அறிமுகம் :
செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா, இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.

உயிரியல் வகைப்பாடு :
உயிரியல் வகைப்பாடு:
திணை : தாவரம்
தரப்படுத்தப்படாத : பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத : இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத : ரோசிதுகள்
வரிசை : மால்வேல்ஸ்
குடும்பம் : மால்வேசியே
பேரினம் : ஹைபிஸ்கஸ்
இனம் : ரோசா-சினென்ஸிஸ்
இருசொற் பெயரீடு
ஹைபிஸ்கஸ் ரோசா-சினென்ஸிஸ்

செம்பருத்தியின் பயன்கள் :
இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.
இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.
காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.
ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

செம்பருத்தியின் மருத்துவக் குணங்கள் :
செம்பருத்தி பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருஉருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்) மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்) வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்)