.

படைப்புகளுக்கு எல்லாம் காரணம் பிரமன் என்பதால் அவனை அணுகினான்; பிரமன் சகல சாத்திரங்களையும் அறிந்தவன்; அவன் சட்ட நுணுக்கங்களை உணர்ந்தவன்; நதியை எந்த ஒரு மாநிலமும் உரிமைகொள்ள முடியாது.

அது பாயும் இடம் எல்லாம் அதற்கு வழிவிட வேண்டும் என்பதை அறிந்தவனாய் இருந்தான். கங்கை நதி, மேலிடத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு மட்டும் நீராடவும், விளையாடவும் பயன்பட்டு வந்தது. பிரமன் அதனை நோக்கி, ‘நீ மானுடர்க்கும் பயன்படுக; மண்ணுலகில் மாந்தர் உம்மை எதிர்பார்க்கின்றனர்; சற்றுக் கீழேயும் பார்’ என்று ஆணையிட்டான்.

நிலைகுலைந்து பொங்கிய அலைகளுடன் கங்கை மண்நோக்கிப் பாய்ந்தது. “அணைக்கட்டுக்களைச் சரியாய் அமைக்காத நிலத்தவர் எப்படித் தக்கபடி பயன்படுத்த இயலும்? ஒருகை பார்த்துவிடுவது” என்று வேகமாய்ப் பாய்ந்தது. இந்த மண்ணுலகம் அதனைத் தாங்காது என்பதை அறிந்த தேவர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்;

‘மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும் என்பது உலகு அறிந்த ஒன்று; சில பகுதிகளில் மழையே பெய்வது இல்லை; அங்கே பசியும் பஞ்சமும் விஞ்சி நிற்கின்றன. சில இடங்களில் மழை மிகுதியாய்ப் பெய்து வெள்ளப் பெருக்கை விளைவித்து, ஊர்களை அழித்து விடுகிறது.

அழிக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டும் இல்லை; நீருக்கும் உண்டு; “அதனை அடக்கி வேகத்தைக் குறைத்துப் பூமிக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தம் சடையை விரித்து, அதன் வழியை மறைத்தார். பெட்டிப் பாம்பு போல அந்த நதி அவர் சடையில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது; ஒரு சொட்டு நீர்கூடப் பூமியில் விழவில்லை. என் செய்வது? பகீரதன் முயற்சி வெற்றிபெறவில்லை; பிரமனிடம் கேட்டுப் பெற்ற வரம் செயல்பட்டும் அது பாதி வழியில் தடைப்பட்டு விட்டது.

பரமசிவனை அண்டிக் “கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அவர், தம் விரிசடையால் அதன் வேகத்தைத் தடுத்து, மெதுவாய்த் தம் தலைமுடியில் இருந்து தரையில் விழுமாறு அனுப்பினார். “மங்கையை பாகத்தில் வைத்த பரமன், கங்கைக்குத் தன் சிரசை இடமாகக் கொடுத்தான்” என்று உலகம் பாராட்டியது.

எடுத்த முயற்சிக்கு மற்றோர் இடையூறு அடுத்தது; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டி வைத்தால், அவள் முரண்டு பீடிப்பதைப் போலக் கங்கையும், வேகம் தணியாமல் ஆணவத்தோடு பாய, உலகுக்கு அழிவு நேர இருந்தது. முரட்டுக்காளை எதையும் முட்டித் தள்ளுவது போலச் சந்து முனிவர் அமைத்துவைத்த யாக வேள்வியைக் குலைத்து அழித்தது.

இதைக் கண்டு கோபம் கொண்ட அம் முனிவர் விழுந்த நீர் முழுவதையும் வாய்வைத்துக் குடித்து வயிற்றில் அடக்கி வைத்தார். முடக்கி விட்ட நீரால் பகீரதன் முயற்சியும் அடக்கி வைக்கப்பட்டது. பகீரதன் அம்முனிவரை அடைந்து அதை வெளியே விடுக” என்று கேட்டுக் கொள்ள, அவர் நீரைச் செவி வழியாய் வெளியே விட்டார்.

அது கடலில் சேர்ந்து, அதன் அடியில் பாதளத்தில் பாய்ந்து, எரிந்தவரின் சாம்பலைப் புனிதப்படுத்தியது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்தது. அவர்கள் உயிர் துறக்கத்தை அடைந்தது. உலகம் நன்மை பெற்றது.

முந்தையோர் பெருமைகளைக் கூறிக்கொண்டு வந்த விசுவாமித்திரர், அவற்றுள் ஒன்றாக இந்தப் பகீரதனின் கதையையும் கூறினார். இக் கதைகளைச் சொல்லி அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் மிதிலை நோக்கிப் புறப்பட்டனர்.

bhagiratha hindu history kambaramayanam mythological stories story
Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Email
Previous ArticleThadagai Visit – Palakandam
Next Article Akalikai Story in Tamil

Related Posts

Raman Meets Jatayu in Tamil

Hindu History Kamba Ramayanam Stories

Bharata’s Meeting With Kugan in Tamil

Hindu History Kamba Ramayanam Stories

Arrival Of Bharatan in Tamil

Hindu History Kamba Ramayanam Stories

Rama, Seetha And Lakshmana Going To The Forest in Tamil

Hindu History Kamba Ramayanam Stories
Translate
Advertisment
Categories
  • Beauty (75)
  • Benefits (186)
    • Cereals (37)
    • Drinks (37)
    • Fruits (56)
    • Juice (57)
    • Leaves (39)
    • Plants (21)
    • Vegitables (37)
    • Yam (7)
  • Cooking (82)
    • Briyani (5)
    • Chicken (1)
    • Food (39)
    • Mutton (1)
    • Non Veg (2)
    • Veg (21)
  • Drawings (2)
    • Pencil Drawing (1)
    • Watercolor Painting (1)
  • Health (186)
  • History (2)
  • Natural (208)
  • Places (48)
    • Beach (12)
    • Boat Ride (11)
    • Church (23)
    • Falls (17)
    • Hills (11)
    • Islands (10)
    • Market (14)
    • Swimming (10)
    • Temple (36)
    • Tourist (39)
  • Stories (19)
    • Hindu (19)
    • History (19)
    • Kamba Ramayanam (19)
  • Uncategorized (90)
Facebook Twitter Instagram Pinterest Vimeo YouTube
  • Home
  • Benefits
  • Health
  • Natural
  • Beauty
© 2023 TamilanWiki.Com. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.